Skip to content

பவள நிற ஃப்ராக். – ஆன் எபர்

பத்து  பெண்கள் மேடம் க்ரோபூவின் கடையில் வேலை செய்தனர். அழகுடன் சிலர், கொஞ்சம் அழகு கம்மியாக சிலர். ஆனால் பத்தும் வாயாடிகள். உதட்டுச் சாயம், பட்டுக் காலுறைகள், குட்டைப் பாவாடை என்று இருந்த அவர்கள் ஒவ்வொருவருக்கும் கூடவே ஒரு சோகக் காதல் கதையும் இருந்தது

 

அவர்களுக்கு நடுவே, இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக மெலிந்த தேகத்துடன் இருந்தாள் எமிலி.

 

ஒரு மாலைப் பொழுதில் தன்னந்தனியாக, ஒரு குழந்தையைப் போல் மேடம் க்ரோபூவின் கடைக்கு வந்து சேர்ந்தாள் எமிலி. அவள் சேர்ந்த தினம் ஒருவருக்குமே ஞாபகத்தில்  இல்லை. அவள் எங்கிருந்து வந்தாள் என்றும் யாருக்கும் தெரியாது. அவள் பேசாததால் ஊமை என்றே நினைத்து விட்டனர்.

 

அவள் வேலையில் சேரும்போது ஒரு குழந்தையைப் போல் இருந்தாள். வயதை யூகிக்க முடியாத முகத்துடன், இன்று இருப்பது போலவே அன்றும் இருந்தாள். கனவுகளற்ற, உணர்ச்சிகளற்ற அந்த அகண்ட கண்களில் அவளது வயதையோ, முதிர்ச்சியையோ நிர்ணயிக்க முடியவில்லை. உபயோகப்படுத்தப்படாதது போன்ற பெரிய கண்கள் ஒருங்கே ஆச்சர்யத்தையும், கொஞ்சம் கவலையையும் தந்தன. அப்படி இருப்பதும் நல்லதற்கே என்று தோன்றியது. ஏனெனில் அந்தக் கண்களில் ஒளியூட்டக்கூடிய ரகசிய சக்தி இருந்திருந்தால் அது இவ்வுலகில் அக்னிக் கடலாக பரவி விடும். ஆனால் அது நடக்கப் போவதில்லை. எமிலியின் கண்கள் வெறுமையாக இருந்ததால்தான் பெரிதாகத் தெரிந்தன.  

 

மேடம் க்ரோபூ எமிலியின் கம்பளி நூல் பின்னும் திறமையைப் பார்த்ததுமே வியந்து போனாள். அதைத் தவிர அவள் வாழ்க்கையில் வேறு எதையுமே செய்திருக்க மாட்டாள் என்று அவளுக்குத் தோன்றியது.


வேலையில் அவள் ஒரு அசாதாரணமான  திறமைசாலி என்பதை ஆரம்பத்திலிருந்தே நிரூபித்து விட்டாள். நாள் முழுவதும் இடைவெளியே இல்லாமல் ஜுர வேகத்தில் பின்னிக் கொண்டேயிருந்தாள். அன்றைய நாள் அவளிடம் வேலைக்காரனாகப் பணிந்துவிட்டது போலவும், அந்த நாளையே அவள் க்ரோஷேவாகப் பின்னிக் கொண்டிருப்பது போலவும் தோன்றும்.

ஒவ்வொரு வாரமும் இப்படியாக இந்த இடையறாத உழைப்பில் கடந்து போகும். ஞாயிறுகளில் அவள் வேலையை நிறுத்தும் போது அவளுக்குக் களைப்பாக இருக்கும். முடிவில்லாத பாலையான அவளது வாழ்வின் ஒரே ஆதாரத்தை இழந்து விட்டது போல் நினைப்பாள்

திங்கட்கிழமைக்காக அமைதியின்றி காத்துக் கொண்டிருக்கும் அவளுக்கு, ஒரு போதும் திரும்பிப் பார்த்து, வேலை செய்த இத்தனை நாட்களும் என்ன பலன் தந்தன என்று தனக்குள் கேட்டுக் கொள்ள தோன்றியதில்லை.

