பெப்ருவரி 1990
பத்தாவது முழுப்பரிட்சைக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. பேபி ஆறாவது. ஹரி எஞ்சினியரிங் கடைசி ஆண்டு.
ஒவ்வொரு நாளையும் சமாளிப்பது பிரம்ம பிரயத்தனமாக இருந்தாலும் எப்படியோ வாழ்க்கை ஓடுகிறது. அதுவும் வேகமாக. சட்டென்று அம்மாவுக்குத் தலை நரைத்து வயசானவளாகக் காட்சியளிக்கிறாள். அப்பாவும் தளர்ந்து போனது தெரிகிறது. ஹரி அப்பாவை இரு சக்கர வாகனம் ஓட்ட விடுவதில்லை. கல்லூரிக்கு செல்லும் முன் அப்பாவை அவர் அலுவலகத்தில் விட்டுவிட்டுப் போகிறான். வரும்போது அழைத்துக்கொண்டு வருகிறான். அப்பா அம்மாவை இவ்வளவு அழகாக கவனித்துக்கொள்ளும் அவனுக்கு எங்கிருந்து இந்த புத்தி வந்தது? ஏன் என்னிடத்தில் மட்டும் பிரச்சனை? நான் என்ன தவறு செய்தேன்? நான் ஏதாவது தப்பான சமிக்ஞை கொடுக்கிறேனா? குழப்பம் அதிகமாகியது.
சுமதியை அவ்வப்போது வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன். பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு அறை மட்டுமே இருக்கும் வீட்டில் இருந்தவள் இப்போது புருஷனைக் கூட்டிக்கொண்டு கோயமுத்தூர் சென்றுவிட்டாள். எங்களைப் பார்க்க சிரமமாக இருந்ததோ என்னவோ. திருமணமாகி ஒரு வருடத்திலேயே ஒரு ஆண் குழந்தையும் பெற்றாள். பிரசவத்துக்கு பாண்டி அண்ணா, அம்மா வீட்டிற்கு அனுப்பாமல் தானே பார்த்துக்கொண்டார். இருவரும் எங்களிடம் எந்த உதவியும் கேட்கக் கூடாதென்று வைராக்கியமாக இருந்தனர். குழந்தை பிறந்ததும் நாங்கள் போய் பார்த்துவிட்டு வந்தோம். அழகாக மொட்டுமொட்டென்று சுமதியைப் போலவே இருந்தது. அதற்குப்பின் ஓரிரு முறை குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவள், பின் கோயமுத்தூருக்கு வீடு மாற்றி சென்று விட்டாள்.
ஹரியின் நோட்டை நான்தான் கிழித்தேன் என்று அவனுக்கு நன்றாகத் தெரிந்தாலும் வீட்டில் எதுவும் சொல்லவில்லை. அடுத்து வந்த நாட்களில் தூங்காமல் வேலை செய்து கொண்டிருந்தான். அடுத்தடுத்து வந்த மாதங்களில் பிரச்சனை எதுவும் இல்லாமல் போகவே அப்பாடா என்ற ஒரு பெருமூச்சு நிலவியது. கோனா சந்தோஷப்பட்டாள்.
ஆனால் மெல்ல மெல்ல கள்ளிச்செடி வளர்வதுபோல வேறு விதமாக ஆரம்பித்தான் ஹரி.
‘அம்மா, இவளை பக்கத்து வீட்டு குமாரோட பார்த்தேன். ஒண்ணும் இருக்காதுன்னு தெரியும். ஆனா ஏன் தேவையில்லாம அவனோட நடுரோட்டுல பேசிண்டு நிக்கறா?’
‘அம்மா, இவ போட்டுக்கற டிரெஸ் ஒண்ணும் சரியில்லை. சொல்லிட்டேன். நான் சொன்னா சண்டைக்கு வருவா. நீ கொஞ்சம் சொல்லு.’
