Close Menu
GayathirGayathir
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    GayathirGayathir
    • முகப்பு
    • என்னைப் பற்றி
    • சிறுகதைகள்
    • நேர்காணல்கள்
    • கட்டுரைகள்
    • மொழியாக்கங்கள்
    • நாவல்
    GayathirGayathir
    Home»சிறுகதைகள்»நுண்மை
    சிறுகதைகள்

    நுண்மை

    gayathri RamBy gayathri RamNovember 3, 2023Updated:March 29, 2025No Comments8 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ஜனவரி 22, 2022

    நசநசவென்று இருந்தது கவிதாவுக்கு. அவளுடைய உடை தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தது. டஃபில் பேகிலிருந்த மாற்றுடையை எடுத்துக் கொண்டு வருணுடைய டான்ஸ் ஸ்டுடியோவின் மேலே இருந்த ராகேஷின் ஜிம்மில் அனுமதி பெற்று ஒரு குளியல் போட்டு உடை மாற்றி வந்தாள். மலேஷியாவில் நடக்கப் போகும் நட்சத்திர இரவு நிகழ்ச்சிக்காக நடனப் பயிற்சி தினமும் நடந்து கொண்டிருந்தது. அவளுடன் ஆடுபவர்கள் எல்லோரும் அவளுக்குப் புதியவர்கள். இதற்கு முன்னால் அவர்கள் யாரையும் அவளுக்குப் பரிச்சயம் இல்லை. டான்ஸ் ஸ்டுடியோவை விட்டுத் தளர்வாக வெளியே வந்தாள்.

     

    கவிதா இப்போதுதான் சினிமாவில் காலூன்ற ஆரம்பித்திருக்கிறாள். வெண்ணிலவே முகம் காட்டு படத்தில் ஹீரோயினுக்குத் தோழியாக நடித்திருந்தாலும் காத்திரமான பாத்திரப் படைப்பு. அந்தப் படம் அமோக வெற்றி பெற்றதால் மக்கள் இப்போது அவளை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். படங்களில் நடிக்க வாய்ப்பும் வந்து கொண்டிருக்கிறது. வெ.மு.காவுக்குப் பிறகு அவளது வாழ்க்கை சட்டென்று மாறிப் போனது.

     

    ஒரு மென்பொருள் நிறுவனத்தில் இஷ்டமில்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் கவிதா. அன்று எப்போதும்போல் ராகேஷின் ஜிம்முக்குப் போனவளை கீழே டான்ஸ் ஸ்டுடியோவுக்கு வந்திருந்த ஒரு வளர்ந்து வரும் இயக்குநர் ஒருவர் பார்த்து நடிக்க முடியுமா என்று கேட்க அவளுடைய சினிமா பயணம் ஆரம்பித்தது. முதலில் தயங்கினாலும், அந்த வெளிச்சம், ஒப்பனை, சக நடிகர்கள், அவர்களது அலட்டலான அணுகுமுறை எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தது. அவளால் மிகச் சுலபமாக கஷ்டப்படாமல் நடிக்க முடிந்தது. அவளுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பதாக பார்ப்பவர்கள் அனைவரும் கூறினார்கள்.

     

    ‘எவனும் தப்பா நடக்கலைல்ல’ என்று கேட்ட வருணிடம் ‘சத்தியமா இல்லைணா. யாரும் தப்பாகக் கூடப் பார்க்கலை. வெளிய எவ்வளவு கேள்விப்படறோம். பயத்துடன்தான் போனேன். ஆனா அப்படியொண்ணும் இல்லை.’

     

    ‘நீயா சான்ஸ் கேட்டு போகலைல. அதனாலயா இருக்கும்.அதுவுமில்லாம டான்ஸ் மாஸ்டர் வருணோட ஃபிரண்டுன்னு கூட பேசாம இருந்திருக்கலாம். நம்ம ஊர் மாதிரி இல்லப்பா. இங்க ஜாக்கிரதையா இருக்கணும். காம்ப்ரமைஸ் பண்ணி நடிக்கணும்னு அவசியமில்லைனு நான் நினைக்கறேன்…என்ன’ என்றான் சென்னையில் அவளுடைய ஒரே தோழனான வருண். அவளை விட பதினைந்து வயது பெரியவன்.