 

ஒரு மதியப் பொழுதில், வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன், மரம் வெட்டும் முகாமில் வேலை செய்பவன், அவன் வேலையை முடித்துக்கொண்டு திரும்பும்போது கடைக்குள் நுழைந்தான். அவன் வரவு பெண்களிடையே சலசலப்பைத் தூண்டி, இதயத் துடிப்பை அதிகரித்தது. அவன் சில காலுறைகளை வாங்கிக் கொண்டு, அப்பெண்களுக்கு சில வண்ணப் படங்களைப் பரிசாகக் கொடுத்தான்.

 

பின்னுவதை நிறுத்தி விடாமலேயே ஓரக்கண்ணால் தனக்குக் கிடைத்த படத்தைப் பார்த்தாள் எமிலி. அதில் ஒரு இடைச்சி படம் இருந்தது. அந்த இடைச்சியை ஆடுகள் சுற்றியிருக்க, ஆடை பின்னிக் கொண்டிருந்தாள். ஆனால் அப்படத்தை வரைந்த கலைஞன்அவள் கையில் ஒரே ஒரு ஊசி இருப்பது போல் வரைந்திருந்தான். இரண்டு ஊசிகள் இல்லாமல் காலுறைகள் பின்ன முடியாது என்பது எப்படி அவனுக்கு தெரியாமல் போயிற்று? எமிலிக்கு சிரிப்பு வந்தது

 

அங்கு ஒருவருக்கும் எமிலி சிரித்துக் கேட்ட நினைவே இல்லை. எமிலிக்கு அந்தப் படம் வேடிக்கையாகத் தெரிந்ததால், தாள மாட்டாமல் சிரிப்பு வந்தது. சிரிக்கும்போது அந்த இளைஞனின் நினைவு வந்தது. அந்தச் சிரிப்பு ஒரு மர்மமான சடங்கிற்கு அவள் வரவழைக்கப்படுவதற்கான சாத்தியத்தை முன்னறிவித்தது

 

எமிலி ஒரு போதும் பின்னுவதிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதில்லை. அது அவளின் ஒரு அங்கமாகவே ஆகியிருந்தது. இருந்த போதிலும் அன்று மாலை அவள் வீட்டிற்குத் திரும்பும் வழியில் வழக்கம் போல் பின்னிக் கொண்டு சென்றாலும் , அவளின் ஒரு பகுதி வேறெங்கோ தன்னுடைய முதல் பயணத்தை நடுக்கத்துடன் ஆரம்பித்திருந்தது.

எமிலி அறையில் ஓய்வெடுக்கச் சென்றாள். அவள் அப்போது செய்து கொண்டிருந்த பின்னல் வேலை கடினமானது; மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டியது. பெரும் பணக்காரப் பெண் ஒருத்தி செய்யச் சொல்லியிருந்த பவள நிற ஃப்ராக். அதை ஒரு வாரத்தில் முடித்துக் கொடுத்தாக வேண்டும்.

அவள் கம்பளி நரம்புகள் எலும்பு ஊசிகளின் மேல் நழுவிக் கொண்டிருந்தன. ஒரு கனவு அவளது நெஞ்சில் நழுவி நழுவிப் பின்னி கொண்டிருந்தது

எப்போதும் போல் தூக்கம் வரும் வரை பின்னிக் கொண்டிருப்பதற்கு பதில் அந்த இரவு, வேலைப் பளுவின் காரணமாக பின்னுவதை சீக்கிரம் முடித்துக் கொண்டாள் எமிலி.

