ஜனவரி 04, 2022
ராம ராம ராம சீதா ராம ராம ராம் என்று ஒரு மாமி இழுத்து இழுத்துப் பாடிக் கொண்டிருந்தாள். மல்லி முல்லை ரோஜா மாலைகளின் மணம் எதுக்களிக்க அப்பாம்மை கால் நீட்டி கூடத்தில் சவமாய்ப் படுத்திருந்தாள். பின் தெருவிலும் ஒரு இளவட்ட பயல் ஆஸ்துமாவால் அதே நாள் இறந்து போயிருந்தான். அவன் சாவுக்கு வந்த பலர்,இந்த வீட்டின் முன் இருந்த ஷாமியானாவைப் பார்த்து,எங்கள் வீட்டுக்கு மாரில் அடித்துக் கொண்டு வந்து, மடிசார் கட்டிக் கொண்டு அமைதியாக படுத்துக் கிடக்கும் கிழவியைப் பார்த்தவுடன் ‘என்னடி கெரகமிது’ என்று விழித்துவிட்டு, நான் விளக்கி வழி சொன்னவுடன் விறுவிறுவென்று திரும்பி வாசல் தாண்டி மறுபடி நெஞ்சிலடித்துக் கொண்டு ஓடினர்.
பத்து பெண்கள், மூன்று ஆண்கள் என்று சோடை போகாத பதிமூன்றை கனஜோராகப் பெற்றுப் போட்டு வாழ்வாங்கு குடும்பம் நடத்தி கண்ணை மூடியிருக்கிறாள். என் மாமனார் முதல் பிள்ளை என்பதால் அவரோடுதான் கடைசி வரை ஜாகை. “என் பேரனுக்கு என்னவாக்கும் கொண்டு வந்தாய்?” என்று மலையாளம் சுழைக்க அவள் கேட்ட கேள்விதான் என்னிடம் அவள் கேட்ட முதல் கேள்வி. “தோ, நானே வந்திருக்கேனே, போறாதா பாட்டி” என்றேன். “ஓ! பாட்டி என்னவாம் பாட்டி, அப்பாமைன்னு கூப்பிடு. நம்மாத்துல அது வழக்கமில்ல, கேட்டயா?”
“அது என்ன ஆப்பமாவுங்கற மாதிரி ஒரு வார்த்தை?” என்று இவரிடம் கிசுகிசுத்தால்,
“விடேன். இது ஒரு பிரச்சினையா?”
ஏதேனும் சேர்ந்தாற் போல நான்கு நாட்கள் விடுமுறை வந்தால் மாமனார் வீட்டில் என்னைக் குழந்தையோடு இறக்கி விட்டு விடுவார்.
காதில் எட்டுக்கல் வைரத்தோடு, வைர மூக்குத்தி டாலடிக்க,லாலீ பீலீ என்றில்லாமல் அம்பாளுக்குக் கட்டின மாதிரி அம்சமாக தழையத் தழைய கட்டியிருப்பாள் மடிசார்ப் புடவையை.
“எப்படி இப்படிக் கட்டிக்கறேள் அப்பாம்மை?”
ஓரு புன்சிரிப்புடன் மென்குரலில் “நேக்கு பதினொரு வயசுல கல்யாணம். இத்தர வருஷத்துல இதுகூடத் தெரியலைனா எப்படிடீ கோந்தே?” என்று கடந்து போவாள். அவர் அதிர்ந்து பேசிக் கேட்டதேயில்லை. எனக்கென்னவோ அப்பாம்மையைப் பார்த்தால் அந்தக் காலத்து சினிமாவில் வரும் பெண் தெய்வங்கள் ஞாபகத்துக்கு வருவார்கள். அந்தப் பதவிசு, அந்த நளினம், அந்தப் புன்சிரிப்பு… எப்படி இவளால் இப்படி இருக்க முடிகிறது என்ற வியப்பு…
என் வீடு நேர்எதிர். அத்தனையுமே கோரோஜனை முழுங்கிய உருப்படிகள். “ஏய் திம்ரு சீதா, திம்மு திம்முன்னு நடக்காத, ஒரு பய வரமாட்டான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க” என்று என் பாட்டி கத்துவாள். “உன்னக் கல்யாணம் பண்ணிண்டாரே தாத்தா, அதே போல ஒரு மஹானுபாவர் எனக்கும் எங்கயானும் பொறந்திருப்பார்”என்று நான் பதிலுக்கு அடுத்த அறையிலிருந்து கத்துவேன்.