‘அப்பா, கீதா ஸ்கூல்ல சரியா பாடத்தை கவனிக்கறதில்லன்னு கேள்விப்பட்டேன். எப்பவும் கனா கண்டுண்டே உட்கார்ந்திருக்காளாம்.’
‘அம்மா, எதுக்கு இப்ப இவ இப்படி நகம் வளர்த்தி நெயில் பாலிஷ் போட்டுக்கறா? எவனை மயக்க? சுமதி மாதிரி இன்னொரு கேஸ் நம்ம வீட்டுல வரணுமா?’
‘அப்பா, 8.30 மணி பஸ்ஸுக்கு எதுக்கு எட்டு மணிக்கே பஸ் ஸ்டாண்டுல நிக்கறா?’
இப்படி மெல்ல மெல்ல என் பெற்றோரின் மனதை விஷமாக்கினான். நன்றாகப் படிக்கும் பிள்ளை, தலைச்சன், பின்னால் குடும்பத்தை கவனித்துக் கொள்ளப் போகிறவன், இதுவரை எந்த வம்பையும், நண்பன் என்று எவனையும் கூட்டி வராத பிள்ளை, ஊரார் கெட்ட பழக்கம் என்று வரையறுத்து வைத்திருக்கும் எந்தக் கெட்டதும் இல்லாத பிள்ளை. அவன் சொன்னால் வேறு என்ன வேண்டும். அதுதான் தெய்வ வாக்கு. என்னைக் கண்டிக்க ஆரம்பித்தனர். நான் எகிற ஆரம்பித்தேன். நான் திருப்பிப் பேச ஆரம்பித்ததும் அவர்களுக்கு என்னிடம்தான் தப்பு இருக்கிறது என்று தோன்ற ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல முடிவே செய்து விட்டனர். நான் எவ்வளவோ மன்றாடினாலும் கேட்பதாயில்லை. எனக்கு நாட்டியம் கற்றுக்கொள்ள, பாட்டுக் கற்றுக்கொள்ள, இன்னும் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசை. ஆனால் இவன் என்னைப் பற்றி தோற்றுவித்திருந்த பிம்பமே வென்றது. பள்ளியை விட்டால் வீடு, வீட்டை விட்டால் பள்ளி என்றே என் வாழ்க்கை அமைந்தது. நான் வீட்டை விட்டு எங்கும் நகர முடியாதபடி வெங்கட் பார்த்துக் கொண்டான்.
ஒவ்வொரு வருடமும் எங்கள் பள்ளியிலிருந்து இரண்டு மணி நேர தொலைவிலிருக்கும் மருதமலைக்கு பத்தாவது படிக்கும் பெண்களையும் பனிரெண்டாவது படிக்கும் பெண்களையும் கூட்டிச் செல்வார்கள். முழுப் பரிட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன் இரண்டு மூன்று பேருந்துகளில் எங்களை ஏற்றி கூட்டிச் செல்வார்கள். அதுதான் எங்களுக்கு உல்லாசப் பயணம். மருதமலைக்கு சென்று நாங்கள் நல்லபடியாக தேர்ச்சி பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம். அந்த நாளை எதிர்பார்த்து ஒவ்வொருவரும் ஆனந்தத்துடன் இருப்போம். அதைப் பற்றிய பேச்சு பள்ளியில் ஜனவரியிலிருந்தே ஆரம்பித்துவிடும்.
எவ்வளவு கெஞ்சியும் மருதமலை பயணத்துக்கு என்னை என் வீட்டினர் அனுப்பவில்லை.
‘இவள் கண்டிப்பாக குமாருடனோ ஜாகீருடனோ ஓடி விடுவாள்’ என்று ஹரி அடித்து சொன்னான். என் வகுப்பு ஆசிரியை அனுமதி கேட்டும்கூட என் பெற்றோர் அனுப்ப மறுத்தனர். குமாரும் ஜாகீரும் என்னுடன் பிறக்காத சகோதரிகள்போல். எப்படி இவர்களுக்குச் சொல்லிப் புரிய வைப்பது?
