Skip to content

ஹெக்ஸகோன் – 9

ஜூலை 2023

‘இந்த அபார்ட்மெண்ட் ரொம்பப் பழசு, இல்லையா?’ என்று சாந்த்ராவிடம் கேட்டால் ‘இல்லையில்லை, அவ்வளவு பழசில்லை. 1860ல் கட்டியதுதான்’ என்றார்.

பாரிஸிலுள்ள பல கட்டடங்கள் மிகவும் பழமையானவை என்றாலும் அவற்றை அழகாக பராமரித்து வருகிறார்கள். 1200களில் கட்டிய கட்டடங்களையெல்லாம் புதுப்பித்து உறுதியாக வைத்திருக்கிறார்கள். அரசாங்கத்தைக் கேட்காமல் கட்டடங்களின் வெளியில் எந்த மாற்றமும் செய்ய இயலாது.

நாத்ருதாம் கட்ட உபயோகித்தக் கல்லில்தான் இந்த வீட்டின் இந்தப் பகுதி கட்டப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பெருமை கொள்கிறார்கள். ஈஃபில் டவர், நாத்ருதாம், மோன்மார்த்தர் போன்ற புகழ் வாய்ந்த சின்னங்கள் உங்களின் பால்கனியில் இருந்து பக்கத்தில் தெரிந்தால் உங்கள் வீட்டின் விலை சில கோடிகளுக்கு எகிறும்.

வீதியில் நடக்கும்போது அபார்மெண்ட்களின் முன் நின்று அண்ணாந்து பார்ப்பார் சாந்த்ரா. கண்கள் பளிச்சிட ‘இந்தக் கட்டடங்களுடைய கூரைகள்தான் என்னை வசீகரிக்கின்றன’ என்று புன்னகைத்துக்கொண்டே சொல்வார். கையை நீட்டி ‘இதோ பார்த்தாயா! ஓஸ்மான் (Haussmann) கட்டிய கட்டடங்களிலெல்லாம் இரண்டாம் மாடிக்கும் ஐந்தாம் மாடிக்கும் மட்டுமே பால்கனிகள் உண்டு’ என்பார். அதிசயமாக இருந்தது.

ஓஸ்மான் 1850ல் இருந்து 1870 வரை மூன்றாம் நெப்போலிய மன்னன் ஆணைப்படி நகரத்தை முழுமையாக சீரமைத்தார். ஏகப்பட்ட எதிர்ப்புக் குரல்கள் கிளம்பினாலும் பாரிஸை அதிநவீனமாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருந்த தெருவை புகழ்பெற்ற ஷான்ஸ் எலிஸேவாக (Champs Elysees) மாற்றினார். தெருவெங்கும் மரங்களை நட்டார். நகரத்தில் ஆங்காங்கே பல பூங்காக்களை அமைத்தார். இப்போது நாம் பார்த்துக்கொண்டாடும் பாரிஸ் ஓஸ்மானின் கைங்கர்யம்.

அதிலிருந்து நானும் பால்கனிகளைப் பார்க்க ஆரம்பித்தேன். பால்கனிகள் விஸ்தாரமாகவெல்லாம் இருக்காது. ஒரு சன்னமான ஆள் பத்து தப்படி நடக்கக் கூடிய அளவிற்குத்தான் இருக்கும். பெரிய வீடெல்லாம் பாரிஸில் கனவுதான். பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே பெரிய பால்கனி சாத்தியம்.

