Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gayathri/webapps/gayathrir-com/wp-includes/functions.php on line 6114
பரிவாரம் – Gayathri R
Skip to content

பரிவாரம்


நவம்பர் 26, 2022

‘இவனை, இந்த ஷ்யாமை, எப்படி உனக்குத் தெரியும்? உன் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கானே பொறுக்கி’ என்று குமுதா என்னிடம் கேட்டபோது ரம்யா திடுக்கிட்டது தெரிந்தது.

கண்ணால் ஏதோ குமுதாவுக்குச் சொல்ல முற்பட்டாள் ரம்யா. குமுதா புரியாமல் புருவத்தை சுருக்கிக்கொண்டு தாடையை முன் நீட்டி ‘ஹ(ன்)’ என்றாள். தலையிலடித்துக்கொள்ள முடியாதபடி எதுவும் பேச இயலாதபடி ‘ஹி ஹி…சரி, சரி, அப்புறம்…’ என்று சங்கடத்துடன் பேச்சை ரம்யா மாற்றத் தொடங்கியபோது நான் இடைமறித்தேன்.

‘யார சொல்ற?’ என்று குமுதாவைக் கேட்டபோது ரம்யா ‘விடுப்பா…வேற…’ என்றாள்.

என் தாட்டியான குரலையும் முறைப்பையும் பார்த்து தான் தோற்றுப் போனது அவளுக்குத் தெரிந்தது. இது எதுவும் கிஞ்சித்தும் புரியாமல் கடுப்பாக என்னைப் பார்த்து ‘இதோ இடது கைப்பக்கம் இளிச்சுகிட்டு நிக்கறானே, இந்தக் கம்னாட்டிதான்’ என்றாள் குமுதா. ரம்யா பதறுவது தெரிந்தது.

குமுதா மேற்கொண்டு பேச முற்படுவதற்குள் ‘குமுதா அந்த ஷ்யாமோட பொண்டாட்டிதான் இந்த சித்ரா’ என்று என் முழங்கைக்கு மேலிருக்கும் சதையை அழுத்திப் பிடித்தபடி ரம்யா படபடத்தாள்.

‘ஓ, ஐயோ, இல்ல…இல்ல…மாத்தி சொல்லிட்டேன்…அது வந்து…’ என்று குமுதா உளறி முடிப்பதற்குள் அங்கிருந்து என்னையறியாமல் வேகமாக வெளியேறினேன்.

‘ஏய், அதுக்குள்ள போறியா?’ என்ற குரல் கிணற்றிலிருந்து கேட்டது. சுற்றிலும் இருப்பவர் மங்கலாகிப் போக என் இதயம், என் கலக்கிய வயிறு மட்டுமே பிரதானமாகத் தெரிந்தது.

‘ஹபிபுல்லா ரோடு போங்க’ என்று ஆட்டோக்காரரிடம் என் வாய் தன்னிச்சையாகச் சொன்னது. வீட்டுக்குள் வந்ததும் என் தேகம் அணிந்திருந்த உடைகளை கழற்றி எறிந்து டாய்லெட் சீட்டில் அமர்ந்தேன். கழிவறையின் மூலையில் உள்ள டைல்ஸ் அலைஅலையாக நெளிந்தது.

‘What the fuck! நிதானமாக இதை எதிர்கொண்டிருக்கலாம். இப்படி ஓடி வந்திருக்கவேண்டிய அவசியம் என்ன? இதனால் திறந்திருந்த எல்லா கதவுகளையும் அடைத்து விட்டாய். ஸ்டுபிட் சித்ரா! என்ன விஷயம் என்று இனி யாரிடம் கேட்க முடியும்? இப்படி உன் இம்பல்ஸிவ் நடவடிக்கைகளால் நிறைய விஷயங்களை இழக்கிறாய் சனியனே.’ பெனாத்தா வழக்கம்போல் குதிக்கத் தொடங்கியது.