கோனா ஒரு நாள் ஹரியைப் பார்க்க வேண்டி வந்தது. முதல் பார்வையிலேயே அவனை எரித்து விடுவதுபோல் பார்த்தாள். ஹரிக்குப் புரிந்துவிட்டது. அன்றிலிருந்து கோனா அவனுக்கு எதிரியாகி விட்டாள். அவள் நட்பு கூடாநட்பு என்று என் பெற்றோரை நம்ப வைத்தான்.
‘அம்மா, அவங்க குடும்பத்துக்கு புலிகளுடன் தொடர்பு இருக்கு. இவளை நாம கட்டுப்படுத்தலன்னா நிலைமை கைவிட்டுப் போயிடும்’ என்றவுடன் கோனா வீட்டுக்கு வருவதற்கும் தடை போடப்பட்டது.
என் வகுப்புத் தோழிகள் மருதமலை சென்ற அன்று எனக்கு வீட்டில் நிலைகொள்ளவில்லை. நினைவெல்லாம் அங்கேயே இருந்தது. கூட்டம் கூட்டமாக சினிமாவுக்குச் செல்லும், உணவருந்தி மகிழும் பெண்களைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. எனக்கு மட்டுமல்லாமல் பேபிக்கும் அதே நிலைமைதான். அவளை எதுவும் சொல்ல மாட்டார்கள் என்றாலும் அவள் என்னோடவே ஒட்டுவாரொட்டிபோல் ஒட்டிக்கொண்டே இருப்பாள். அவளுக்கு நான் இருந்தால் போதும். வேறு எதுவும் வேண்டாம். என்னால் பேபியிடம் ஓர் அளவுக்கு மட்டுமே பேச முடியும்.
எனக்கு இப்போதெல்லாம் புத்தகங்கள் மட்டுமே தோழிகள். லைப்ரரி மாமாவை வீட்டுக்கே வந்து புத்தகங்கள் தருமாறு சொல்லிவிட்டார்கள். அதனால் வாரம் ஒருமுறை அவர் வார இதழ்கள், மாத இதழ்கள், நாவல்கள் எல்லாம் கொண்டு வந்து கொடுப்பார். அடுத்த வாரம் வருவதற்குள் படித்துவிட்டு நானும் அம்மாவும் வேறு புத்தகங்களை எடுத்துக் கொள்வோம்.
டிங்கில், விஸ்டம், பாலமித்ரா, துளிர், முத்து காமிக்ஸ்,பாலகுமாரன் தவிர ஆங்கிலத்தில் அகதா கிரிஸ்டியுடன் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், ராபின் குக், ஆஸ்டரிக்ஸ், ஆர்.கே. நாராயண் என்று பலரும் என் புத்தக அடுக்கில் ஏறியிருந்தார்கள். இப்போதெல்லாம் சேஸின் உலகம் மிகவும் பிடித்துப் போனது. அவருடைய நாவல்களில் வரும் பாரடைஸ் சிட்டியில் நானும் வாழ ஆரம்பித்திருந்தேன். ல்யூடினண்ட் டாம் லெப்ஸ்கியுடன் சேர்ந்து நானும் பயணித்தேன். அமெரிக்க நிலப்பரப்பில் அவர்களுடன் அவர்களைப் போல ஜீன்சும் டி ஷர்ட்டும் அணிந்து வாழ்ந்தேன்.