சாந்த்ராவினுடைய அபார்ட்மெண்ட் ஐந்தாம் மாடி. சிறிய வீடுதான். ஆனால் வசதி மிக்கது. வாசல் கதவைத் திறந்தவுடன் ஒரு திறந்த சமையலறை. அதன் வழியாகத்தான் வீட்டினுள் நுழைய முடியும். சமையலறையிலிருந்து போனால் இடது பக்கம் ஒரு படுக்கையறை, வலது பக்கம் ஒரு சிறிய சதுர லிவிங் ரூம். அங்குதான் குறுகலான ஒரு பால்கனி. படுக்கையறைக்கும் லிவிங் ரூமுக்கும் நடுவே இருக்கும் சின்னப் பாதையில் சென்றால் ஒரு வளைந்த இரும்புப் படிக்கட்டு. படிக்கட்டின் இடதுபுறம் கழிவறையுடன் கூடிய ஒரு குளியலறை. படிக்கட்டின் மேலே ஏறிச் சென்றால் ஒரு நீள அறை. நடுவில் ஒரு சிறிய படுக்கையறை.

அந்தப் படுக்கையறையை ஷார்லத் என்ற 21 வயது பெண்ணுக்கு வாடகைக்கு விட்டிருந்தார் சாந்த்ரா. அந்தப் பெண்ணின் வீடு ஒயினுக்குப் புகழ்பெற்ற நகரமான பார்தோவில் இருந்தது. அவள் எட்டு மாதத்துக்கு அப்ரெண்டிஸாக வேலை செய்ய பாரிஸ் வந்திருந்தாள்.

மேலே அந்த நீள் அறையின் இடது பக்க மூலையில் எனக்கு ஒரு கட்டிலும், வலது பக்க மூலையில் சிந்துஜாவுக்கு ஒரு கட்டிலும் போட்டிருந்தார் சாந்த்ரா.

‘மன்னிக்கவும், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். நான் பொதுவாக இங்கிருக்கும் படுக்கையறையை வாடகைக்கு எல்லாம் விடுவதில்லை. ஆனால் அடுத்த வருடம் ஜப்பான் செல்ல பணம் வேண்டியிருப்பதால் வாடகைக்கு விட்டிருக்கிறேன். அதனால் உங்களுக்குத் தர இயலவில்லை’ என்றார்.

சாந்த்ரா பல ஆவணப் படங்கள் எடுத்திருக்கிறார். பிலிம் எடிட்டராகவும் இருந்தவர். அவருக்கு இந்தியா அத்துப்படி. எம்ஜிஆர் பற்றிய டாக்குமெண்டரி கூட எடுத்திருப்பதாகச் சொன்னார். பாரிஸில் இறங்கிய அடுத்த நாள் காலையில் ‘எனக்கு தோசை இட்லி எல்லாம் செய்ய முடியாது. பிரெட்தான் உங்களுக்கு’ என்றார்.

எங்களுக்காக பகெத் (Baguette) என்ற நீள ரொட்டி, ஜாம், வெண்ணெய், முட்டை, பழங்கள், தயிர் எல்லாம் வாங்கி வைத்திருந்தார். இடுப்பளவே உள்ள ஃப்ரிட்ஜ் ஒன்று இருந்தது. அதே அளவுள்ள ஃப்ரீஸர் தனியாக இருந்தது. அந்த ஃபிரிட்ஜில் மூன்று தட்டுகள். நடுத்தட்டு ஷார்லத்தினுடையது. அதிலிருக்கும் பொருட்களை எடுக்க வேண்டாம் என்று கூறினார். ஷார்லத் காலையிலோ அல்லது மாலையிலோ ஏதேனும் சமைத்து சாப்பிடுவாள்.

நாங்கள் அந்த வீட்டிற்கு சென்ற பிறகு ஒரு மூன்று நாட்கள் ஷார்லத்தைப் பார்த்திருப்போம். பிறகு அவ்வளவாகப் பார்க்கவில்லை. நடுவில் அவள் இரண்டு நாள் ஊருக்குப் போய் விட்டிருந்த சமயத்தில் துணி துவைக்க வேண்டுமானால் ஷார்லத்தின் அறையில் வாஷிங் மெஷின் இருப்பதாகவும் துவைக்கலாம் என்றும் சாந்த்ரா கூறினார்.