என் ஆல்டர் ஈகோவை மனசாட்சி என்று மொழிபெயர்த்தால் சரியாக இராது. அது ரத்தமும் சதையுமான என்னைப்போன்ற ஒரு உருவமாக இல்லாவிட்டாலும் அதற்கு நிகரான ஒரு சூக்‌‌ஷ்ம உருவம். உண்மையில் இரண்டு சூக்‌ஷ்ம உருவங்கள் உண்டு. சினிமாவில் காண்பிப்பதுபோல். சில சமயங்களில் முழுதாக ஏதாவதொன்று என்னை ஆக்ரமிப்பதும் நடக்கும். புலம்பி, அழுது சபித்துக்கொண்டே இருந்தால் பெனாத்தா ஆக்ரமிப்பு. தேவையே இல்லாமல் சிரித்து, சம்பந்தமில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு உலகமே அற்புதம் என்று உளறிக்கொண்டிருந்தால் மயில் என்னைப் பரிபூரணமாக ஆட்கொண்டு விட்டதாகத் தெரிந்து கொள்ளலாம். சமயங்களில் சித்ரா, பெனாத்தா, மயில் மூவரும் சரிசமமாக இருக்கும் காட்சியை கண்கொண்டு பார்ப்பவர் ஆயுசு பரியந்தம் மறக்க மாட்டார்.

அவர்கள் மட்டுமல்லாமல் அவ்வப்போது சாரு நிவேதிதா, லா.ச.ரா. புதுமைப்பித்தன், ஜோஸா, ஸோஃபி, க.நா.சு. மற்றும் பலர் சின்ன சின்னதாக தோள் மேலும் தலை மேலும் சில சமயம் கண் விழித்தவுடன் மேற்கூரையிலும் ஒட்டிக் கொண்டு கண்களை உருட்டிக் கொண்டிருப்பதால் தனிமை என்பது என் வாழ்வில் ஆடம்பரம்.

இந்தக் கூட்டம், கணவன் ஷ்யாம், பெண் மீனா தவிர லௌகீக வாழ்வில் எனக்கு இருக்கும் நெருக்கமான தோழமை ஒன்றே ஒன்று. அது ரம்யா. எல்.கே.ஜியிலிருந்து என்னுடன் விதவிதமாக உடுத்திக்கொண்டு சாட்சாத்காரமாக வரும் ரத்தமும், இதயமும் மூளையுமான ஆல்டர் ஈகோ (இந்த வார்த்தையை தமிழ் படுத்தலாம் என்று தேடினால் ‘நுட்பமான உடல்’, ‘ஆளுமையின் மறுபக்கம்’ என்றெல்லாம் காண்பித்ததால் ஆங்கிலமே தேவலை என்று முடிவுக்கு வர வேண்டியிருந்தது).

ரம்யாவுக்கு நிறைய நண்பர்கள்.‘வாடி, குமுதா வீட்டு பார்ட்டிக்குப் போலாம்’ என்று வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போனாள். அந்தக் குமுதாவும் என்னைப் பார்க்க வேண்டும் என்று சொன்னாளாம். அன்று என் ஆ.ஈ. குழு ஆட்சேபணை செய்யாததால் சரி என்று போனால் இப்படி ஒரு வினை.

இரண்டு வேளை பூஜை, ஒரு கெட்ட வார்த்தை பேசாத ஷ்யாமை எல்லோரும் மெச்சுவதை மட்டுமே கேட்ட இந்தக் காது முதன்முறையாக அவனை பொறுக்கி என்று ஒரு பெண் வாயால் கேட்டபோது நிலைகுலைந்துதான் போனது.

‘ரம்யா, உண்மையைச் சொல்லு. என்ன ஆச்சு?’

‘அது வந்து… விடேன்…அவ ஏதோ உளறிட்டா…’

‘ஓ, ஃப்ரண்ட்ஷிப்… தோழி கஷ்டப்படக்கூடாது, இல்ல?’

‘இல்ல… Let the sleeping dogs sleep.’

‘கல்லெடுத்து அடிச்சுட்டு…அடச்சீ… சொல்லுடீ. என்ன பண்ணினான் ஷ்யாம்.’

சில வினாடிகள் அமைதியாக இருந்தவள், ‘இரு குமுதாவை கான்ஃபரன்ஸ்ல எடுக்கறேன். நீயே கேள்’ என்றாள்.

