” La guerre; c’est la guerre des hommes; la paix, c’est la guerre des idées.”
– Victor Hugo
18 ஜூலை 1986, வெள்ளிக்கிழமை
இன்று பதிமூன்று வயது முடிகிறது. என் பிறந்தநாள் வந்தாலே டயரி ஞாபகம் வரும். குண்டு தமிழ் டீச்சர் ஞாபகம் வரும். என் சந்தோஷம் நாசமான நாள் என்று ஞாபகம் வரும். அதனால டயரி எழுதறதே இல்லை. சாமிகிட்ட மட்டும்தான் பேசுவேன்.
‘இவ்வளவு கஷ்டப்படறியே, சாமி இருந்தா உன்னைக் காப்பாத்தி…’ என்று பெனாத்தா முடிக்கறதுக்கு முன்னாடி அவ வாயை மூடிடுவேன். அடுத்த முறை அவளை ஆரம்பிக்கவே விடக்கூடாதுன்னு நினைச்சுப்பேன்.
‘கல்கண்டு தாத்தா சொல்லிருக்கா நாம படற கஷ்டமெல்லாம் நம்ம கர்மா. அதை இப்படிக் கஷ்டப்பட்டு தீர்த்துதான் ஆகணும். நாம செய்ய வேண்டியதெல்லாம் மென்மேலும் கர்மாவைச் சேர்க்காமல் இருக்கறது மட்டுமே’ என்று அவளுக்கு பதில் சொல்வேன். பெனாத்தா வாயை மூடிப்பா. பதில் பேச மாட்டா.
நாலாம் நாள் தலைக்குக் குளிச்சு வீட்டுக்குள் வந்தேன். குமுட்டி ரூம்ல நான் இருந்த மூணு நாளும் படாத பாடு. ஒரு ராத்திரி கூட நிம்மதியாத் தூங்கலை. புழக்கடை கதவு திறக்கும்போதெல்லாம் தூக்கி வாரிப்போட்டு எழுந்திருப்பேன். காலடிச் சத்தம் கேட்கும்போதெல்லாம் விருட்டுன்னு முழிப்பேன்.
குமுட்டி ரூமில் முதல் நாள் இரவு, பிரான்ஸ் ஜெயிலில் சிட்னி கார்ட்டனுடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். டின் டின்னின் கேப்டன் ஹேடாக்குடன் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது பூனைபோல் நடந்து ஒரு உருவம் வந்தது அரைத்தூக்கத்தில் தெரிந்தது. பயந்தது சரியாப் போச்சு. ஹரிதான். வாரிச்சுருட்டி எழுந்து உட்கார்ந்து ‘பக்கத்துல வந்தே கத்திக் கூப்பாடு போடுவே’ன்னு நடுங்கிண்டே சொன்னேன்.
‘என்னடி மெரட்டறியா? நான் இங்கிருந்து புக் எடுக்க வந்தேன்னு சொல்லுவேன். உன்னை யாரும் நம்பப் போறதில்ல. புரியறதா?’ ன்னு சொல்லி பக்கத்துல வந்து இளிச்சான். எனக்கு வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சது.
‘போயிடு, போயிடு’ன்னு அழுதேன். என் மாரில் கை வச்சான். ‘என்னடி கொசு கடிச்சு வீங்கினாப்ல இருக்கு? ஆனா இதுவும் ஒரு மாதிரி கிளுகிளுப்பாதான் இருக்கு’ன்னு சொல்லி சிரிச்சுண்டே எழுந்து போனான். எனக்கு திடீர்னு ரத்தப் போக்கு அதிகமாச்சு. முகமெல்லாம், உடம்பெல்லாம் வேர்த்து அழுகைக்கு மேல ஏதோ ஒண்ணு வந்தது.
‘அம்மா’ன்னு ஆங்காரமா அழுதுண்டே கத்தினேன். உடனே வீடு முழுக்க கடகடன்னு விளக்கு எரிஞ்சுது. அம்மாவும் அப்பாவும் ஓடி வந்தா.