காலையில் மாலையில் என்று இரு வேளை குளித்து அழகாக புடவை கட்டிக் கொண்டு, கண்ணாடியில் பார்த்து பவுடர் பூசி, தலையை வாரி கொண்டையிட்டுக் கொண்டு அப்படியும் இப்படியும் பார்த்து பளிச்சென்று தான் இருக்கிறோம் என்று திருப்தி வந்த பின்னரே அறையைவிட்டு வெளியே மிதந்து வருவாள். நான் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பேன்.
“இதிலெல்லாம் ஒண்ணும் குறைச்சலில்லை உங்க அப்பாமைக்கு” என்று என் மாமியார் தோளை இடிப்பாள். என் மாமியார் என்று வந்துவிட்டால் அப்பாமைக்கு சிறிது தீசல் புத்தி இருந்தது என்னவோ உண்மைதான். தோசையில் நிறைய எண்ணெய் விட்டு வார்த்திருக்க வேண்டும். உப்புமாவில் நெய் மிதக்க வேண்டும். சாப்பிட உட்கார்ந்தவுடன் கையால் அளைந்துவிட்டு பிடிக்கவில்லையென்றால் நான்கு நாட்களாக டப்பாவில் இருக்கும் முட்டைக்கோஸ் பொரியலை அவள் மூக்கின் முன் நீட்டியதுபோல் சுளித்துக் கொண்டே சாப்பிடுவாள். “அம்மா, நன்னாயில்லையா? உங்களுக்கு வேற பண்ணித் தரட்டுமா?” என்று கேட்கும் என் மாமியாருக்கு பதில் சொல்ல மாட்டாள். இந்த மாதிரி சமயங்களில்தான் அவள் மேல் கோபம் கோபமாக வரும்.
“இப்பவே இப்படி இருக்காளே, நான் கல்யாணமாகி வந்தப்போ தாத்தா இருந்தார். கொண்டையைச் சுத்திப் பூ இல்லாமல் கிழவியைப் பார்க்கவே முடியாது. அதே போல மருதாணி. இப்போ கூட பூவும் பொட்டும்தான் இல்லையே தவிர மருதாணி வச்சாகறதே. ஆம்படையான் போன பிறகு எங்காத்துல யாரும் மருதாணி வச்சுண்டு இவ்வளவு வளையல் எல்லாம் அடுக்கிண்டு இருக்க மாட்டா” என்று என் மாமியார் நொடிப்பாள் தன் பிறந்த வீடு சொர்க்கலோகமாக்கும் என்று ஸ்தாபித்தபடி.
“இப்பவும் பாரு கதவை மூடிகிண்டு அலங்கார அழிச்சாட்டியம் நடந்தாறது. அவளோட ஆலிலை வயித்தை ஆரும் பார்த்துடக் கூடாது பாரு” என்று பொருமும் என் மாமியார் சபை நிறைந்து இருப்பாள். அப்பாம்மையோ அவள் சொல்வதுபோல் சிலுவானமாக இருப்பாள்.
“ஆனா அப்பாம்மை செமயா உடம்ப மெயிண்டைன் பண்ணிருக்கா அம்மா” என்று நான் சொன்னால் போதும் பொசபொசவென்று வரும் என் மாமியாருக்கு “ஆமாண்டி, அவருக்கென்ன, சஞ்சித, ஆகாமி, ப்ராரப்த கர்மாக்கள் எல்லாம் நன்னாருக்கு” என்று அவர் தவம் போல் உடம்பைப் பார்த்துக் கொள்ளும் காரியங்களுக்கு கர்மாக்களை கைகாட்டி விடுவார்.
“ஆ அம்ம்மா, எழுந்து வா, எழுந்து வா” என்று சின்ன அத்தை அலப்பறை செய்து கொண்டிருந்தாள். கடைசி சித்தப்பாவைத் தவிர அனைவரும் இருந்தார்கள். அவரின் வரவுக்காக காத்திருந்தோம். “சனிப் பொணம் தனியாப் போகாதுன்னு சொல்றாப்போல பின்வீட்டுக் குழந்தையையும் கூட்டிண்டு போயிட்டேளே” என்று அரற்றி என் மாமியார் இத்தனை வருட காயங்களுக்கு கொஞ்சம் மருந்து போட்டுக் கொள்ள, அத்தைகள் அனைவரின் சுடு பார்வையையும் ஒரே சமயத்தில் வாங்கிக் கொண்டாள். “ஆ…எங்கம்மாவோட பெரும எல்லாருக்குமா தெரியறது, அந்தப் புள்ளைக்குத் தெரிஞ்சிருக்கு. கூட்டிண்டு போயிடுத்து” என்று பெரியத்தை கத்தி வீசினாள். ”
“கோந்தே, உங்காத்துல எச்சப் பண்ணி சாப்பிடப்படாதுன்னு பெரியவா சொல்லித் தரலியா?” என்று கடித்துக் கடித்து ஆனந்தமாக கடலை உருண்டை சாப்பிட்டுக் கொண்டிருந்த என் முன்னால் அப்பாம்மை புன்சிரிப்புடன். “அது வந்து…பின்ன எப்படி சாப்பிடறது அப்பாம்மை?”