     

    ‘சரிதான். கவனமா இருக்கேன்.’

     

    மணி ஒன்பது. முந்தின தினம் அமாவாசையாதலால் இரும்பு தோசைக்கல் போல் இருட்டு பரவியிருந்தது. “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, இந்த பேட்ச்சை முடிச்சுட்டு நான் வேணா ட்ராப் பண்றேன்” என்றான் வருண். ஆனால் ‘பாவம். அடையாறில் என்னைக் கொண்டு வந்து விட்டுவிட்டு மறுபடி கஸ்தூரி ரங்கன் ரோடிற்கு வர வேண்டும்’ என்று நினைத்தபடி “வேண்டாம், ஊபரில் போயிடுறேன்” என்றாள்.

     

    “சரி, போய் சேர்ந்து மெசேஜ் பண்ணு. அண்ட் வண்டி ட்ராக்கிங் நம்பர் அனுப்பு” என்றான்.

     

    “சரி” என்று சொல்லிவிட்டு வாசலில் இருந்த காவலாளியைப் பார்த்து புன்னகைத்தபடியே வெளியே வந்தாள்.

     

    ‘ஊபர் ஷேரில் போய் விடலாம். எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த வருடம் எனக்கே எனக்கான காரும் டிரைவரும் இருப்பார்கள்’ என்று நினைத்துக் கொண்டாள் கவிதா. தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமாக இல்லை. பொதுவாகவே கஸ்தூரி ரங்கன் தெருவில் ஆள் போக்குவரத்து சீக்கிரம் அடங்கி விடும். எட்டு மணிக்கு மேல் வெளியில் நின்றால் வேறு ஏதாவது நினைத்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு. அந்தத் தெருவின் ஓரத்தில் ஓரிரு பெண்கள் தினமும் எட்டு மணி வாக்கில் அலங்காரத்துடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறாள். அதனாலேயே இருட்டிய பிறகு அந்த இடத்தில் வெளியே நிற்க சங்கடமாக இருந்தது அவளுக்கு.

     

    மதிலுக்கு உள்ளேயே நின்றுகொண்டு ஊபர் ஷேர் அழைத்தாள். அந்த இணைப்பை வருணுக்கு அனுப்பினாள். ஊபர் ஷேரில் தன்னைத் தவிர ஒன்றோ இரண்டோ பேர் இருப்பார்கள். தனியாக பயப்பட்டுக் கொண்டு போக வேண்டாம் என்று நினைத்தாள்.

     

    ஜிபிஎஸ்ஸில் டாக்ஸி அந்த தெருவுக்குள் நுழைவது தெரிந்ததும் வெளியே வந்தாள். எதிர்பக்க நடைபாதையில் அவ்வப்போது கொய்யாப் பழக்கடை போடும் தாட்டியான பெண்மணி கடையை ஏறக்கட்டிக் கொண்டிருந்தார்.

     

    சிறிது நேரத்தில் ஒரு வெள்ளை எடியோஸ் வந்தது. பின் சீட்டில் ஒரு பெண்ணும் முன் சீட்டில் ஒரு இளைஞனும் இருந்தார்கள். ஏறும்போது முன் சீட்டில் இருந்த இளைஞன் அவளை உற்றுப் பார்த்தான். வண்டியினுள் உட்கார்ந்தாள். பின் சீட்டில் இருந்த பெண் புன்முறுவல் செய்ய கவிதாவும் பதிலுக்கு முறுவலித்தாள். அப்பெண்ணிற்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். ‘பீபா சல்வார், ஃபாசில் ஹாண்ட்பேக், ஆளும் நன்றாகத்தான் இருக்கிறாள்’ என்று கவிதா நினைத்தாள். முன் சீட்டு இளைஞன் திரும்பித் திரும்பி இரண்டு முறை கவிதாவைப் பார்த்தான். சுருள் சுருளான தலைமுடியுடன், வெளுப்பாக இருந்தான். கவிதாவைவிட ஓரிரண்டு வயது அதிகமாக இருக்கலாம். இருபத்தெட்டு அல்லது இருபத்தொன்பது? “ஹே! நீங்க வெண்ணிலவே முகம் காட்டுல நடிச்ச கவிதா தான?” என்றான். கவிதா புன்னகையுடன் ‘ஆமாம்’ என்றாள்.