‘என்னாச்சுமா, என்னாச்சு’ன்னா அம்மா. என்னால கேவிக் கேவி அழ மட்டும்தான் முடிஞ்சுது. என் சட்டையெல்லாம் கறையாகியிருப்பதைப் பார்த்த அம்மா ‘பயந்துட்டா போல. நீங்க போய்த் தூங்குங்கோ. நான் வரேன்’ ன்னு அம்மா அப்பாகிட்ட சொன்னா. மெல்ல என்னை பாத்ரூமுக்கு கூட்டிண்டுப் போனா. உடையெல்லாம் மாத்திண்டு வந்ததும் ஹரி வந்தான்.
‘நடுராத்திரில என்ன கூப்பாடு போடறீங்க’ன்னான். எனக்கு ஆத்திரமா வந்தது. கார்த்தால அம்மாகிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்.
‘நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால இந்த ரூமுக்கு வந்தேன்மா. எனக்கு ஒரு புக்கு வேணுமா இருந்தது. இருட்டுல இவ மேல பட்டுட்டேன். அப்பவே கொஞ்சம் பயந்துட்டா போல. பயப்படாம தூங்குன்னு சொல்லிட்டுப் போனேன்’ன்னு பொய் சொன்னான்.
‘ஏதாவது ஹெல்ப் வேணுமா?’ன்னு கேட்டான்.
‘ஓ! அதானா?’ன்னு அம்மா சிரிச்சா. நீ தூங்கு கண்ணா. நான் பார்த்துக்கறேன்’ன்னு சொல்லிட்டா.
நான் வாயடைச்சுப் போயிட்டேன். இனி அம்மாகிட்ட என்ன சொல்றது? என்னை நம்புவாளா? யாருமே வீட்டுல நம்ப மாட்டா. ஏன்? கல்கண்டு தாத்தாவே நம்ப மாட்டார். சாமி, நீ நம்புவேல்ல? நீ பார்த்துண்டு தான இருந்த? ஏன் தடுக்கல? என்னோட கெட்ட கர்மாவைத் தீர்க்க ஆரம்பிச்சுட்டேனா? இன்னும் எவ்வளவு பார்க்கணும்?
போன மாசம் ரொம்ப விசனப்பட்டு ‘ஏன் தாத்தா, நிலா மாதிரி சாமி உன் கூடவே வராருன்னு சொன்னீங்களே. எனக்கு ஏதாவது ஒரு கஷ்டம்னா பார்த்துண்டு நிக்கறாரே. உதவிக்கு ஏன் வரதில்ல’ என்று கேட்டேன்.
‘அதெல்லாம் கர்மா குழந்த, கர்மா. மூணு வகை கர்மா… சஞ்சித, ஆகாமி, ப்ராரப்தன்னு. பழைய மூட்டை ப்ராரப்தம், தினப்படி மூட்டை சஞ்சிதம் . இனிமே கட்டப்போற மூட்டை ஆகாமி’ அப்படீன்னு சொன்னார் கல்கண்டு தாத்தா.
திருதிருன்னு முழிச்சுண்டு நின்னப்போ, புன்முறுவலோட ‘ஒரு வேட்டைக்காரன் முதுகுக்குப் பின்னாடி அம்பறாத்தூணியில் வெச்சுண்டிருக்கற அம்புகள் சஞ்சிதம். அவன் ஏற்கனவே எய்த அம்புகள் ப்ராரப்தம். எய்யப் போறது ஆகாமி. புரியறதா? இதுல சஞ்சிதமும் ஆகாமியும் நம்ம கையிலதான் இருக்கு. ப்ராரப்தத்த இப்படிக் கஷ்டப்பட்டு கழிச்சுதான் ஆகணும். கடவுளை நினைச்சுண்டே நல்ல மனசோட நம்மள சுத்தி இருக்கறவா எல்லாருக்கும் நல்லதே நினைச்சா இதோட பாதிப்பு கம்மியாகும். ஆனா தப்பிக்கறது கஷ்டம். பகவானை என்னிக்குமே கெட்டியாப் பிடிச்சுக்கோ. அவ்வளவுதான்’ என்று முடித்தார் தாத்தா.
இந்த ஹரி எந்த வகை கர்மா?
‘சரி! கொசு கடிக்காம இருக்க கொசுவத்தி சுருள் வச்சுக்கோ’ ன்னு சொல்லி எனக்கு மட்டும் தெரியற மாதிரி கண்ணடிச்சுட்டு போனான் ஹரி.
