10 ஜூலை 1986, வியாழக்கிழமை
என் பதிமூணாவது பிறந்தநாளுக்கு இன்னும் எட்டு நாள்தான் இருக்கு. என்னோட பத்தாவது பிறந்தநாளன்னிக்கு ஆரம்பிச்ச டயரி அன்னிக்கு ஒரு நாள்லயே முடிஞ்சு போச்சு. அதுக்கப்பறம் எழுதலை. எனக்கு அந்த சம்பவத்துக்கு அப்புறம் எழுதப் பிடிக்கல. அன்னிக்குதான் கடைசியா ரொம்ப சந்தோஷமா இருந்தது. என்னால ஹரி செஞ்சதை யார் கிட்டயும் சொல்ல முடியல. எப்படி சொல்றது? அப்படி சொல்ற மாதிரி யாரும் என்கிட்ட க்ளோஸ் இல்ல. சுமதி அக்காவும் என்கிட்ட அவ்வளவா பேச மாட்டா. அவளுக்கு பிரண்ட்ஸ் கூட்டம் ஜாஸ்தி. நான் அந்த சம்பவத்துக்கு அப்புறம் வீட்டில் தனியா இருக்கும் வாய்ப்பில்லாமல் பார்த்துண்டேன். வீட்டிலும் யாராவது ஒருத்தர் எப்பவும் இருந்ததனால் இதுவரை பிரச்சனை எதுவும் பெருசா இல்லை. ஆனாலும் ஹரியைப் பார்க்கும் போதெல்லாம் பயமா இருந்தது. என்னைப் பார்த்தாலே அவன் கோண வாய் சிரிப்பு சிரிக்கறான்.
எங்கள் வீட்டில் ஹரிக்கு மட்டும் ஒரு தனி ரூம். அம்மா, அப்பாவுக்கு ஒரு சின்ன ரூம். பாட்டி, சுமதி, பேபி, எனக்குன்னு எல்லாருக்குமா ஒரு பெரிய ரூம். பல வருஷத்துக்கு முன்னால உடுமலைப்பேட்டைல இளங்கோ காலனி கட்ட ஆரம்பிச்சப்போ அப்பா பத்தாயிரம் ரூபாய்க்கு இந்த நிலத்தை வாங்கிக் கட்டினாராம் . வாசல்ல செருப்பெல்லாம் வைக்க ஒரு சின்ன வராண்டா, அப்புறம் ஹால், வலது கைப்பக்கம் ஹரியோட ரூம், இடது பக்கம் அம்மா, அப்பா ரூம், ஹால்ல இருந்து நேரா வந்தா இடது கைப்பக்கம் சமையலறை, அதுக்கு நேரா எங்க ரூம். எங்களோட ரூமை ஒட்டி இன்னொரு ரூம். அங்கதான் அம்மாவும் சுமதியும் மாசத்துல மூணு நாள் உக்காருவா. அதுக்கப்பறம் புழக்கடைதான். அங்கதான் குளிக்கற ரூமும் டாய்லட்டும் தனித்தனியா இருக்கு. புழக்கடைல முருங்கை, வாழை, மாமரம் அப்பறம் கொஞ்சம் காய்கறிச் செடிகள் போட்டு வெச்சிருந்தா அம்மா.
சுமதி சண்டையான சண்டை பிடிப்பா அம்மா அப்பா கிட்ட.
‘ஒரு கண்ணுல வெண்ணையும், ஒரு கண்ணுல சுண்ணாம்பும் வெக்கறம்மா நீ. ஹரிக்கு மட்டும் தனி ரூம், கேக்கறதெல்லாமும் கிடைக்கறது. என்னையென்ன தவிட்டுக்கு வாங்கிண்டு வந்தியா?’ என்று அலறுவாள்.
‘அவன் ஆம்பளைடி. அவந்தாண்டி உங்க மூணு பேரையும் கரையேத்தப் போறான். இந்தக் குடும்பத்த வழி நடத்தப் போறான். அவன் எல்லாத்துலயும் பர்ஸ்ட். இப்ப கூட ஸ்காலர்ஷிப்லதான் படிக்கறான். எஞ்சினியரிங். அவ்வளவு சீக்கிரம் அந்தப் படிப்பு எல்லாருக்கும் கிடைச்சுடுமா? உன்ன மாதிரி பிரெண்ட்ஸோட பொழுதன்னிக்கும் ஊரச் சுத்தி ஊளையிடறதில்ல. இதோ, இன்னும் கொஞ்ச நாளுல வேறாத்துக்குப் போகப் போற. இந்த வாய் உனக்கு ஆகாது. இன்னொரு தடவ இதப்பத்தி பேசின கால ஒடச்சுடுவேன்’ என்று பதிலுக்கு பாட்டி திட்டுவாள். அந்தக் காலத்துலயே ஏழாவது வரை படித்த பாட்டி. இங்கிலீஷும் படிப்பாள். பாட்டி ரொம்ப ஸ்டிரிக்ட். அவளுடைய முதல் மற்றும் ஒரே பேரனான ஹரி மேல அவளுக்கு ஒரு அலாதி பிரியம்.