ஆஸ்டரிக்ஸ் புத்தகங்களும் எனக்கு ஆகப் பிடித்திருந்தன. ஆஸ்டரிக்ஸ், ஓப்லிக்ஸ், அந்தக் கிராமத் தலைவன், அவர்கள் ஊரின் பாடகன், அதில் வரும் ஜூலியஸ் சீசர்…அனைவரும் என் குடும்பத்தில் ஒருவராயினர். என்னையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஏதேனும் ஒரு விஷயத்துக்காக மனது சஞ்சலமடைந்தால் நான் அடைக்கலமாவது இவர்களிடமே. அதில் வரும் ட்ரூயிடின் மந்திர பானத்தைக் குடித்து எனக்கும் அதீத சக்தி வருவதுபோல் நினைத்துக் கொள்வேன். லுதேசியாவின் பின் நானும் ஓடுவேன். ‘வானம் தலைமேல் விழுந்துவிட்டால் என்னாவது’ என்று நானும் அவர்களுடன் சேர்ந்து பயப்படுவேன். கிராமமே கூடிச் சாப்பிடுகையில் சாகபஷிணியாக இருந்தாலும் நானும் அவர்களுடன் உட்கார்ந்து சம்பிரமமாக சாப்பிடுவேன். என் கவலை, சஞ்சலம், கிலேசம் எல்லாம் பறந்து போய்விடும்.
இவர்களே போதும் இந்த ஜென்மத்துக்கு. யாரேனும் என்னை திருமணம் செய்துகொண்டு இந்த வாழ்க்கையிலிருந்து என்னை விடுவிக்கும்வரை இப்படியே வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்று என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன்.
ஆனால் நினைப்பதுபோல் வாழ்க்கை நடந்தால் சுவாரசியம் இல்லாது போய்விடும் என்று பிறக்கும் போதே பூப்போட்டு அர்ச்சிக்கப்பட்டிருக்கிறேன் போலும். சனி விஸ்வரூபம் கொண்டு ஆக்ரோஷமாக என்னை நோக்கி வந்தது.
கோயமுத்தூரில் இருக்கும் என் சித்தப்பா, அதாவது என் அப்பாவின் தம்பி பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. என் அப்பாதான் குடும்பத்துக்குப் பெரியவர் என்பதால் திருமணத்துக்கு முன் நடக்கும் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அப்பாவையும் அம்மாவையும் வந்து நடத்திக் கொடுக்கச் சொல்லி அழைத்தார்கள் சித்தப்பாவும் சித்தியும். மனையில் உட்கார ‘கன்யா பொண்’ ஒருத்தி வேண்டும் என்பதால் பேபியையும் மறக்காமல் கூட்டிக்கொண்டு வரும்படி சொல்லியிருந்தார்கள். வியாழக்கிழமை காலை புறப்பட்டு போய் வெள்ளிக்கிழமை இரவு வருவதாக ஏற்பாடு.
நானும் உங்களுடன் வருகிறேன் என்று சொன்னால் அம்மா மறுத்தாள்.
‘ஹரிக்கு யாருடி சமைச்சுப் போடுவா? பேசாமல் வீட்டில் இரு’ என்று கடுப்படித்தாள் அம்மா.
‘அம்மா, எனக்கும் கல்யாணி அக்காவைப் பார்க்கணும் போல இருக்கு. ப்ளீஸ் வரேனே’ என்று காலைப் பிடித்து கெஞ்சாத குறையாகக் கெஞ்சினேன்.
‘கண்ணம்மா, அம்மா சொல்றதைக் கேளு. இதோ! ரெண்டு மாசத்துல கல்யாணம். ஒரு வாரம் அங்கதான் இருக்கப் போறோம். சமத்தா அண்ணாவுடன் இரு’ என்று அமைதியாகச் சொன்னாள் அம்மா.
‘உன் பையன் சரியில்லை. அவன் என்னை தொந்தரவு செய்கிறான். அவன் என்னை மறுபடி தொல்லை செய்தால், என் மீது கை வைத்தால் நான் என்ன செய்வேன் அம்மா. அவன் உங்களுக்கெல்லாம் நல்லவனாக இருக்கிறான். என்னைப் பார்த்தால் அவன் சாத்தானாகி விடுகிறான் அம்மா. என்னைப் புரிந்து கொள்ளேன்’ என்று மனதில் அரற்றிக் கொண்டு,
‘ப்ளீஸ்…அம்மா, அம்மா, ப்ளீஸ்…விட்டுட்டு போகாதே’ என்று கண்ணீர் மல்க கெஞ்சினேன்.