உடம்பே எனக்கு கூசித்து. ஏன் நான் பொண்ணாப் பொறந்தேன்னு யோசிச்சேன். பொண்ணாப் பொறந்ததுக்கு முதல் முதலா வருத்தப்பட்டேன்.
இரண்டாவது நாள் ராத்திரி என்னோட படுக்கச் சொல்லி அம்மாவைக் கட்டாயப்படுத்தினேன். அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் நான் கேக்கல. சரின்னு அவளும் அவளோட ஒரு ஜோடித் துணியைக் கொண்டு வந்து வெச்சுண்டா. கார்த்தால சீக்கிரமே எழுந்து தலைக்குக் குளிச்சாதான் அடுத்த ரூமுக்கே அம்மா போக முடியும். எல்லாருக்கும் அவ சமைக்கணும். பாவமா இருந்தது அவளைப் பார்க்க. ஆனா எனக்கு வேற வழி தெரியலை.
அடுத்த நாள் அம்மா, ஒவ்வொரு மாசமும் நான் இப்படி வந்து உன்னோட படுக்க முடியாது. நீதான் தைரியமா இருக்கணும். உனக்கு பதிமூணு வயசாயாச்சு. பயந்தா பொம்மனாட்டியா வாழவே முடியாதுன்னு சொன்னா.
மூணாவது நாள் நான் எவ்வளவு கெஞ்சியும் அம்மா படுக்க வரலை. தினமும் தலைக்குக் குளிச்சுட்டு உள்ள போனா எனக்கு ஆகாதுடி. நான் படுத்துப்பேன் அப்பறம்னு சொன்னா. பாட்டியும் திட்டினா. அன்னிக்கும் ஹரி வந்தான். அதேபோல செஞ்சான். இந்த முறை இன்னும் தைரியமா தடவினான். அவன் உடம்பு பூரா என் மேல படறாப்புல அழுத்திக் கட்டிண்டான். எனக்கு அருவருப்பும் வாந்தியும் வந்தது. ஆனா நான் சத்தமே போடலை. பயத்துல நாக்கு மேலண்ணத்துல ஒட்டிப் போச்சு. அவன் கொஞ்ச நிமிஷம்தான் இருந்தான். என்ன நடக்கறதுன்னு தெரியறதுக்கு முன்னாடி போயிட்டான். அவன் தொட்ட இடத்தையெல்லாம் தீயில பொசுக்கினா என்னன்னு தோணித்து.
நாலாம் நாள் குளிச்சுட்டு வீட்டுக்குள்ள போனதும்தான் நிம்மதியாச்சு. இனிமே அடுத்த மாசத்து கஷ்டத்த அடுத்த மாசம் பார்த்துக்கலாம்னு நினைச்சேன். ஆனாலும் மனசு வேற எதையுமே நினைக்க மாட்டேங்கறது. சந்தோஷமா சுத்திண்டிருந்த மனச யாரோ பிழிஞ்சு வச்சாப்ல இருக்கு. இந்த விஷயத்த என்னால கண்டிப்பா வீட்டுல யார்கிட்டயும் சொல்ல முடியாது. சுமதி கிட்ட இவன் இப்படியா நடந்துப்பான்? எனக்கு அப்படித் தெரியல. அவள் பஜாரி மாதிரி கத்தற கத்துக்கு வீடே பயந்துக்கும். மட்டுமில்லாம அவளுக்கு ஏகப்பட்ட தோழிகள். சதா சுந்தரி வீட்டுலயேதான் குடியிருப்பா. எங்க வீட்டுல நடக்கற எல்லா விஷயமும் சுந்தரிக்குத் தெரியும்.
‘அது என்னடி குசுவோ கேடுன்னு இப்படி ஓடி ஓடிப்போய் அவாத்துல உட்கார்ந்துக்கறது?’ என்று பாட்டி அங்கலாய்த்தாலும் சுமதி கேட்பதாயில்லை.
‘என்ன கீதா, இன்னிக்கு அம்மா உனக்கு குஞ்சம் வெச்சு தலைபின்னி விட்டாளாமே?’ன்னு சம்பந்தா சம்பந்தமில்லாம கேப்பா சுந்தரியக்கா.