அந்த ரூமிற்குள் நான் நுழைந்ததும் ஸ்தம்பித்து விட்டேன். எல்லா சாதனங்களும் அலங்கோலமாகக் கிடந்தன. கட்டிலில் மடிக்காத போர்வை ஒன்று சுருண்டு கிடந்தது. என் முகத்தைப் பார்த்த சாந்த்ரா ‘அது அவள் அறை. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், வீட்டிற்கு பங்கம் வராத வரை’ என்றார்.

லாவண்யா தங்கியிருந்த கீழ்வீட்டில் இருந்த குஜராத்திக் குடும்பத்தினர் பாரிஸில் ஒரு உணவகம் வைத்திருந்தார்கள். அவ்வப்போது சாந்த்ராவுக்கு சப்பாத்தியும் தாலும் பாஸ்மதி சாதமும் கொடுப்பார்கள். நாங்கள் இருந்த சமயத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எங்களுக்கு குஜராத்தி சாப்பாடு கிடைத்தது.

‘ஜப்பான் செல்கிறாயா? எப்போது? யாரோடு?’ என்று கேட்டேன்.

‘அடுத்த வருடம் செல்லலாமென்றிருக்கிறேன். தனியாகத்தான் போவதாக இருந்தேன். ஆனால் என் தோழி ஒருத்தியும் கூட வருவதாக இப்போது சொல்லியிருக்கிறாள். பார்க்கலாம்’ என்றார் சாந்த்ரா.

சில சமயம் சாந்த்ரா ஜப்பான் மேப்பை விரித்து வைத்துக்கொண்டு ஏதோ எழுதிக்கொண்டிருப்பார். சாந்த்ரா வயதில் உள்ளவர் யாரேனும் நம் ஊரில்  ‘உடம்பு வலிக்கிறது’ என்று சொன்னால் ‘வயசாச்சு இல்ல. அப்படித்தான் இருக்கும்’ என்று அனைவரும் சொல்லிச் சொல்லி நமக்கும் ஐம்பது வயதாகி விட்டாலே இனி சுடுகாட்டுக்கு காத்திருக்க வேண்டியதுதான் என்ற எண்ணம் உருவாகிவிட்டிருக்கும். அதனால் எனக்கு சாந்த்ராவைப் பார்த்து ஒரே பிரமிப்பாக இருந்தது.

நான் அங்கிருந்த பதிமூன்று நாட்களில் ஒரு நாள்கூட அவர் தனக்கு வயதாயிற்று என்றோ, இனிமேல் இதற்கெல்லாம் ஆசைப்படக்கூடாது என்றோ சொல்லிக் கேட்கவேயில்லை. சுறுசுறுப்பாக இளம்வயதினரைப்போல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு கட்டிலை, மேஜையை இழுத்து வீட்டை சுத்தம் செய்துகொண்டு இருப்பார்.

‘ஷார்லத் இருப்பது நல்லதுதான். உனக்கும் பேச்சுத் துணைக்கு ஆள் இருக்கும்’ என்று நான் ஒரு நாள் சொன்னதும் கோபம் வந்துவிட்டது சாந்த்ராவுக்கு.

‘பேச்சுத் துணைக்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். எனக்கென்று நண்பர்கள் படையே உண்டு. இந்தக் குட்டியிடம் பேசி எனக்கெதுவும் ஆகப்போவதில்லை’ என்றார். நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

எழுபத்தைந்து வயது அவருக்கு. 2020ல் அவருக்கு மார்பகப் புற்று நோய் வந்து மார்பகங்களை அகற்றியிருக்கிறார்கள். ஆனாலும் அதை ஏதோ ஒரு காய்ச்சல் வந்ததுபோல் அலட்சியமாக சொல்வார்.

‘இப்போது நன்றாக இருக்கிறேன். ஆறு மாதத்துக்கு ஒரு முறை செக்கப் மட்டும் செய்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான். இந்த வியாதி வருவதற்கு முன்னால் வரை சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தேன். இனிமேல் தான் மறுபடி ஆரம்பிக்க வேண்டும்’ என்றார்.