‘என்னடி குழந்தையாட்டம் ஆடற’ என்று அம்மா கோபமாகத் தொடங்கினாள். ‘ஹரிக்கு ஏதோ பரிட்சையிருக்குன்னு சொன்னான். அவனுக்கு உதவியா இரு. அடம் பிடிக்காதே’ என்று முற்றுப்புள்ளி வைத்தாள் அம்மா.
வியாழக்கிழமை காலை ஹரி கல்லூரிக்குச் செல்ல தயாராகி வெளியே வந்தபோது
‘நாங்க போயிட்டு வரோம்டா. நாளைக்கு சாயந்திர வண்டி பிடிச்சு வந்துடுவோம். கீதாவைப் பார்த்துக்கோ’ என்றாள் அம்மா.
‘சரிம்மா’ என்றவன் கீழ் உதட்டை மடித்துக் கடித்து விஷமமாக சிரித்துக்கொண்டே செருப்பைப் போட்டதைப் பார்த்தவுடன் பகீரென்றது.
அம்மா, அப்பா, பேபி எல்லோரும் கிளம்பியவுடன் வீட்டைப் பூட்டிக்கொண்டு மணியைப் பார்த்தேன். எட்டே முக்கால். ஒன்பது மணிக்கு எனக்குப் பள்ளியில் முதல் மணி அடித்து விடும். வீட்டிலிருந்து என் பள்ளி ஐந்து நிமிட நடைதான். ஜாகீர் கவர்மெண்ட் பாய்ஸ் ஹை ஸ்கூலில் படித்தான். அவனும் ஏறக்குறைய இதே நேரத்தில்தான் சைக்கிளில் கிளம்புவான். அவசர அவசரமாக அவன் வீட்டுக்குள் ஓடினேன். ரெஜினா அத்தை அவனுக்கு டிபன் பையை கொடுத்துக்கொண்டிருந்தாள்.
‘என்னடி குட்டி? இப்ப ஓடி வர?’ என்றாள் அத்தை.
‘அத்த, ஜாகீர் நேத்தே என்னோட சயின்ஸ் நோட்டு கேட்டான். மறந்துட்டேன் கொடுக்க. அதைக் கொடுக்க வந்தேன்’ என்று சொல்லி நோட்டைக் கொடுத்தேன். கேள்விக்குறியோடு என்னைப் பார்த்த ஜாகீரை கண்களாலேயே அமைதியாக வாங்கிக் கொள் என்ற செய்தி சொன்னேன்.
அவனும் ‘குடு’ என்று வாங்கிக்கொண்டு போய் விட்டான்.
மதியம் உணவு இடைவேளையில் பள்ளிக்கு வெளியே ஜாகீருக்காக காத்துக்கொண்டிருந்தேன். அவன் பேயறைந்ததுபோல் அரக்கப் பறக்க வந்தான்.
‘என்னடி இது எழுதியிருக்க? ஹரி அண்ணாவா? நம்பவே முடியல. நீ தப்பா புரிஞ்சுக்கலயே?’ என்றான்.
‘முழு விஷயமும் உனக்கு நான் அப்பறம் சொல்றேன். இன்னிக்கு ராத்திரி என் வீட்டுல என்னால் இருக்க முடியாது. என்ன செய்யறது? உன் வீட்டுக்கு வந்துடவா? ஆனால் அத்தைகிட்ட என்ன சொல்றது?’
‘ஹ்ம்ம்… எங்கம்மா நோண்டி நோண்டி கேப்பாங்க. என்ன சொல்லுவ? இந்த விஷயத்தை பேசாம எங்கம்மா கிட்ட சொல்லிடலாமா?’