என் வீடு எதிலும் சேர்த்தியில்லை. என் பாட்டி மடிசார் கட்டிக்கொண்டு பால்கார கவிதா வீட்டின் திண்ணையில் காலை நீட்டிக் கொண்டு கண்டாங்கி சேலை கட்டிய தன் தோழி கவிதாவின் பாட்டியோடு பேசுவதைக் கேட்க வேண்டுமே.
“கவிதா தங்கம், கொஞ்சம் கோணப்புளியங்கா தட்டிக் குடு. மாமிக்குப் பிடிக்கும்.” – கவிதாவின் பாட்டி
“ஆமா புள்ள. ரொம்ப நாளாச்சு. ஏனுங்க கவிதா பாட்டி, இந்தப் பக்கம் தடம் இருக்குதுங்களா?” – என் பாட்டி. என் பாட்டியைப் பார்க்காமல் அவள் பேசுவதை மட்டும் கேட்டால் அச்சு அசல் கொங்குநாட்டு கண்டாங்கி சேலைப் பாட்டி பேசுவதைப் போலவே இருக்கும்.
அநாவசியமாக ஏன் என் குடும்பத்தை அவர்கள் வாயில் கொண்டு போட வேண்டும் என்பதற்காக அன்றிலிருந்து அப்பாம்மை முன் கடித்துச் சாப்பிடும் எந்த ஒரு பதார்த்தத்தையும் ஆசை இருந்தாலும் சாப்பிடுவதில்லை.
ஒரு வழியாக சித்தப்பா வந்து சேர்ந்தார். “ஆம்பிளைகள் எல்லாரும் வெளியே போங்கோ, மாமி நீங்க குளிப்பாட்டி வேற துணி மாத்தறதா இருந்தா மாத்திக் கொண்டு வாங்கோ” என்று காரியம் செய்யும் வாத்தியார் சொல்ல, ஆண்கள் அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.
மகள்கள், பேத்திகள், மருமகள்கள் என்று அந்த ஹாலில் குழுமியிருக்க, பெரியத்தை விறுவிறுவென்று அப்பாம்மையின் புடவையை உருவினாள். எனக்கு முகம் மாறிற்று, சிவந்தது. விழிகளில் அத்தனை நேரம் வராத கண்ணீர் உறுத்திற்று. “அத்தை, போறும். அப்பாமையோட முழங்காலைக் கூட நாம பார்த்தில்லை. அவள் அவ்வளவு நாசூக்கு. டிக்னிஃபைடா அவள் போய்ச் சேரட்டும்.”
என் மாமியார் சற்று எரிச்சலுடன் என்னைப் பார்த்தார். “வழிவழியா வரதுதான். நடுவுல நீ பூந்து நாட்டாம பண்ணாத. என்னமோ எங்களுக்கு ஆசையாட்டம்.”
ஆனால் ஆசையுடன் சிறிது வன்மமும் இருந்தது போலத்தான் தோன்றியது. அவள் ரவிக்கையையும் கழற்றி அவளை அம்மணமாக்க, அங்கிருந்து அகல முயற்சித்தேன். “எங்க போற? ஆத்துக்கு முதல் பேத்தி மாட்டுப்பொண். வா வந்து தண்ணி ஊத்து” என்று ஒரு குரல் அதட்ட கையறு நிலையில் அவள் அருகே சென்றேன்.
லா.ச.ரா.வின் துளசி கதை ஞாபகம் வந்தது. அப்பாம்மை, நீ சமுத்திரம். எத்தனை அம்சம், எவ்வளவு நாசூக்கு, என்ன அடக்கம்…தங்களுக்கு வாய்க்கப் பெறாத குணமொன்று மற்றவர்களுக்கு வாய்த்து விட்டால் அவர்கள் சறுக்கும் நேரம், அல்லது அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நேரத்துக்கு காத்துத் கொண்டிருக்கிறது இவ்வுலகம். தாயானாலும் குரோதத்தோடு சடங்கு என்ற பெயரில் மானத்தை உருவக் காத்துக் கொண்டிருக்கிறது. அப்பாம்மை, நீ ஏதாவது விபத்தில் போயிருக்கலாம் அல்லது ஏதாவது தொற்று நோயில்… அவளின் முகத்தில், உலர்ந்த திராட்சை போன்று சுருங்கிய முலைகளில், அவள் நாபியில் தண்ணீர் ஊற்றிக் கொண்டே…
“போறும், ராஜி நீ வா… என் கையிலிருந்த சொம்பு பிடுங்கப்பட்டது. நிமிர்ந்து பார்த்தால் பக்கத்து வீடு, எதிர் வீட்டுப் பெண்களும் ஜன்னலில் அப்பாம்மையைப் பார்த்து உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். கோபம் அடி வயிற்றிலிருந்து வந்தது.