 

என்னவென்றே தெரியாத, தன்னிடம் எப்போதுமே இல்லாத ஏதோ ஒரு பொருள் காணாமல் போனதைப் போன்ற ஒரு உணர்ச்சியில் இருந்தாள் எமிலி. அவள் இருப்பிடத்தில் எந்த மாற்றம் இல்லாவிடினும், நேற்று அவளிடம் இல்லாத ஒரு ஆசை இன்று உருவாகியிருந்தது.

 

கண்ணாடி இல்லாத அந்த அறையில், தன் முகத்தைக் கற்பனையில் ஆராய்ந்து கொண்டிருந்தாள். கலக்கத்தோடு தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டிருந்த போது, ஒரு தெளிவான முகம் ஒரு ஞானியைப் போல சட்டென்று தோன்றி அவளை ஆறுதல்படுத்தியது. சூரியக் கதிர்கள் பட்டு ஒளிர்ந்த பொன்னிற மேனியுடன், வசந்த காலத்தின் ஆரம்பத்தில் புதிதாக உருகி ஓடும் நதியின் ஒளிர்வைப் போன்ற கண்களுடன்காட்டிலிருந்து திரும்பும் கேப்ரியலின் முகம் அது.

 

எமிலி தன் கூந்தல் கற்றைகளை விரல்களால் சுழற்றியவாறு இருந்தாள். ஊசிகளையே பிடித்துக் கொண்டிருந்த அவள் விரல்களுக்கு இப்போது அந்தச் செயல் முக்கியமாகப்பட்டது.

 

படுப்பதற்கு முன் அவள் செய்த இரண்டு காரியங்கள் அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தன. அவளுடைய சாம்பல் நிற உடையின் மேல் அவள் அப்போதுதான் பின்னி முடித்திருக்கும் பவள நிற ஃப்ராக்கின் கைப் பகுதியைக் குத்திக் கொண்டதும், அவளுடைய தலைமுடியை தட்டுத் தடுமாறி நல்ல துணியால் மேலே முடிந்து கொண்டதும்

அன்று இரவு, கேப்ரியல் சுருள் சுருளான தன் கூந்தலை ஒரு பெரிய கத்தரியால் வெட்டி ஆற்றில் வீசுவது போலவும் தன் மருண்ட விழிகளால் அவள் பார்த்துக் கொண்டிருக்க ஒரு கொக்கியின் உதவியுடன் அவன் ஒவ்வொரு சுருளாகத் தாண்டித் தாண்டி செல்வது போலவும் கனவு கண்டாள்.

அடுத்த நாள் வேலைக்குச் செல்வதற்கு முன் சுருண்ட பட்டுப் போல் மிக மிருதுவாக  இருக்கும் தன் கூந்தலை ஒரு ஸ்கார்ஃபினால் மறைத்துக் கொண்டாள்

ஏன் வேலைக்குச் செல்லும் வழியில் பின்ன வேண்டும்? அன்று எதுவுமே அவசரமாகத் தோன்றவில்லை. எந்த வேலையும் இல்லாமலே தான் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டதாக உணர்ந்தாள்

 

எமிலிக்கு ஒரு சிறிய மனக்குறை எப்பவும் இருந்து வந்ததுதன்னுடன் வேலை செய்யும் பெண்களிடமிருந்து ஒரு கண்ணாடி கடன் வாங்கி தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், அவர்களின் கேலிக்கு பயந்து பேசாமல் இருந்தாள்

இன்று இந்தக் கம்பளிக்கு என்ன வந்தது? மிக லேசாக இருக்கும் இந்தக் கம்பளி சொல்லும் கதைகள் வினோதமானவை. எமிலியால் கம்பளியோடு சேர்த்து பின்னப்பட்டுக் கொண்டிருக்கும் அன்றைய நாள், அதனிலிருந்து பிரிந்து தனியான ஒரு நூலாய் ஒளிர்ந்தது. இதுவரை எமிலியால் பின்னப்பட்ட நாட்கள் அனைத்தும் இப்போது விடுபட்டு ஒரு சேர அவள் மனக்கண்ணின் முன்னே நின்றன. அவள் இதற்கு முன்னால் எதைப் பற்றியும் கவலைப்பட்டதில்லை; ஆனால் இப்போது அந்தத் தடுப்பு அரண் உடைந்து வாழ்க்கை தன்னை முன்னிறுத்திக் கொண்டது