‘உங்களுக்கெல்லாம் மூளையே கிடையாதாடா? சொல்ல முடிஞ்சா நானே அத்தைகிட்ட சொல்லிடுவேன் இல்ல? உங்கம்மா, எங்கம்மா, மல்லிகா அத்தை, கவிதா அத்தை எல்லோரும் க்ளோஸ் பிரெண்ட்ஸ். அடுத்த நிமிஷம் காலனி பூரா தெரிய வரும். ஹரியை எதுவும் சொல்ல மாட்டாங்க. என் பேருதான் நாறும்.’
என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.
‘என்னால கண்டிப்பா இன்னிக்கு ராத்திரி வீட்டுல இருக்க முடியாது. ஏதாவது நடந்தா நான் தற்கொலை பண்ணிப்பேன்’ என்றதும் ஜாகீர் கலவரமானான்.
‘இன்னும் பதினைந்து நிமிஷம்தான் இருக்கு ஜாகீர் பெல் அடிக்க. என்ன செய்யறது?’
‘தெரியலையேடி.’
‘சரி! நான் ஒண்ணு சொல்றேன் கேளு. நீ கொழுமம் ரோடுல இருக்கும் உன் பிரண்ட் செந்தில் வீட்டுக்கு அப்பப்போ போய் ராப்பூரா தங்கி படிப்ப இல்ல? அப்படி தங்கி படிக்கப் போறேன்னு அத்தைகிட்ட சொல்லிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடு. நானும் வந்துடறேன். பழநி போயிடலாம். ஒரு ராத்திரிக்கு மட்டும் ரூம் எடுத்து தங்கிடலாம். காலையில் சீக்கிரம் திரும்பிடலாம். என்ன சொல்ற?’
‘என்னடி பேசற? ஹரி அண்ணா உன்னைக் காணோம்னு தேட மாட்டானா?’
‘என் பிரண்டு வீட்டுக்குப் போயிட்டு நாளைக்கு வரேன்னு லெட்டர் எழுதி வெச்சுட்டுப் வருவேன். சிம்பிள். அவனுக்குத் தெரியும். கோபப்படுவான். ஆனால் அவனால் என்ன செய்ய முடியும்? கார்த்தாலதான் சீக்கிரம் வந்துடப் போறோமே.’
‘உங்க அம்மா அப்பாகிட்ட போட்டுக் கொடுப்பானே?’
‘அதுக்கு என்ன கதை சொல்றதுனு அப்பறம் யோசிச்சுக்கலாம்.’
‘ரூம் நமக்குத் தருவாங்களாடி? அதுக்கு காசு இருக்கா?’
‘நான் பார்த்துக்கறேன் அதை. கவலைப்படாதே. சிறுவாட்டுப் பணம் இருக்கு.’
ஜாகீர் தயங்கினான்.
‘உன்னை விட்டா எனக்கு வேற யாரும் இல்லடா. கோனாவும் ஹாஸ்டல்ல இருக்கா. வெளிய அனுப்பவே மாட்டாங்க. நீ என்னோட பெஸ்ட் பிரெண்ட் இல்லையா’ என்றதும் அவன் கண்களில் பரிவு வந்தது.
‘சரிடி. இதுல ஒண்ணும் பிரச்சனை வராதுன்னு நினைக்கறேன். அஞ்சு மணி பஸ்ஸுக்கு போயிடலாம். என்ன…’ என்றான்.
சந்தோஷமாகத் தலையாட்டிவிட்டு பிரச்சனையை தீர்த்துவிட்ட நிம்மதியுடன் என் வகுப்புக்குப் போனேன். என்னுடைய இந்த செயல் பெரிய பூகம்பத்தை இரு வீட்டிலும் ஏற்படுத்தி என் வாழ்க்கையையே மாற்றிப் போடும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.