நம்மூர் ரயிலில் மேல் பெர்த் கிடைத்தால் கீழ் பெர்த்தை தரும்படி இளைஞர்களிடம் யாசிக்கும் நாற்பது வயதுப் பெண்கள் நினைவுக்கு வந்தனர்.

*

சாந்த்ராவும் நானும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்போம். முடிந்தவரை அவருடன் பிரெஞ்சிலேயே பேசுவேன். ‘உனக்கு நிறைய பிரெஞ்சு சொற்கள் தெரிந்திருக்கின்றன. நன்றாகவும் பேசுகிறாய். இன்னும் தங்குதடையின்றி யோசிக்காமல் மட்டும் பேச வேண்டும். பேசிக்கொண்டேயிருந்தால் இரண்டு மாதத்தில் சரளமாகப் பேசி விடுவாய்’ என்று உற்சாகமளிப்பார். முதன்முதலாக ஆங்கிலம் பேசும்போது எவ்வளவு சந்தோஷமாக இருந்ததோ அதைவிடப் பல மடங்கு ஆனந்தமாக இருந்தது பிரெஞ்சில் பேசியது.

‘உன்னோட ஓட்டை பிரஞ்சை வைத்து எப்படியோ சமாளிக்கிறாய்’ என்று என்னிடம் ஒரு வார்த்தைகூட பிரஞ்ச் தெரியாத லாவண்யா சொன்னது வேடிக்கையாக இருந்தது.

வெள்ளைக்காரப் பெண்மணிகள் (ஐரோப்பியர்கள், ஆஸ்திரேலியர்கள் மற்றும் அமெரிக்கர்கள்)சிலருடன் எனக்கு ஏற்பட்டிருந்த, மற்றும் கேட்கக் கிடைத்த கசப்பான சம்பவங்களினால் அசௌகரியமாகத்தான் சாந்த்ராவிடம் இருக்கப் போகிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அவர் மிகப் பெரிய ஆச்சரியம்.

2009ல் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது மெல்போர்னிலிருந்து சிட்னி வரும் வழியில் ஒரு பெட் அண்ட் பிரேக்ஃபாஸ்டில் தங்கியிருந்தோம். அங்கே சாப்பாட்டு அறையில் இருந்த ஒரு ஈஸிசேரில் என் தோழி உட்கார,உரிமையாளரான நடுத்தர வயதுப் பெண்மணி ‘எழுந்திரு! அது என் கணவரின் நாற்காலி. யாரும் உட்காரக்கூடாது ‘ என்று மிகக் கடுமையாகச் சொன்னார். அவ்வளவு கடுமையாக சொல்லவேண்டிய அவசியம் இருந்திருக்கவேயில்லை. அதேபோல் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் மேஜையின் மேல் இருந்த பாட்டிலை தன்னுடையது என்று நினைத்து அதை எடுத்து என் தங்கை தண்ணீர் குடிக்க எத்தனித்தபோது ஒரு அமெரிக்கப் பெண்மணி தலைதெறிக்க ஓடி வந்து ‘என் தண்ணீர்’ என்று பிடுங்கிக் கொண்டார். ‘காபி ஆறி விடும் குடித்து விடுங்கள்’ என்று இருமுறை சொன்னதற்காக ‘என் ப்ரைவஸியில் நுழைகிறாய். நான் எப்போது எப்படிக் குடிக்க வேண்டும் என்று நீ சொல்லித் தராதே’ என்றெல்லாம் பேச்சு கேட்டதுண்டு.