சுமதியக்கா பாவம். அழுது ஓஞ்சுடுவா. அப்பக்கூட அவளைப் பத்தி மட்டுமே பேசுவா. நானும் பேபியும் அந்த வீட்டுல இருக்கறதே… அவளுக்கு மட்டும் இல்ல, ஒருத்தருக்கும் தெரியாது. எடுபிடி வேலைக்கு மட்டும்தான் கண்ணுக்குத் தெரிவோம். பேபியையாவது அப்பப்போ எல்லாரும் கொஞ்சுவா. நான் சுத்தமா கண்ணுக்குத் தெரிய மாட்டேன். இரும்புக்கை மாயாவிக்காவது கை தெரியும். நான் இன்விசிபிள் இந்த வீட்டுல.
அம்மா தன்னோட உலகத்துல இருப்பா. அவ்வளவா பேச மாட்டா. கார்த்தாலயிருந்து அவளுக்கு வேலை சரியாயிருக்கும். வேலை இல்லாத நேரத்தில் அனுராதா ரமணன், லக்ஷ்மி, எல்லாம் படிச்சிண்டிருப்பா. ராஜேஷ் குமார்னு ஒரு புது ரைட்டர் எழுதிண்டிருக்கார். அம்மா அவரோட எழுத்து மேல பைத்தியம். ‘வாடகைக்கு ஒரு உயிர்’னு அவரோட அந்த நாவலைப் பத்தி அப்படி சிலாகிப்பா. மாதாமாதம் அவரோட நாவல் முக்குக் கடைல வந்திருக்கான்னு பார்த்துட்டு வரச் சொல்லுவா.
பேபி மட்டும்தான் எப்பவும் அக்கா அக்கான்னு என்னோடவே சுத்துவா. அவ சின்னவ. அவகிட்ட எதுவும் பேச முடியாது. எனக்கு இருந்த பிரெண்ட்ஸ் எல்லாம் சாமியும், மத்தவங்களும். மத்தவங்கன்னா, இரும்புக்கை மாயாவி, மாண்ட்ரேக், ப்ளாஷ் கார்டன், ஜேம்ஸ் பாண்ட், ஃபாந்தம். அம்மாவுக்கு இங்கிலீஷ் படிக்கத் தெரியலைன்னு குறை. அதுனால நாங்க கத்துக்கணும்னு நிறைய இங்கிலீஷ் காமிக்ஸும், புக்ஸும் அப்பாகிட்ட சொல்லி வாங்கித் தருவா. பாட்டி திட்டினாலும் கண்டுக்க மாட்டா.
அதுனால டின்டின், ஹார்டி பாய்ஸ்,ரிச்சி ரிச், அகதா க்ரிஸ்டி கிடைச்சுது. போன வாரம் அம்மா பெங்களூர் ஒரு கல்யாணத்துக்காக போயிட்டு வரும்போது சார்லஸ் டிக்கன்ஸோட A Tale of Two Cities (Illustrated Classic Edition) வாங்கிட்டு வந்தா. குட்டியா குண்டா இருந்தது அந்த புக். அவ்வளவு அழகா ஒரு புக்கை அதுவரை நான் பார்த்ததில்ல. பக்கத்துக்கு பக்கம் படம் போட்டிருந்ததால நல்லாருக்கும்னு நினைச்சு வாங்கிட்டு வந்தா அம்மா.
ஒரே நாள்ல அதைப் படிச்சு முடிச்சேன். சுமாரா புரிஞ்சது. ஆனாலும் எனக்கு பிரமிப்பா இருந்தது. பிரம்மாண்டமா இருந்தது கதை. பிரெஞ்ச் ரெவல்யூஷன்ல நடந்த கொலைகள், கில்லடின்ல யாரையெல்லாம் போடணும்னு எம்பிராய்டரி பண்ற மேடம் டேஃபார்ஜ், எல்லாமே ரொம்ப அட்டகாசமா இருந்தது. மேடம் டேஃபார்ஜ் படத்தைப் பார்த்தாலே பயமா இருக்கும்.முதல் தடவையா ஒரு புக் என்னை சர்பிரைஸ் பண்ணுச்சு. முதல்முதலா அன்னிக்குதான் நான் லவ் பண்ண ஆரம்பிச்சேன். அந்த புக்ல வரும் சிட்னி கார்டன் மேல ஒரே லவ் எனக்கு. எப்பேர்ப்பட்ட தியாகம் செய்யறார் சிட்னி. ஒரு வாரமா நான் சிட்னியோட வாழ ஆரம்பிச்சிருக்கேன்.