ப்ளஸ் டூ வுக்குப் பிறகு படிக்க மாட்டேன்னு சுமதி சொல்லிட்டா. வீட்டுலயும் யாரும் ஒண்ணும் கண்டுக்கல. அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டா.
உமா, மீனா, ஜோதி, தேனு, நான்… நாங்க எல்லாரும் ஒரே ஸ்கூல்தான். ஆனா வேற வேற க்ளாஸ். அவங்களோட இண்டர்வெல்ல பேசுவேன். ‘கோமதி சனியன் எப்பவும் என்கிட்ட சண்டைக்கு வருது. என் பேனாவை எடுத்து வெச்சுட்டு அதோடதுன்னு சொல்லுது. நான் என்னடி பண்றது? என் வாழ்க்கையே இவளால பாழாப் போகுது’ன்னு தேனு சொன்னப்ப எனக்கு விசித்திரமா இருந்தது. இவங்க கிட்ட எப்படி என்னோட நிலமையை சொல்றது? புரிஞ்சுப்பாங்களான்னு தெரியலையேன்னு கவலையா இருந்தது. அவங்ககிட்ட சொல்லலாம்ங்கற நினைப்பையும் கைவிட்டேன்.
அப்பத்தான் பகவான் தான் இருக்கேன்னு நிரூபிச்சார். என் க்ளாஸ்ல கோனேஸ்வரின்னு ஒரு பொண்ணு வந்து சேர்ந்தா. இலங்கைல இருந்து வந்திருக்கா. ரொம்ப அழகா மீன் மாதிரி கண்ணோட அட்டகாசமா இருப்பா. ரொம்ப நாகரிகமாகவும் டிரெஸ் போடுவா. எங்க ஊர்லயெல்லாம் சல்வார் கமீஸ் போட்டாவே மாடர்ன் டிரெஸ் போடறான்னு வாயப் பொளந்து பார்ப்பாங்க.
எங்க ஊர் பத்தி சொல்லவே இல்லைல? உடுமலைப்பேட்டை. அழகான சின்ன ஊர். ஏழைகளின் ஊட்டினு சொல்லுவா. எங்க எஸ்.வி.ஜி. ஸ்கூல்தான் அந்த ஊர்லயே பெரிய கேர்ல்ஸ் ஸ்கூல். பொள்ளாச்சி, பழனி, அப்புறம் பக்கத்துல இருக்கற எல்லா கிராமங்களிலிருந்தும் பொம்பளைப் பிள்ளைங்க இங்க வந்து படிப்பா.
முதல் தடவையா இலங்கைல இருந்து ஒரு பொண்ணு, அதுவும் அழகான பொண்ணு. அவ போட்டுண்டு வரும் பாவாடை எனக்கு ரொம்பப் பிடிக்கும். கொஞ்ச நாளைக்கப்பறம் அவளையும் ரோஸ் பாவாடை தாவணி யூனிபார்முக்கு மாத்திட்டாங்க.
எல்லாரைப் பார்த்தும் கொஞ்சமே கொஞ்சமா சிரிப்பா. அவள் தமிழ் பேசினா ஒண்ணுமே புரியாது. உன்னிப்பா கேட்டால்தான் புரியும். கதைக்கிறென் கதைக்கிறென்னு சொல்லும்போது அவ்வளவு க்யூட்டா இருக்கும். ஆனா யார்கிட்டயும் பேசாம ஒதுங்கியே இருப்பா.
ஒவ்வொரு நாளும் முறை வெச்சு எங்களோட வகுப்பிலிருக்கற மூணு பேர் கார்த்தால மணியடிக்கறதுக்கு முக்கால் மணி நேரம் முன்னால வகுப்புக்கு வந்து க்ளாஸ்ரூமை பெருக்கித் துடைக்கணும். சாக்பீஸ் கொண்டு வந்து வைக்கணும். போர்டை நல்லா ஈரத் துணியால துடைச்சு, Roll on: No. present: Date: அப்பறம் ஒரு பொன்மொழி எழுதணும். குப்பையைக் கொட்டிட்டு வரணும். ரெண்டு பேர் பெஞ்சையெல்லாம் நகர்த்த ஒருத்தர் பெருக்குவோம். சரியாகப் பெருக்கலைன்னாலோ ஒட்டடை இருந்தாலோ க்ளாஸ் டீச்சர் கிழிச்சுடுவார்.