ஷ்யாமுக்கு குமுதாவின் மேல் வீட்டுப் பெண்ணிடம் தொடர்பாம். அவள் டைவர்ஸான பெண். ஒரு ஆண் குழந்தையும் உண்டாம். அவன் அடிக்கடி அந்த வீட்டுக்கு வருவதால் அபார்மெண்டில் எல்லோரும் ஒரு மாதிரி பேசுவதாகச் சொன்னாள். நான் என்ன சொல்ல முடியும்? அமைதியாகக் கேட்டுக் கொண்டேன்.

‘கிட்டத்தட்ட ஒரு வருஷமா இது நடக்குது சித்ரா. ரொம்ப சந்தோஷமா மூணு பேரும் அப்பப்ப வெளில போறதும் உண்டு. சாரி! உன்னோட ஹஸ்பண்டுன்னு தெரியாம…’

‘அவ பேரு என்ன? என்ன பண்றா?’ வெடுக்கென்று இடைமறித்தேன்.

‘பேரு ஹேமா. அற்புதமான ஆர்டிஸ்ட்.. ஃபோகஸ் ஆர்ட் கேலரில அவளோட பெயிண்டிங்ஸ் நிறைய இருக்கு.’

மண்டைக்குள் ஒரு ரீங்காரம். ‘என் சந்தேகம் சரி. சொன்னேன் பாத்தியா’ என்று பெனாத்தா எக்களித்தாள்.

‘என்னப்பா, ஏதாவது பேசு’ என்றாள் ரம்யா கலக்கமாக.

‘Thanks but no thanks…’ என்றேன்.

‘ஏய், என்ன முடிவு பண்ணினாலும் என்கிட்ட சொல்லிட்டு பண்ணுடி…’ என்று ரம்யா சொல்லச் சொல்ல கைபேசியை நிறுத்தித் தூக்கிப் போட்டேன்.

பெனாத்தா ஆரம்பித்தாள்.

‘எனக்கு கொஞ்ச மாசங்களாகவே சந்தேகம்.You bloody shit of a woman. ஆட்டுக்கு இருக்கும் மூளை இருந்தாக்கூட உனக்குப் புரிந்திருக்கும் அவன் ஏன் ஃபோனை உன் கையில் கொடுக்கறதில்லன்னு. ஏன் அடிக்கடி வெளியூர் போறான்னு. இப்ப என்ன பண்ணப் போற?’

‘விட்றீ. அவ என்ன பண்ணுவா? ஆஃபீஸ் வேலைன்னு நம்புனா. ஒரு வேளை குமுதா சாதாரணமா ஷ்யாம் அங்க வரதைக் கூட வேற மாதிரி புரிஞ்சிருக்கலாம். தவிர நீயும் அவனை கவனிச்சுக்கறதே இல்லை. எந்த விதத்திலும். உனக்கு லா.ச.ரா., சாரு, ஆன் எபர்… இன்னும் பலதுகள் இருக்கே. அதுகள்தான் முக்கியம். சதா அதுகளோடயே சஞ்சாரம் பண்ற. ஷ்யாம் பாவம்.’ இது மயில்.

 

‘ஏய்! ஆகப் பெரிய காமெடி இது! என் எழுத்து எதையுமே ஒழுங்காப் படிக்காத ஒரே ரசிகை இவ. இவள் ஃபோனை நான் ப்ளாக் பண்ணி பல நாளாச்சு. சஞ்சாரமா?’ கிண்டலாக சாரு நிவேதிதா.

‘c’est pourquoi je ne me suis pas mariée’ என்றார் ஆன் எபர்.

‘அகல்யை படித்ததில்லை? அங்கு கௌதமர். நீ கௌதமி. மன்னித்து விடலாம். சாரமில்லை’ என்றார் புதுமைப்பித்தன்.

‘Seriously? நீ அப்படி செய்திருந்தால் விட்டிருப்பானா அவன்?’ இது ஸோஃபி.

 

எல்லோரும் அவரவர் கருத்துகளைச் சொல்ல, நான் வீறிட்டேன். ‘ஒழிஞ்சு போறீங்களா எல்லாரும். நான் யோசிக்கணும்.’

‘உனக்கும் சில நாட்களாக சந்தேகம் இருக்கு தான ? அவன் அடிக்கடி இப்போ ப்யூட்டி பார்லர் போறதும் கவனமா டிரஸ் பண்ணிக்கறதும்…உனக்கு உறுத்திச்சு தான?’ – பெனாத்தா.