‘ஏன் உனக்கு சிட்னிய பிடிச்சிருக்கு? அவன் குடிகாரன். ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாதவன். சார்லஸ் டார்னேவை ஏன் பிடிக்கல? அவன் நல்லவன். லூசியை அருமையா பாத்துக்கறவன். ஏன் பிடிக்கல?’
உள்ளிருந்து ஒரு கேள்வி வேகமா வந்தது. தோ! அந்த நிமிஷம்தான் எனக்குள்ளிருக்கும் பெனாத்தாவையும் நான் கண்டுபிடிச்சேன். எனக்குள்ள இருந்து எப்பவும் கேள்வி கேப்பா. சண்டை போடுவா. இனிமே நான் தனியா இல்லைன்னு சந்தோஷமா இருந்தது. ஆனா அப்பப்போ அவ ரொம்ப பேசறதாலதான் அவளுக்கு பெனாத்தானு பேர் வச்சேன். அவளுக்கு அந்தப் பெயர் பிடிக்கலன்னாலும், சரியா பொருந்தற பெயர் அதுதான்னு தீர்மானமா அவகிட்ட சொல்லிட்டேன்.
ஏன் பிடிக்கலன்னு கேட்டா எனக்கு சொல்லத் தெரியல. குடிச்சு வாழ்க்கைய நாசம் பண்ணிகிட்டாலும் சிட்னி கிட்ட ஏதோ ஒரு பெரிய நல்லது இருந்தது தெரிஞ்சது. எனக்கு சொல்லத் தெரியல. லூசிக்காக, அவள் மேல இருந்த லவ்வுக்காக சிட்னி தன்னையே தியாகம் பண்ணறார். பாவம் அவர். அவருக்குன்னு சொல்லிக்க, என்னைப் போல அவருக்காக பேச, யாருமே இல்லை. நான் அவரை புரிஞ்சுக்கறேன். எந்தத் தப்புமே செய்யாம கில்லடின்ல அவரோட தலையைக் கொடுக்கும்போது என்ன நினைச்சிருப்பார்? பிரான்ஸில் அப்ப நான் இருந்திருந்தா கண்டிப்பா அவரைக் காப்பாத்தியிருப்பேன். I love him!
ஹரி கூடத்தான் அப்படி பூஜை பண்றான். கோவிலுக்கு இரண்டு வேளை போறான். கோவில் குருக்கள் கிட்ட புருஷ ஸூக்தம் கத்துக்கறான். ரோட்டில் யாரையும் ஏறெடுத்து பார்க்கறதில்ல. யார் கூடவும் பேசறதில்ல. எல்லாரும் அவனை சிலாகிக்கறாங்க. என்ன புண்ணியம்? அவன் எப்பேர்ப்பட்டவன்னு எனக்குத் தான தெரியும்!
வெளியில எல்லாருக்கும் தெரியற மாதிரி பூஜை பண்ணி, விரதம் இருந்து, சாமிய வேரோட பிடுங்கறதெல்லாம் ஒண்ணும் வேணாம்னு கல்கண்டு தாத்தா சொன்னார். மனசார சாமியை எந்த ரூபத்துல வேணுமோ அப்படி நினைச்சுக்கோன்னு சொன்னார். நான் அன்னிலருந்து கோவிலுக்கு அடிக்கடி போறதில்ல. சாமிகூட தான் நான் தினமும் பேசறேனே.
நான் இப்பெல்லாம் உமா, மீனா கூடவும் அவ்வளவா விளையாடப் போறதில்ல. போன வருஷத்துலேர்ந்து தேனு பெரியவளாயிட்டானு அவளையும் அவங்க வீட்ல விளையாட வெளியில விடமாட்டேங்கறாங்க. பெரியவளாறதுன்னா என்னன்னு அம்மாகிட்ட கேட்டேன். நானும் சுமதியும் ஒவ்வொரு மாசமும் மூணு நாள் தனியா குமுட்டி ரூமில உக்காருவோமே. அந்த மாதிரி உக்காரணும் பெரியவளானா. அது எப்படி கண்டுபிடிப்பீங்க நான் பெரியவளாயிட்டேன்னு அப்படின்னு கேட்டேன். சிரிச்சுண்டே உனக்கு ஒரு நாள் தெரியும்னு சொன்னா அம்மா.