‘எரும மாடுங்களா! இந்த வேல கூட சரியாப் பண்ணத் தெரியாம என்னடி படிச்சுக் கிழிக்கப் போறீங்க. சுத்தத்துக்கு அப்பறம்தான் எல்லாம்.’
கோனேஸ்வரியின் முறை வந்தபோது நானும் நாகலக்ஷ்மியும் அவளோட இருந்தோம். நானும் கோனாவும் பெஞ்சுகளை நகர்த்த நாகலக்ஷ்மி கூட்டினா. ஒரு பக்கம் நானும் இன்னொரு பக்கம் கோனாவும் பெஞ்சை ஒப்பப் பிடித்து நகர்த்திக் கொண்டிருந்தபோது கொஞ்சம் பிசகி என் கணுக்காலில் பட்டது. வலியில் அப்படியே உட்கார்ந்துட்டேன். கோனாவும் நாகுவும் கவலையுடன் காலைப் பார்த்தாங்க. கொஞ்சம் கன்னிப் போயிருந்தது.
அன்னிக்கு முழுசும் கோனா என் காலைப் பற்றி விசாரித்து அந்த இடத்தைப் பார்த்துண்டு இருந்தா. ஸ்கூலுக்கு உள்ளயே இருந்த ஹாஸ்டலில் அவள் இருந்ததால ஓடிப் போய் ஏதோ களிம்பை எடுத்து வந்து தடவினா. அன்னிலருந்து நானும் கோனாவும் ஸ்கூல்ல ஒண்ணும் மண்ணுமா எல்லா இடங்களுக்கும் அலைஞ்சோம்.
இன்னிக்கு என் பர்த்டேங்கறதால கோனாக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு போனேன். நானும் அவளும் 12 சி க்ளாஸுக்குப் பின்னாடி இருக்கற பூவரசு மர நிழல்ல உட்கார்ந்து சாப்பிட்டோம்.
உங்க அப்பா, அம்மா இலங்கைல தான் இருக்காங்களான்னு கேட்டேன். ஆமான்னு தலையை மட்டும் ஆட்டினா.
இலங்கைல நடக்கற போர்னால எங்களுக்கு கொஞ்ச மாசம் முன்னாடி லீவு விட்டாங்க. அங்க ஏதோ தமிழர்களுக்கும் சிங்களவங்களுக்கும் போர்னு மட்டும் தெரியும். என்னன்னு சரியாத் தெரியாது. காந்தித் தாத்தாவும் அப்பாவும் இதே வேலையா பேசிண்டே இருப்பா. ஆனா முன்ன மாதிரி யாரோட பேச்சும் காதுக்குள்ள நுழையறதில்ல. முந்தியாயிருந்தா என்னவாம், ஏதாம்னு அப்பாக்கும் தாத்தாக்கும் நடுவுல உட்கார்ந்து கேப்பேன். ஆனா இப்ப எதுலயுமே இண்டரஸ்ட் இல்ல. என்னோட தனி உலகம்தான் எனக்குப் பிடிச்சிருக்கு.
இங்க தமிழ்நாட்டுல ஏகப்பட்ட நாள் ஸ்கூலுக்கு லீவு விட்டு ஏன் இவங்க எல்லாரும் போராட்டம் பண்றாங்கன்னு நினைப்பேன். டுவல்த் ஸ்டாண்டர்ட் அக்காவெல்லாம் வீராவேசமா பேசிண்டு இருப்பா. பிரபாகரன் பிரபாகரன்னு பெயர் காதுல விழும்.
நமக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்? மொழியைத் தவிர என்ன சம்பந்தம்? அவங்க வேற நாடு இல்லையா? இவால்லாம் எதுக்கு இப்படி கத்திண்டு இருக்கா? ஸ்டிரைக் பண்றா? சும்மா இந்த அக்காக்களுக்கெல்லாம் லீவு வேணும். அதான்னு நினைச்சேன் கோனா ஃப்ரெண்ட் ஆகற வரைக்கும்.
- அடுத்த அத்தியாயம்அடுத்த புதன்கிழமை
Gm mam, bitter n sweet episode. Thnk u mam,