‘அவள் நல்ல தோழியாகக் கூட இருக்கலாம். ஏன் உனக்கு தோழன் இல்லையா என்ன ? மீனா காலேஜ் டூர் போயிருக்கிறாள் இல்ல ? ஞாயிற்றுக்கிழமை தானே வருவா. இன்னும் மூணு நாள் இருக்கு. அதற்குள் ஷ்யாமிடம் பேசிவிடு. இது சாதாரண நட்பாகத்தான் இருக்கும்’- மயில்.

‘ஹ! எப்புடி? இவள் தோழர்களை ஷ்யாமுக்குத் தெரியும். இவளுக்குத் தெரியாமல் ஒரு தோழி வைத்துக் கொள்வானேன்?அதுவும் ஒரு வருஷமா?- பெனாத்தா.

உடம்பும் மனதும் விட்டுப் போய் நைட்டியை மாட்டிக்கொண்டு கட்டிலில் சாய்ந்தேன். போர்வையை இழுத்து மூடிக்கொள்ளும்போது கால் கட்டை விரலில் ஆன் எபர் நின்றுகொண்டு என்னை முறைத்துக் கொண்டிருந்தார். Zut !நேர் மேலே ஜோஸா நமுட்டுச் சிரிப்புடன். எள் விழ இடமற்று அனைவரும் நின்றுகொண்டு கசகசவென்று பேசிக்கொண்டிருந்தனர். எனக்குக் கண்ணை இழுத்துக்கொண்டு போயிற்று.

__

அதிகாலை நாலு மணிக்கு காலிங்பெல் சத்தம் எழுப்பியது. ஷ்யாம். ‘நீ போய் தூக்கத்தை கண்டின்யூ பண்ணு’ என்றான் புன்முறுவலுடன்.

‘யேய்…அவளோடதான் இருந்துட்டு வரான்’- குரூர சிரிப்புடன் பெனாத்தா.

‘ஆரம்பிக்காத காலைலயே’ என்று அவளை அமட்டிவிட்டு மறுபடி தூக்கத்தை தொடர முடியுமாவென்று முயற்சி செய்தேன்.

 

மௌத்கல்யர் ஓவென்று பிலாக்கணம் வைத்துக்கொண்டிருக்க, நளாயினி ‘வந்து தொலை க்ருஹசாரமே!’ என்று அவரை கூடையில் அமர வைத்து முனகிக்கொண்டு சும்மாடிட்ட தலையிலேற்றினாள்.

‘ஊராரெல்லாம் நதிக்கரையில் குளித்து சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருக்க, இப்படி இந்த குஷ்டரோகியை சுமந்து திரிகிறேனே. யாருக்காக? இவர்கள் மெச்சவா?’ தன் மனம், புத்தி, சம்ஸ்காரம் எல்லாவற்றையும் கரித்துக் கொட்டிக்கொண்டு வெறுப்பாக நடந்தாள். மலையின் ஒற்றையடிப் பாதையில் அவள் நடந்தபோது வியாசர் ஒரு எட்டி மரத்தினடியில் அமர்ந்திருந்ததை அவள் கவனிக்கவில்லை. நான் கவனித்தேன். என்னைப் பார்த்து விட்டார். நளாயினியைக் கண்ணைக்காட்டி பின் என்னைப் பார்த்து முறுவலித்தார். ஆத்திரத்தில் பக்கத்தில் இருந்த கல்லை எடுத்துக்கொண்டு திரும்பினால் வியாசர் அங்கு இல்லை.

 

‘நீயுமா வ்யாஸ்? தூக்கத்துல வர்றதெல்லாம் அத்துமீறல்.’

‘என்ன பண்ணப் போற?’

‘என்ன பண்ணப் போற?’

‘என்ன பண்ணப் போற?’

எழுந்து காபிபோட்டுக் குடித்துவிட்டு ஷ்யாமுக்கும் கொடுத்தேன்.

‘அப்புறம். என்ன நடக்குது?’ என்றான் மலர்ந்த முகத்துடன். ‘ஏதோ ரம்யா ஃப்ரெண்டோட பார்ட்டிக்குப் போனியே?’

‘சொல்லு’ – குமுறலுடன் உள்ளிருந்து கர்ஜித்தாள் பெனாத்தா.