 

ஒரு முறை மேடம் எலிசபெத்தின் வீட்டிற்கு, அவரின் உடையின் அளவை சரி பார்க்கச் சென்றிருந்தபோது பார்த்த கண்ணாடியின் ஞாபகம் வந்தது. அவள் சிறுமியாக இருந்தபோது ஒரு ஞாயிற்றுக்கிழமை விளையாடிய வனமும் ஞாபகம் வந்தது. எவ்வளவு அழகாக இருந்தது அந்த வனம்! என்ன நறுமணம் அந்த இலைகளிலிருந்து! அழகான மேடம் எலிசபெத் அவளை ஒரு நாள் அணைத்துக் கொண்டதும் ஞாபகம் வந்தது. மறுபடியும் அந்த அணைப்பு தனக்கு கிடைக்காதா என்று பைத்தியம் போல் யோசித்தாள் எமிலி.

 

ஊசிகளின் ஒலியினூடே எமிலியும் சிரித்தாள். அந்தச் சிரிப்பொலி அவளுக்கு வாட்டசாட்டமான, தைரியமான அந்த இளைஞனை ஞாபகப்படுத்தியது. அந்த இளைஞனின் ஒளிரும் நதி போன்ற  விழிகளில் தன்னிடம் இல்லாத கண்ணாடியைக் கண்டுபிடித்தாள் அவள்

மாலையில் அவள் வீடு திரும்பும் போது ஃப்ராக்கின் இரண்டு கைகளையும், நெஞ்சுப் பகுதியையும் பின்னி முடித்திருந்தாள். அந்தப் பவள நிறக் கம்பளி நூல் அவளின் சாம்பல் நிற உடையின் மேல் எடுப்பாகத் தெரிந்தது. ஸ்கார்ஃப் இல்லாத அவளின் பொன்னிற தலைமுடி சுருள் சுருளாக ஷாம்பெய்னைப் போல் ஒளிர்ந்தது.

எமிலி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். கீழே இருந்து அந்த உயரமான ஜன்னலைப் பார்ப்பவர்களுக்கு அவளின் ஒளி வட்ட முகமும், பளீரிடும் அந்தப் பவள நிற ஃப்ராக்கின் நெஞ்சுப் பகுதியும் தெரிந்தன

கீழே இருந்த அவனுக்கும் அவள் அப்படித்தான் தோற்றமளித்தாள். அவளுடைய அசைவுக்காக கீழே புற்களில் அவன் காத்திருந்தான். ஆனால் எமிலி உயரத்தில் அவளுடைய  சாளரத்தில் இருந்து அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனின் தலை மேல் பிறை நிலா அப்படியே நின்று விட்ட அதிசயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

நிலவுக்குக் கீழே அவன் அக்கார்டியனுடன் பாடிக் கொண்டு இருந்தான். எமிலி அப்பாடல்களை முழுவதும் ரசிக்க முடியாமல் அமைதியின்றி தவித்தாள். அவன் இனிமையாகப் பாடினான். “Lui y’a longtemps que je t’aime” அவன் பாடி முடித்த பின்பும் வெகு நேரம் அக்கார்டியன் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது: “Jamais je ne t’oublierai…

 

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மாலை வேளைகளில் அந்தப் பவள நிற ஃப்ராக்கை அவள் பின்னும் வேலை முன்னேற முன்னேற, ஜன்னல் வழியே வரும் நிலவின் வெளிச்சம் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு வெளிப்படுத்தியது

 