     

    ‘நீங்க ஊபர் ஷேர்லயா? எப்படி? உங்களுக்கு வண்டி இல்லையா” என்று கேட்டான். கவிதாவுக்கு எரிச்சலாக வந்தது. ‘இதென்ன வேண்டாத கேள்வி?’ பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.

     

    முன் சீட்டு இளைஞன் சளசளவென்று விடாமல் சினிமாவைப் பற்றிப் பேசிக் கொண்டும் கேள்வி கேட்டுக்கொண்டும் வந்தான்.

     

    பின் சீட்டுப் பெண் கைபேசியை நோண்டிக் கொண்டு தன் உலகில் சஞ்சரித்திருந்தாள். இம்மாதிரி சமயங்களில் கைபேசி எவ்வளவு பெரிய வரப்பிரசாதம். பிடிக்காவிட்டாலும் இசை கேட்கும் பாவனையுடன் தன் இயர் போனை எடுத்து காதில் மாட்டிக் கொண்டாள்.

     

    சி.பி.ராமசாமி ரோடில் இருக்கும் கீர்த்திலால் ஜுவல்லரியின் எதிர்பக்கத்தில் பின் சீட்டுப் பெண் இறங்கினாள். ‘ஐயோ, இரண்டு ஆண்களுடன்…’ என்று அவள் சன்னமாகப் பதறியது ஓட்டுநருக்குத் தெரிந்ததோ என்னவோ, ‘மேடம், அடுத்தது உங்களை விட்டுறேன் அஞ்சு நிமிஷத்துல’ என்று ரியர் வ்யூ மிரரில் அவளைப் பார்த்தபடி சொன்னார்.

     

    அந்த இளைஞன் இன்னும் பேச்சை நிறுத்தவில்லை. தனக்கு சினிமா தண்ணீர் பட்ட பாடாக்கும் என்று அலட்டினான். பாலுமஹேந்திராவும், மணிரத்னமும், குரசோவாவும், ஹொடரோவ்ஸ்கியும் அவனிடம் அரைபட்டு மிதிபட்டனர்.

     

    “ரெண்டு மணி நேரப் படம் எல் தோபோ. கண்ணை எடுக்கலையே ஸ்க்ரீனை விட்டு. கன்னாபின்னானு கனவு கண்ட மாதிரி அதே சமயம் ஒரு ஒழுங்கோட, பிச்சுட்டான் பிச்சு…பாத்துருக்கீங்களா நீங்க…?”

     

    ‘இஸபெல் அட்ஜானியோட La journée de la jupe பார்த்திருக்கியாடா நீ மயிரு.’

     

    “சாரிங்க. தமிழ் படம் தவிர எதுவும் பார்த்ததில்ல” என்ற அவளின் வார்த்தைகளில் அடக்கிய கோபம் தெரிந்தது. அவன் அவளை ஒரு வேற்றுலக ஜந்துவைப் பார்ப்பதுபோல் பார்த்து விட்டு ‘இந்த பாலு…’ என்று தொடர்ந்தான்.

     

    அவன் தலைமுடியைப் பிடித்து இழுத்து ‘வாயை மூடறியா?’ என்று கத்த வேண்டும்போல் இருந்தது கவிதாவுக்கு.

     

    தன் அபார்ட்மெண்டுக்கு இரு வீடுகள் தள்ளியே நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொண்டாள். ‘பை மேடம். பார்த்ததுல சந்தோஷம். ராத்திரி நேரத்துல பயமில்லாம வறீங்க இப்படி ஊபர்ல. பழகியிருக்கும் உங்களுக்கு. இல்ல’ என்று ஆங்கிலத்தில் சொல்லி அசிங்கமாகச் சிரித்தான். அவனுக்கு பதில் சொல்லாமல் ஓட்டுநரிடம் ‘கார்ட்ல பே பண்ணிட்டேன்’ என்று சொல்லிவிட்டு கார் கிளம்பியதும் மெல்ல நடந்து தன் அபார்ட்மெண்ட் லிஃப்டில் ஏறினாள்.