ஒரு மிடறு காபியைக் குடித்தேன். அவன் பார்வையை தவிர்க்கத் திரும்பி பலகணியை தன் கிளையால் இடித்துக்கொண்டு நிற்கும் எண்பது வருட மாமரத்தைப் பார்த்தேன். பரந்து விரிந்த கிளைகளுடன் ஆயிரக்கணக்கான ஜீவராசிகளுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருந்தது.

‘யேய். யார் இருக்கா அங்க ?வேணாம்டி. நேம் டிராப்பிங் பண்றன்னு பிச்சுடும் சமூகம்.’ -பெனாத்தா.

‘பாத்தியா! உனக்கு ஒருமுகமா ஒரு விஷயத்தை அணுகத் தெரியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா இந்தமாதிரி இக்கட்டான சமயத்துல கூடவா? அங்க பாரு ஷ்யாம் உன்னையே லூஸு மாதிரி பார்த்துகிட்டு இருக்கான். சொல்லு. பதில் சொல்லு’ – மயில்.

‘உன்ன பொறுக்கின்னு ரம்யா ஃப்ரெண்ட் சொன்னா’ என்று நாக்கு நுனி வரை வந்த வார்த்தை அமுங்கி ‘என்ன, எல்லாம் சாப்டுட்டு அரட்டைதான். வேற என்ன நடக்கும் நாலு பேர் சேர்ந்தா?’ என்று சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்க்காமல் சமையலறைக்குள் நுழைந்தேன்.

__

உடைந்து அழத் தோன்றவில்லை. வருத்தமும் இல்லை. ஆத்திரம் மட்டும் பொங்கிப் பொங்கி வந்தது. அவனிடம் பேச வேண்டுமென்றால் இன்னும் இரண்டு நாட்களுக்குள் பேச வேண்டும். மீனா டூரிலிருந்து வந்துவிட்டால் முடியாது. என்னவென்று பேச? நான் என்ன குறை வைத்தேன் என்றா? கொஞ்சம் அபத்தமாக இருந்தது. ரம்யா பொறுக்கமாட்டாமல் அதற்குள் பத்து பன்னிரெண்டு முறை கூப்பிட்டு விட்டாள். கவலைப்படாதே என்று அவளை சமாதானம் செய்தாயிற்று. பெனாத்தாவைத்தான் சமாளிப்பது பெரும் கஷ்டமாகியிருந்தது.

‘அந்தப் பொம்பள கிட்ட நீ பேசற. யாருடீ நீ என் புருசன வச்சுருக்கன்னு அசிங்கமா நாக்கப் புடுங்கிக்கற மாதிரி கேக்கற. சரியா?அந்த அபார்ட்மெண்ட்டே அதிரணும்.’

‘சே! சே! அதெல்லாம் தப்பு. இவ்வளவு படிப்பும் பின் எதற்கு?’ மாமரத்தின் கிளையில் காலை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த சார்ல்ஸ் டிக்கன்ஸ் கேட்க ‘ஏய், நீ பேசாத! ஒன்பது குழந்தைகளை வச்சுகிட்டு அந்த நெல்லி கூட நீ ஊர் சுத்தல? பதினொரு வயசுல இருந்து நீ இவ கூட இருக்க. நல்ல வார்த்த சொல்லாம பேசற பேச்சப் பாரு. நீயும் ஆம்பள தடியன் தான. பின்ன எப்படிப் பேசுவ? ஆளும் தாடியும் மூஞ்சியும்…’

‘ஏய், ஏய்…வேணாம்டி’ என்று நான் சொல்லச் சொல்ல டிக்கன்ஸ் பயந்து பறந்து போனார்.

‘வா! நம்ம பண்டம் சரியில்லைடி, அவளைப் போய் கேட்பானேன். பாவம். நாம கொஞ்ச நேரம் தியானம் பண்ணுவோம்’என்றாள் மயில்.

பெருங்கூட்டத்தோடு பூஜை ரூமில் உட்கார்ந்து கொண்டேன். எல்லோரும் மலங்க மலங்க விழித்துக்கொண்டு இருந்தனர். ‘கொஞ்ச நேரம் நான் நானா இருக்கேன்.’