என் தோழி ஒருவரையும் அவர் நண்பர்களையும் அமெரிக்கர் ஒருவர் புது வருடப் பிறப்பு அன்று இரவு சாப்பாட்டிற்கு அவர் வீட்டிற்கு அழைத்திருக்கிறார். இவள் மட்டும் அந்தக் கூட்டத்தில் முட்டைகூட சாப்பிடாத வெஜிடேரியன். இவளுக்காக அவர்கள் எதுவும் தனியாக சமைத்திருக்கவில்லை. ‘உனக்கென்று தனியாக சமைக்க எனக்கு நேரமில்லை’ என்று அந்த வீட்டுப் பெண்மணி சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார். அவள் ஏதோ பழரசத்தைக் குடித்துவிட்டு பட்டினியாக வந்திருக்கிறாள்.

அதனால் கொஞ்சம் எச்சரிக்கையுடனேயே சாந்த்ராவை அணுகினேன். டைனிங் டேபிளின் நாற்காலியைத் தவிர வேறு எதிலும் உட்கார மாட்டேன். டைனிங் டேபிளுக்கு அருகில் இருக்கும் சோஃபா மெத்தென்று அழகாக இருந்தாலும் உட்கார மிகவும் தயக்கமிருந்தது. ஆனால் சாந்த்ரா நம் பாட்டிகளைப்போல் வாஞ்சையுடன் இருந்தார். வா தங்கம், வா கண்ணு என்று சொல்வதுபோல் ‘மா ஷெரி’  என்று வாஞ்சையுடன் அழைத்தார். நம்மூர் பாட்டிகளைப்போல் வம்பும் உண்டு. உலக அரசியல் எல்லாம் அத்துப்படி.

‘உங்க நாட்டுல ஒரு மோடி இருப்பதுபோல் எங்கள் நாட்டிலும் ஒரு கோமாளி இமானுவேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறது’ என்று படாலென்று பேசி அதிர வைப்பார்.

சாந்த்ராவுக்கு இரண்டு குழந்தைகள். ஒரு மகள். ஒரு மகன். மகன் பிரெஞ்சு சினிமா நடிகர். அவர் நடித்த Ornithologist என்ற படம் பல விருதுகள் வாங்கியிருக்கிறது. பாரிஸ் செல்லப் போகிறேன் என்றதும் Mubiல் அந்தப் படத்தைப் பார்த்தேன். அதில் பல விவிலியக் குறியீடுகள் இருந்தன. எனக்குப் படம் சரியாகப் புரியவில்லை. பாரிஸ் சென்று சாந்த்ராவிடம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

‘ஆர்னிதாலஜிஸ்ட் படம் பார்த்தேன். உங்கள் மகன் நன்றாக நடித்திருந்தார்’ என்று சொன்னேன்.

‘படம் புரிந்ததா?’ என்று புன்னகைத்துக் கொண்டே கேட்டார்.

‘இல்லை. உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்தேன்’.

‘ஹ! எனக்கும் புரியவில்லை’ என்று கண்ணடித்துச் சிரித்தார்.

இந்தக் கண்ணடிக்கும் பழக்கமும் பல பிரெஞ்சுக்காரர்களிடம் பார்த்தேன். பாரிஸ் விமான நிலையத்தில் இமிக்ரேஷன் ஆஃபீஸர் என் பாஸ்போர்ட்டில் முத்திரை குத்திவிட்டு ‘ஹேவ் அ நைஸ் ஸ்டே’ என்று கண்ணடித்துச் சிரித்தார். ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுவிட்டு வெளியேறும்போது முன்னால் இருப்பவரிடம் ‘மெர்ஸி’(நன்றி) சொன்னவுடன் தலையசைத்துக் கண்ணடித்தார். வீதியில் வழி சொன்னதற்கு நன்றி சொன்னவுடன் கட்டை விரலை உயர்த்திக் கண்ணடித்துச் சிரித்தார் ஒரு நபர். மோனே அருங்காட்சியகத்தில் என் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு நன்றி சொன்னதும், அழகான பல்வரிசையுடைய ஆறடி உயரமுள்ள ஆஜானுபாகுவான அந்தப் போலீஸ்காரர் கண்ணடித்து சிரித்தபோதுதான் மனது லேசாக ஏதோ செய்தது.

*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Gayathri R

Gayathri R