     

    இருட்டி விட்டால் ஆண் பிள்ளை யாரையாவது துணைக்கு அனுப்பாமல் வெளியில் செல்ல விட மாட்டாள் அவள் அம்மா. உடுமலைப்பேட்டையிலிருந்து சென்னைக்கு வந்து வேலை செய்வதே அவள் அம்மாவுக்குப் பிடித்தமில்லை. அந்த ஊரில் தன் படிப்புக்கு ஏற்ற வேலை இல்லையென்றும் தனக்கு நிறைய இன்னும் கற்றுக் கொள்ள ஆசை, ஆனால் அங்கிருந்தால் அது நிறைவேறப் போவதில்லை என்றும் அம்மாவுக்குச் சொல்லிப் புரிய வைத்தாள் கவிதா. அரை மனதுடனும், தினமும் வீடியோ கால் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடனும் அவள் அம்மா அனுப்பி வைத்திருந்தாள். அப்படி ஒன்றும் அவள் தனியாக இல்லை. மாதம் ஒரு வாரம் அவள் அம்மா வந்து இருப்பார். ஒரு வாரம் அவள் அப்பா இருப்பார். மட்டுமில்லாமல் அவ்வப்போது உடுமலையிலிருந்து குறிஞ்சி துணிக்கடை கட்டப்பையில் அவளுக்குப் பலகாரங்களை எடுத்துக் கொண்டு சென்னை வரும் சொந்தங்களுக்கு அவள் வீடுதான் சத்திரம் என்றாகிப் போனது.

     

    சிறு ஊரிலிருந்து வந்திருந்த கவிதாவுக்கு இன்னும் சென்னையும் அதன் இளைஞர்களும் தந்த பிரமிப்பும் சிறு கலவரமும் கிட்டத்தட்ட ஒரு வருடமாகியும் குறையவில்லை. சிறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்திருந்த பல பெண்களும் அவள் கருத்தையே எதிரொலித்தனர் . இரவில் தனியாகச் செல்ல பயம், ஆண்கள் கூடியிருக்கும் இடங்களுக்குச் செல்ல பயம். ஆண் யாராவது வந்து பேசினால் ‘இவன் எந்த நோக்கத்துடன் பேசுகிறான்’ என்று மனது எடை போட்டுக் கொண்டே இருக்கும்.

     

    உடம்பெல்லாம் வலித்தது கவிதாவுக்கு. நைட்டிக்கு மாறிவிட்டு வருணுக்கும் ஊரிலிருக்கும் அம்மாவுக்கும் வீட்டுக்கு வந்துவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பினாள். ஏன் பேசவில்லை என்று அம்மா கோபிப்பாள். பேசத் திராணி இல்லை. காலையில் பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாள்.

     

    வாட்ஸப்பை பார்த்து விட்டு தூங்க ஆயத்தமானபோது டிங் என்ற வாட்ஸப் செய்தி வந்ததற்கான ஒலி கேட்டது. எடுத்துப் பார்த்தால் தெரியாத நம்பரிலிருந்து ‘ஹாய்’ என்று வந்திருந்தது. ‘யாராக இருக்கும்’ என்று யோசித்தாள். யாருக்கும் தன் எண்ணை அவள் தருவதே இல்லை. தொலைபேசி எண் கேட்பவர்களிடம் தன் தந்தையின் எண்ணையோ அல்லது வருணின் எண்ணையோ கொடுத்து விடுவாள். அவர்கள் முக்கியமான விஷயமாக இருந்தால் தன்னிடம் சொல்வார்கள். இல்லையென்றால் அவர்களே சமாளித்து விடுவார்கள். இது ஒரு வகையில் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. தன்னுடன் வேலை செய்யும் பெண்கள் தொலைபேசியினால் படும் அவஸ்தைகளும் அவளை இப்படி எச்சரிக்கையாக இருக்க வைத்தது.

     

    ‘யார்?’என்று பதிலுக்குக் கேட்டாள்.

     

    ‘கவிதா தானே?’

     

    ‘ஆம்’

     

    ‘கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.’