 

‘நாங்க இல்லாம நீ இல்ல. ஆஃப்டர் ஆல், ஒரு நாலு இன்ச் சதைத் துணுக்குலதான் உன்னோட சந்தோஷம் துக்கம் இருக்கா என்ன? தூக்கிப் போடு. உனக்கும் எவனையாவது எக்காலத்திலாவது பிடிச்சிருந்தா ஏத்துக்கோ’ -இது சிமோன் த போவா.

‘Women, you owe her everything!!!’

‘Women, you owe her everything!!!’

எல்லோரும் கூட்டாகப் பாடினர்.

 

நானும் சேர்ந்துகொண்டேன். புதுவித தியானம். மனதின் ஒரு மூலையில் அசாதாரண அமைதி நிலவியது. எதுவுமே நடக்காததுபோல் இருந்து விட்டால் என்ன?

 

நளாயினி திட்டிக்கொண்டே ஆனால் திடமான மனதுடன் தாசி வீட்டுக்கு நடந்துகொண்டுதான் இருந்தாள். குஷ்டரோகி சனியனை கூடையோடு குப்பையில் போட்டால்தான் என்ன?

வியாஸர் புன்சிரித்தார்.


சில நாட்கள் கழித்து, ஒரு திருமணத்திற்கு ஷ்யாமுடன் சென்றிருந்தபோது பூதம் மறுபடி தலையைத் தூக்கியது.

‘அதோ, அவதான் ஹேமா’ என்று ரம்யா காதோரம் கிசுகிசுத்தாள். பதவிசாக சாம்பல் நிறத்தில் புடவை (வரமஹாலஷ்மில வாங்கிருக்கா, அன்னிக்கு நாம பார்த்தமே- ஆ.ஈ.) கட்டிக்கொண்டு அழகாக மிக அழகாக ஒரு நடிகை போல் இருந்தாள். ஷ்யாமைப் பார்த்தேன். சாம்பல் நிறத்தில் சட்டை அணிந்துகொண்டிருந்தான். பார்த்தும் பார்க்காததுபோல் இருவரும் பாவனை செய்துகொண்டிருந்தார்கள். கண்களால் பேசிக்கொண்டது அப்பட்டமாகத் தெரிந்தது. வெறுத்துப் போனது.

‘ஊர்ப்பக்கப் பொம்பளைங்களா இருந்தா, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசி முடிச்சுடுவாங்க. நீ இந்த கூட்டத்தை வச்சுகிட்டு இதுங்க சொல்றத கேட்டுகிட்டு இப்படியே வெம்பி வாழ்ந்து முடிச்சுடுவ.’

ஷ்யாமைப்போல் ஒரு மனிதன் கிடைப்பது கடினம். சாணக்ய நீதியில் வருவதுபோல் அவன் அன்னதாதாவாக பயத்ராதாவாக, அன்னமும் பாதுகாப்பும் அன்பும் அள்ளி அள்ளிக் கொடுப்பவனாக இருந்தான். தேடினாலும் இவனைப்போல் என்னை, அப்படியே சிப்பமாக என் கோபதாபங்களோடு, ஏற்றுக்கொள்ள இவனொருவனால் மட்டுமே முடியும். அவள் இவனுக்கு மயங்கியதில் எந்த ஆச்சரியமுமில்லை. பாவம்.

மௌத்கல்யர் இப்படித்தான் இருந்திருப்பாரோ? ஆனாலும்…

இந்தக் கூட்டத்தின் கரைச்சல் தாங்கவொண்ணாமல் பலவித வகுப்புகளில் சேர்ந்துகொண்டேன். அவ்வப்போது ஷ்யாம் அலுவலக வேலை என்று மாதத்தில் பத்து நாட்கள் காணாமல் போவதும், ஃபோனில் வெகுநேரம் பேசுவதையும் கண்டு மனம் வலித்தது.

‘மீனா பெரிய பொண்ணு இப்ப. அவ புரிஞ்சுப்பா. நான் தனியா போய்ட்டா என்ன? ஷ்யாமுக்கும் சௌகரியம்.’

‘தனியா போய் என்னடி பண்ணுவ அந்தக்கால பி.ஏ. மட்டும் படிச்சுட்டு?’ என்றாள் ரம்யா.