“ஏங்க, இது வீட்டுப் பெண்கள் மட்டும் கலந்துக்கற சடங்கு. போங்க…” என்று ஜன்னலைச் சாத்தினேன். பெரியத்தை அப்பாம்மையின் பிறப்புறுப்பில் சாணத்தை அப்பி “வெட்டியான் பாத்துடக் கூடாது”… புடவை கட்டத் தயாரானாள். “க்ரிமடோரியம் அத்தை” என்ற என் குரல் அந்த பரபரப்பில் அடங்கிப் போனது.
பந்தம் பிடிக்க கொள்ளுப் பேரனையும் ஏற்றிக் கொண்டு வண்டி மயானத்துக்குப் போன பிறகு, அப்பாம்மை தினமும் ஆசையுடன் பறிக்கும் பவழமல்லி மரத்தடியில் அமர்ந்தேன்.
“தாத்தா சொல்லிருக்கா அசாம் பக்கத்துல செத்தவாளுக்கு இதை மாலையாப் போடுவாளாம். இந்த மரத்துல ஒரு சோகம் இழையோடல? யார் கூடவும் சேராம தனியா, அடக்கமா ராத்திரி பூத்து கார்த்தால கொட்டறது? என்னமோ கோந்த, இந்த மரம் எனக்கு உடம்பொறந்தா மாதிரி…”
ஐயோ! இனி அப்பாம்மைனு நினைச்சாலே நரைத்த முடியுடன் கூடிய அவள் பொன்னுடம்புதானே ஞாபகத்துக்கு வரும்…நான் மரத்தடியில் குழந்தையாட்டம் கேவிக் கேவி அழுததை குளித்துவிட்டு வந்த பெண்கள் விசித்திரமாகப் பார்த்தார்கள்.
*
(மே 21, 2021)
ஜானகிராமன் கதையை வாசிப்பது போல இருந்தது. ஆற்றொழுக்கு நடை . தொடர்ந்து எழுதுங்கள். மிக அருமை.
வாவ்! இதை விட என்ன வேண்டும். நன்றி!
சகோதரி தங்கள் கதை நடை மிகவும் நன்றாக இருந்தது, ஒரு இறப்பு வீட்டின் மனநிலையை நன்றாக பதிவு செய்தீர்கள். தங்களை அறிமுகம் செய்த சாருவிற்கு என் மனமார்ந்த நன்றியும் பணிவான வணக்கங்களும்.
மிக்க நன்றி!
அப்பாம்மை சடலத்தைக் குளிப்பாட்டும் தருணத்தில், பெண்களுக்கே பிற பெண்கள் மேல் ஏற்ப்படும் இனம் தெரியாத அசூயையும், வன்மமும் உளவியலாக வெளிப்படும் இடம் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. அது ஆழமான உளவியல் ரீதியான விசாரத்தை நோக்கி வாசகர்களை இட்டுச்செல்லும் தன்மை கொண்டதாகவும் அமைந்துள்ளது. வெட்டியான் காணாதப் பொருட்டு சடலத்தின் பிறப்புறுப்பில் சாணம் அப்பப்படும் இடம், எவ்வாறு சமூகம் பெண்களின் உடலின் மேல் வயது வரம்பின்றி கௌரவத்தை திணிக்கிறதுப் போன்ற பயங்கரமான விஷயத்தை மிக நுட்பமாக கடத்திச் செல்கிறது. கதையின் ஆரம்பத்திலலும், இறுதிக்கு முன்பும் ஆஸ்துமா பையனை வைத்து வந்த black comedy ரசிக்கும்படியாக இருந்தது. மறுவாசிப்பின்போது, என் வாசிப்புப் பக்குவமடைவதுடன் சேர்ந்து இந்த கதையும் என்னுள் வளர்ந்துக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. அப்பாம்மை சிறுகதை Masters ஐ வாசிக்கும் அனுபவத்தை தந்தது. மேலும் உங்கள் சிறுகதைகள், மொழியாக்கங்கள் மற்றும் ஹெக்ஸ’கோன்’ நாவல் போன்ற படைப்புக்களை print medium ஆக காண ஆவலாக இருக்கிறேன்.
Means a lot sir. Thanks much
Remarkable. All time classics. Ty.