அம்மாவும் சுமதியும் மூணு நாள் அந்த ரூமுக்குள் போயிட்டா எனக்கு வேலை அதிகம். அம்மா அந்த மூணு நாள் வந்தா வட்டப் பொட்டுக்கு பதிலா திலகப் பொட்டு வச்சுப்பா. அம்மா ரொம்ப சந்தோஷமா நாள் முழுக்க படிச்சுண்டே இருப்பா. சுமதிதான் எரிச்சலா இருப்பா. அவளுக்கு சுந்தரி வீட்டுக்கு போக முடியலன்னு கோவமா வரும். பெரிசா அவ படிக்க மாட்டா. ஏதோ குமுதம், ஆனந்த விகடன் கொஞ்சமா படிச்சுட்டு நிறைய ரேடியோ கேப்பா. எனக்கு லீவாயிருந்தா அவளோட தாயக்கட்டை, பல்லாங்குழி விளையாடுவேன். சொல்லப் போனால் அந்த ரூமே எனக்குப் பிடிக்காது. பாத்ரூமுக்கு போற வழியில வலது கைப்பக்கம் இருக்கும் அந்த ரூம். கொஞ்சம் சின்ன ரூம்தான். ரூமுக்குள் ஒரு அலமாரியிருக்கும். அதில் கொஞ்சம் துணிமணிகளும் சில வேண்டாத சாமான்களும் கிடக்கும். ஆனாலும் அந்த ரூம் அலங்கோலமாக இல்லாமல் அழகாக வைத்திருப்பாள் அம்மா. அப்புறம் பரமபதம், பல்லாங்குழி, ஸ்க்ராபிள், மோனோபொலி மாதிரி விளையாட்டு சாமான்களும் இருக்கும். ஒரு தடவை நான் மணலில் விளையாடிட்டு வரும்போது நிறைய களிமண் உருண்டைகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து வெச்சிருந்தேன். பாட்டி நான் ஸ்கூலுக்கு போயிருந்தபோது அதை வைத்து ஒரு குமுட்டி அடுப்பு செஞ்சுட்டா. அதுவும் அந்த ரூமில் ஒரு ஓரமா இருக்கும். ஸ்கூல் விட்டு வந்து பாட்டிகிட்ட சண்டைப் போட்டேன், அழுதேன் என் களிமண்ணை எடுத்ததுக்காக. ஆனால் அப்பறம் எனக்கு அந்த குமுட்டி அடுப்பை பாக்கறப்பெல்லாம் பாட்டியை நினைச்சு பெருமையா இருக்கும். அவ்வளவு அழகா பண்ணியிருப்பா பாட்டி.
அந்த ரூமை ஒட்டித்தான் புழக்கடைக் கதவு இருக்கும். அந்தக் கதவைத் திறந்துதான் கொல்லையில் இருக்கும் பாத்ரூமுக்குப் போகணும். நானும் பேபியும் ராத்திரி பாத்ரூம் போகணும்னா அம்மாவை எழுப்புவோம். நானும் பெரியவளானா அந்த ரூமுக்குள்ள தனியா படுக்கணுமேன்னு நினைச்சா பயமா இருக்கு. ஆமா! எப்ப, எப்படி பெரியவளாவோம்னு தெரிஞ்சுக்க நினைச்சேன்.
அது இன்னிக்கு எனக்கு தெரிஞ்சு போச்சு. காலைல எழுந்திருக்கும்போதே எனக்கு லேசா வயறு வலிச்சுது. என்னத்த தின்னேன் நேத்துன்னு யோசிச்சிண்டிருக்கும்போதே பாத்ரூம் போகணும்னு தோணித்து. போய்ப் பார்த்தா ஒரே ரத்தம். ஐய்யய்யோ, பெரும் வியாதி வந்திருக்கு எனக்கு. பக்கத்து வீட்டு ரமா அக்கா மாதிரி கேன்சர் வந்துடுத்தோ? நான் செத்துப் போகப் போறேன் போலிருக்கேன்னு நினைச்சப்போ அழுகை தாங்கல. என்ன பண்றது? யார் கிட்டயும் சொல்ல வேணாம். அப்படியே அலம்பிண்டு துணியை துவைச்சுட்டு வந்துடலாம்னு நினைச்சேன். பாத்ரூமை விட்டு வெளியில் வந்து மாத்துத் துணி எடுக்க என் அலமாரிக்குப் போனேன்.