‘அம்பத்தி மூணு வயசுல இந்த படிப்பை வச்சுகிட்டு என்ன வேலை செஞ்சு …மறுபடி முதல்ல இருந்து எப்படி ஆரம்பிக்க? தெரில. ஏதாவது வழி சொல்லேன்.’

‘எனக்கும் தெரில’ என்று சோகமாக சொல்லிக்கொண்டே மில்க் ஷேக் குடித்தாள் ரம்யா.

 

‘விட்டு வா. எழுது. உன் எண்ணங்களை எழுது. அதுதான் உன்னை இந்தக் கஷ்டத்திலிருந்து விடுவிக்கும். Je suis là!’ என்றார் ஹெலன் சிஸூ.

 

‘Name dropping! Name dropping! அவள் சொல்படி எழுதுவதானால் உன்னுடன் சுற்றிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாள நண்ப, நண்பிகளைத் தவிர வேறு யாரையும் எழுத்தில் கொண்டு வரக்கூடாது. மற்றவர்களைத் தெரியாமல் ஷ்யாமைப்போல் உள்ளுக்குள் வைத்துக் கொள். பல வருடம் name dropping என்று சொல்லிக் கொன்று விடுவார்கள்’என்று கத்தினாள் பொறுக்காத பெனாத்தா.

மூன்று நாட்களாக வானம் மூடிக்கொண்டிருந்தது. மழை அடித்துப் பெய்தது. வீட்டின் முன் இருந்த மாமரம் சிறு வெளிச்சத்தையும் வீட்டினுள் வர இயலாமல் செய்தது. வீட்டில் இருந்தபடியே வரைந்து கொண்டிருந்தேன்.

கண்ணனை உரலில் கட்டிப் போட்டிருக்க யசோதா பக்கத்தில் நின்று குழந்தைக் கண்ணனை ஒரு விரலால் சாடுவது போன்ற ஓவியம். வரைய ஆரம்பித்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகியிருந்தது. இப்போதெல்லாம் குமைவதை நிறுத்தி, ஓவியத்தில் என்னைச் செலுத்தி அதில் மெய்மறக்கிறேன். நீலமேக குண்டுக் கண்ணனும், பின்னால் இருக்கும் மாளிகையும், உரலும், யசோதாவின் உடலும், புடவையும் அழகாக வரைய முடிந்தாலும் ஏனோ யசோதாவின் கண்களில் சரியான பாவனையைக் காட்ட முடியவில்லை. ஒரு கண் கோணலாகப் போனது. பல முறை அழித்தாகி விட்டது. சோகமாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஷ்யாம் வந்தான்.

‘என்னப்பா, சோகமா இருக்க. வாவ்! அடிப்பொளி பெயிண்டிங்!’ என்று உண்மையாகப் பாராட்டினான்.

‘இல்ல ஷ்யாம். கண்ணு சரியா வரல. என்ன பண்றதுன்னு தெரியல.’

‘நாலு தடவ அழிச்சு வரைஞ்சா சரியா வந்துடும்.’

‘நாப்பது தடவ அழிச்சாச்சு. இனிமே வராதுன்னு தோணியாச்சு. அதுனால வராது. தூக்கிதான் போடணும்.‘

‘எவ்வளவு அழகா இருக்கு. தூக்கிப் போடாத. வேணும்னா எனக்குத் தெரிஞ்ச ஒரு ஆர்டிஸ்ட் கிட்ட கொடுத்து கண்ணை வரைஞ்சு தரச் சொல்றேன்.’

யாரைச் சொல்கிறான் என்று புரிந்தது. பெனாத்தா எகிற ஆரம்பிக்கும் முன் ‘சரி! பண்ணிக் கொடு’ என்று சொன்னேன்.

அடுத்த நாள் ஷ்யாம் முகம் மலர அந்த ஓவியத்தை காண்பித்தபோது அசந்துதான் போனேன். கண்களைச் சுருக்கி கோபத்தோடும் அதே சமயம் தன் குழந்தை சூட்டிகையானது என்ற பூரிப்போடும் (உதடுகளையும் இன்னும் பிற இடங்களையும் சரி செய்திருக்கிறாள்) யசோதா உயிரோட்டத்துடன் நின்றாள்.