     

    கவிதாவுக்கு எரிச்சல் மேலிட்டது. யாருன்னு கண்டுபிடிங்க என்று சொல்பவர்களை சப்பென்று அறைய வேண்டும் போல் இருக்கும். நேரில் முகம் காட்டிக் கேட்டாலாவது ஒரு அர்த்தம் உண்டு. அதுவே சமயத்தில் திணறுவதுண்டு. இந்த லட்சணத்தில் வெறும் எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு கண்டுபிடியுங்கள் என்று கேட்பது கேனத்தனத்தின் உச்சம்.

     

    ‘யார்?’

     

    ‘உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது’ என்று சொல்லி இரண்டு ஸ்மைலிக்கள் வந்தன.

     

    அசந்து போனாள். ஏதாவது கிறுக்கு தெரியாமல் எண்ணை அமுக்கி விட்டதோ என்று நொந்து கொண்டாள்.

     

    ப்ளாக் பண்ணிவிட்டு தூங்கப் போகலாம் என்று நினைத்தாலும் முடியவில்லை அவளால். ஏனென்றால் அன்று காலை நடன வகுப்புக்கு வந்திருந்த ஒரு புகழ் பெற்ற இயக்குநர் அவளை அவருக்கு மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லியிருந்தார்.

     

    ‘அந்த ஆளாக இருந்தால் கண்டிப்பாக அவன் படத்தில் நடிக்கக் கூடாது.’

     

    ‘சரி! நீங்களே சொல்லுங்க. முடியல.’

     

    ‘நான் சஞ்சய்.’

     

    அப்படி யாரையுமே அவளுக்குத் தெரியாது.

     

    ‘எந்த சஞ்சய்?’

     

    ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால உங்களோட ஊபர்ல முன் சீட்டுல உட்கார்ந்து வந்தேனே.’

     

    ‘அட நாயே!’

     

    கவிதாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.

     

    ‘எப்படி என் நம்பர் கிடைச்சுச்சு?’

     

    ‘அத விடுங்க…பத்திரமா வீடு போய் சேர்ந்தீங்களா?’

     

    ‘இல்ல, தெருவுல கிடக்கேன் நீ காப்பாத்துவேன்னு.’

     

    என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்துப் போனாள் கவிதா. எதிரே சுவரில் பல்லி ஒன்று ஓடியது.

     

    ‘ப்ளடி, இது எங்கிருந்து வந்தது.’

     

    ‘எப்படிங்க என் நம்பர் கிடைச்சுது?’

     

    ‘சொல்றேன். பொறுங்க…’ என்று குறுஞ்செய்தி அனுப்பியவன் கூப்பிட்டே விட்டான். போனை எடுக்கக் கூடாது என்று ஒரு கணம் நினைத்தாலும் எப்படி தன் எண் அவனுக்குக் கிடைத்தது என்று தெரிந்தாக வேண்டும் என்று நினைத்தாள்.

     

    ‘ஹலோ கவிதா, உங்ககிட்ட இத சொல்லியே ஆகணுன்னு நினைச்சேன். பட் கார்ல இன்னும் ரெண்டு பேர் இருக்கும்போது சொல்றது மேனர்ஸா இருக்காது. வெண்ணிலவே முகம் காட்டுல , உண்மையச் சொல்லணுன்னா அந்த ஹீரோயின விட நீங்கதான் ப்யூட்டிஃபுல். மட்டுமில்லாம ஆக்டிங்லயும் ஒரு நாட்ச் ஜாஸ்தி. ஆக்டிங் கத்துகிட்டீங்களா?’

     

    ‘இல்ல… நீங்க எப்படி…?’

     

    ‘ஆக்சுவலா இனி நீங்க ஹீரோயினா மட்டும்தான் நடிக்கணும்…’

     

    ‘ஃபக் ஆஃப்…யூ மோரான்.’

     

    அவன் பேசிக்கொண்டே போக கவிதாவுக்கு கோபம், ஆத்திரம், அழுகை, இயலாமை இன்னும் பிற சொல்லவொணா உணர்ச்சிகள் நிரம்பி எழும்பியது. எதிரே இருக்கும் சுவரில் பல்லி கடிகாரத்தை நோக்கி நகர்ந்தது.

     

    ‘இந்த சனியன வேற துரத்தணும் நாளைக்கு.’