சுமதியக்கா என்னைப் பார்த்தாள். ஏய், இங்க வாடி! என்னாச்சு, என்ன கறை இங்கன்னு கேட்டா. கேட்ட உடனே எனக்கு அழுகை வந்தது. இரு இங்கயேன்னு சொல்லி அம்மா அம்மான்னு கத்திகிண்டு ஓடினா. ஒண்ணும் புரியாம குழப்பத்தோட வெலவெலத்து நின்னேன். அம்மாவும் பாட்டியும் வந்தா. ரெண்டு பேர் முகத்துலயும் சந்தோஷம், கண்ணுல கண்ணீர். என் ராசாத்தின்னு பாட்டி என்னைத் தடவி சொடக்கெடுத்தா.
சுமதியக்கா நான் பெரியவளாயிட்டேன்னு சொல்லி அடுத்து என்ன செய்யணுங்கறத சொல்லிக் கொடுத்தா.
‘சனியன் ஆரம்பிச்சாச்சா, இன்னும் பல வருஷம் இதைக் கட்டிண்டு அழணும்’னு எரிச்சலா சொன்னா சுமதியக்கா.
எதுக்குதான் சுமதியக்கா எல்லாத்துக்கும் சலிச்சுக்கறான்னு தெரியல. கேட்டால் இந்த வீட்டை விட்டு சீக்கிரமா போகணும்டி. என் புருஷன் வீட்டுக்குப் போய் ஜம்முன்னு வாழணும்னு சொல்லுவா. அவளுக்குப் படிக்கறதுல ஆசையில்ல. ரேடியோல எப்பவும் பாட்டு கேட்டுண்டு முணுமுணுத்துண்டே இருப்பா. அழகழகா தாவணி போட்டுண்டு கண்ணாடில இப்படியும் அப்படியும் பார்த்துண்டே இருப்பா.
‘நாலு வருஷத்துக்கு முன்ன எம்.ஜி.ஆர். மதிய உணவுத் திட்டத்த திருச்சில ஆரம்பிச்சு வெச்சது நன்னாப் போயிண்டிருக்கு. நம்ம பேச்சி அதனாலேயே குழந்தைகள ஸ்கூலுக்கு அனுப்பறா. நல்ல இனிஷியேட்டிவ் இல்ல?’ என்று காந்தித் தாத்தாவும் (என் அம்மாவின் அப்பா) அப்பாவும் பேசிக்கொண்டிருந்தபோது பாட்டி போய் கீதா பெரியவளாயிட்டான்னு சொன்னது கேட்டது. தாத்தாவும் அப்பாவும் என்னைப் பார்க்க குமுட்டி ரூமுக்கு வந்தா. ஆசீர்வாதம் பண்ணினார் தாத்தா.
‘சௌக்கியமா இரு கண்ணே!’
எனக்கு வெட்கமா இருந்தது. இதையெல்லாம் போய் எதுக்கு பாட்டி ஆம்பளைங்க கிட்ட சொல்றான்னு ஒரு மாதிரி இருந்தது.
அப்பா, தாத்தா கிட்ட சொன்னது பரவாயில்ல. ஹரி ராத்திரி வீட்டுக்குள்ள வந்ததும் பாட்டி இந்த விஷயத்த சொன்னது எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் வேற தனியா ரூமுல இருந்தேன். ஏகப்பட்ட புக்ஸ் அலமாரில இருந்தது. ஆனாலும் A Tale of Two Cities புக்கை மறுபடி படிச்சுண்டு, படங்களை ரசிச்சுண்டு இருந்தப்போ ரூம் வாசல்ல யாரோ நிக்கற மாதிரி இருந்தது. தலைய நிமிர்த்தி பார்த்தேன். ஹரி!
கோணலாக சிரிச்சுண்டு, கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்தான். புருவங்களை மேலே தூக்கி ‘அப்பறம்’…னு சொன்னது அசிங்கமா இருந்தது. நான் தலையை குனிஞ்சுண்டு ஒண்ணும் பேசலை.
ஹரி கொஞ்ச நேரம் என்னைப் பார்த்துட்டுப் போயிட்டான். ராத்திரி பூரா தனியா இருக்கணுமேன்னு நினைச்சா பகீர்னு இருக்கு. இந்த ரூமுக்கு கதவு வேற இல்லை. இது நல்லதா, கெட்டதான்னு எனக்குத் தெரியல…
– அடுத்த அத்தியாயம், அடுத்த புதன்கிழமை
அருமையான தொடர்ச்சி. அடுத்த புதன் கிழமைக்காக காத்து இருக்கிறேன்.