‘தாங்ஸ், யார் இந்த ஆர்ட்டிஸ்ட். அவங்களுக்கு எவ்வளவு தரணும்?’ என்றேன் அப்பாவியாய்.

‘நான் கொடுத்துக்கறேன். விடு.’

‘இல்ல. நான் கொடுக்கணும். எவ்வளவு ரூபா வேணும்னு கேளு’ என்றேன் பிடிவாதமாய்.

‘விடு, நான் பார்த்துக்கறேன்னு சொன்னேன்ல.’  மெல்ல மெல்ல  என்னுள் உக்கிரம் பரவியது.

என் பிடிவாதத்தை ஆச்சரியமாகப் பார்த்த ஷ்யாம் ‘சரி, கேக்கறேன்’ என்றான்.

‘இல்ல, இப்பவே கேளு. எனக்கு முன்னாடியே கேளு. எவ்ளோ ஆயிரம்னாலும் பரவால்ல.’

‘என்னாச்சு உனக்கு. சரி இரு, கூப்பிடறேன்’ என்று அவள் எண்ணை அழுத்தினான்.

மறுமுனையில் அவள் எடுத்ததும் ‘ஒரு நிமிஷம். சித்ரா பேசணுமாம்.’ என்னைப் பார்த்து ‘அவங்க பேரு ஹேமா’ என்றான்.

எனக்கு உடம்பு நடுங்கியது. கோபமா, அசூயையா, கொந்தளிப்பா, இன்ன பிறவா என அறியாத உணர்ச்சியுடன் கைபேசியை அவனிடமிருந்து வாங்கினேன்.

‘ஹலோ…’

‘ஹாய் சித்ரா’ என்ற தேனினும் இனிய குரல் என்னவோ செய்தது.

‘ரொம்ப நன்றி! அற்புதமா வரைஞ்சு கொடுத்திருக்கீங்க. எவ்வளவு தரணும் உங்களுக்கு?’

‘உங்களைப் பத்தி ஷ்யாம் நிறைய சொல்லியிருக்கார். உங்ககிட்ட காசு வாங்க மாட்டேன்’ என்றாள்.

என்னுள் ரௌத்திரம் தலைதூக்கியது. ‘பிச்சை போடறியா நீ?’கறுவினேன் உள்ளுக்குள். ‘இல்ல, அப்படிச் சொல்லக்கூடாது. வாங்கலேன்னா, இந்த ஓவியத்தை திரும்ப உங்களிடமே தந்திடுறேன்’ என்று அழுத்தமாகச் சொன்னேன்.

அசாதாரண அமைதி நிலவியது.

‘இருக்கீங்களா?’

‘இருக்கேன் சித்ரா. சரி! நான் என்ன கேட்டாலும் தர முடியுமா?’

‘சிக்கிகிட்ட, சிக்கிகிட்ட’ என்று பெனாத்தா கரகமாடினாள். ஒரு முடிவுடன் ‘கண்டிப்பா’ என்றேன்.

‘அப்புறம் கஷ்டம்னு சொல்லக் கூடாது.’

என்ன பீடிகை. என்ன கேட்கப் போகிறாள். ‘சரி! சொல்லுங்க.’

‘நீங்க அற்புதமா சமைப்பீங்கன்னு ஷ்யாம் சொல்லுவார்.  உங்க கையால சமைச்ச விருந்து சாப்பாட சம்பிரமமா அவரோட உட்கார்ந்து சாப்பிடணும். சாப்பிடக் கூப்பிடுவீங்களா?’

 

வியாசர் புன்சிரித்தார். 

1 thought on “பரிவாரம்”

  1. G.sathishsaravanan

    ஒரு பக்குவப்பட்ட பெண்மையின் உள்ளூர தவிப்பும் ஆற்றாமையும் அக்னி ஜுவாலையாக எரிந்தாலும் அவள் வார்த்தையில் வெளிப்படுவது என்னவோ அமைதி மட்டும் தான்.
    இன்னும் இந்த மண்ணில் பல அகலிகைகள் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்கள்.
    ஆல்டர் ஈகோ – என் எதிர் பிம்பம் (எனக்கு தோன்றியது )
    பரிவாரம் – பக்குவப்பட்ட மயில் – மிக அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Gayathri R

Gayathri R