     

    ‘நெக்ஸ்ட் டைம் படம் சூஸ் பண்ணும்போது கதையைக் கேளுங்க. இங்க இருக்கற பாதி டைரக்டர்ஸ் ரொம்ப சுமார்.’

     

    ‘ஹேய்…ஸ்டாப் மேன். எப்படி உனக்கு என் நம்பர் கிடைச்சுது? யார் கொடுத்தா?’

     

    ‘என்னங்க…நான் எவ்வளவு மரியாதையா பேசிகிட்டு இருக்கேன். வேற ஒருத்தனா இருந்தா அசிங்கமா நடந்துக்குவான். என்னை மாதிரி டீசண்ட் ஆள பாக்கவே முடியாது நீங்க உங்க வாழ்க்கைல. ஒரு வார்த்த இப்ப வரைக்கும் தப்பா பேசுனனா?’

     

    கவிதா கோபத்தின் உச்சியில் இருந்தாள். அவள் முகம் சிவக்க அடிவயிறு கலங்க தகாத ஒன்று கையிலிருப்பதை அப்போதுதான் உணர்ந்தாற் போல் சட்டென்று போனை படுக்கையில் எறிந்தாள். அவனின் ‘ஹலோ, ஹலோ கவிதா இருக்கீங்களா’ என்ற குரல் தீனமாகக் கேட்டது. சில விநாடிகள் கழித்து ஒரு தீர்மானத்தோடு ஸ்பீக்கரில் போட்டாள்.

     

    ‘…கீங்களா?’

     

    ‘சொல்லுங்க…’

     

    ‘அப்பாடா, என்னாச்சோ உங்களுக்குன்னு பயந்துட்டேன்’ என்றான்.

     

    ‘நாயே, உனக்கு ஒண்ணும் ஆக மாட்டேங்குதே.’

     

    கவிதா கஷ்டப்பட்டு வரவழைத்துக்கொண்ட அமைதியுடன் ‘அதெல்லாம் சரி சஞ்சய், உங்களுக்கு எப்படி என் நம்பர் கிடைச்சுதுன்னு சொல்லிட்டுப் பேசுங்க…ஆர்வமா இருக்கு…’

     

    இப்போது அவன் உற்சாகமானான்.

     

    ‘நீங்க இறங்கினப்பறம் என் போன்ல சார்ஜ் போயிருச்சுன்னு சொல்லி டிரைவரிடம் அவன் போனைக் கேட்டேன். அவன் குடுத்தான். அதுல ஊபர் ஆப்ல உங்க பேரையும் நம்பரையும் பார்த்தேன். சிம்பிள்.’

     

    ‘அட, பன்னிப் பயலே.’

     

    ‘ஆனா அது நிஜமாவே உங்க போன் நம்பரா இருக்குமான்னு கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. ஆனா, ஆச்சரியம். உங்களுதேதான்.’

     

    ‘*%@#$^*’

     

    ‘சரி. எதுக்கு கூப்பிட்டீங்க?’

     

    மிகவும் நெருக்கமானவர்கள் நலம் வேண்டி அதட்டும் தொனியில் சொன்னான்.

     

    ‘கவிதா, எப்படி நீங்க தைரியமா இப்படி உங்க நம்பர குடுக்கறீங்க? காலம் கெட்டுப் போயிருக்கு. கண்ட நாய் உங்களைக் கூப்பிட்டு தொல்லை செய்வான். என்னை மாதிரி டீசெண்டா எல்லாரும் இருக்க மாட்டாங்க. இப்படி செய்யாதீங்க. ப்ளீஸ் டேக் மை அட்வைஸ். இப்ப சீக்கிரம் தூங்குங்க உடம்பை கெடுத்துக்காம. நாளைக்கு கூப்பிடுறேன்.’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    gayathri Ram

    Related Posts

    செப்டம்பர் 30, 2024

    March 26, 2025

    அப்பாம்மை

    November 3, 2023

    அரூபம்

    November 3, 2023

    பரிவாரம்

    November 3, 2023
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Archives
    Facebook X (Twitter) Instagram YouTube
    © 2025 Gayathir. Designed by Technobytee.

    Type above and press Enter to search. Press Esc to cancel.