பவள நிற உடையில் இருக்கும் அந்த உருவம் மெல்ல அவனுக்குத் தெரிய வர, கேப்ரியலுக்கு அவளுடைய சிறிய பாதங்களோடு கூடிய முழு உருவத்தையும் சேர்த்து காண தீராத ஆசை ஏற்பட்டது

 

அந்த உடையைப் பின்னி முடித்தாயிற்று. எமிலி தன்னைத் தானே விஞ்சி இருந்தாள். அந்த உடை விலைமதிப்பில்லாத ஒரு ஆபரணத்தைப் போன்று, கச்சிதமாக அவளுக்குப் பொருந்தியிருந்தது. நீளமான கூந்தலைப் போல் எளிமையாக, அதே சமயம் மாலை நேர கவுனைப் போன்ற வசீகரத்துடனும் அந்த ஆடை இருந்தது. ஆனால் சீக்கிரம் முடிக்க வேண்டிய அவசரத்தில் அவள் ஃப்ராக்கின் நீளத்தில் பத்து வரிசைகளை பின்னாமல் விட்டிருந்தாள்

 

கேப்ரியலின் அக்கார்டியன் இசை ஒரு முடிவுக்கு வந்தது. அவன் ஏணியை எடுத்துக் கொண்டு  வந்து  வைத்து சாளரத்தின் அருகே ஏறிநடுங்கிக் கொண்டிருந்த அந்தச் சிறிய பெண்ணை அள்ளி எடுத்துக் கொண்டான். அவள் அந்தப் பவள நிற ஃப்ராக்கை அணிந்திருந்தாள். அவளுடைய மெலிதான கால்கள் அந்த குட்டைப் பாவடையின் வெளியே அழகாகத் தெரிந்தன

யாருமே சொல்லிக் கொடுக்க வேண்டியிராமல், எமிலியின் கைகள் தன்னிச்சையாக அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டன. அவன் அவளை மெதுவாகத் தரையில் இறக்கினான். ஆனால் உடனே அந்த சிறிய பிரிவைக் கூட தாங்க முடியாதவன் போல மீண்டும் அணைத்துக் கொண்டான். அந்தச் சிறிய பிரிவு கூட அவனுக்கு அவர்கள் பிரிந்து இருந்ததை ஞாபகப்படுத்தியதுஅவள் ஜன்னலிலும் அவன் புற்களுக்கு மத்தியிலும்.

வயல் வெளிகள், வேலிகள், ஓடைகள் எல்லாவற்றையும் தாண்டி அவளை காட்டினுள்ளே தூக்கிச் சென்றான். அவள் பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள். அவனோ தன் மேல் அலைபாயும் அவளின் முடிக்கற்றைகளின் நறுமணத்தில் கிளர்ச்சியடைந்தவனாக இன்னும் வேகமாகச் சென்றான்

குளிர்காலத்தில் மரம் வெட்டுபவர்கள் உபயோகப்படுத்தும் பழைய பாதையில் சென்று கடைசியாக ஒரு நிலப்பரப்பை வந்தடைந்தான். அவர்களைச் சுற்றிலும்  எரிந்த அடிமரத்தைக் கொண்ட சிவப்பு தேவதாரு மரங்கள். தலைவர்கள் அல்லது மிருகங்கள் கூட்டிக் கலைந்த  போர் சபைக் கூட்டத்தைப் போல எரிந்த மரங்களின் அடிக்கட்டைகள் ஆங்காங்கே இருந்தன

அவன் அவளை நெடுந்தூரம் தூக்கிக் கொண்டு வந்திருந்தாலும் அவனுக்கு சிறிது கூட சோர்வு ஏற்படவில்லை. ஆனாலும் மூச்சு வாங்கியதன் காரணம், அவன் இதயம் வேகமாக அடித்துக் கொண்டதுதானேயன்றி வேறில்லை

அவள் ஒரு மெழுவர்த்தியின் திரியைப் போல லேசாக, நெகிழ்வாக இருந்தாள்அந்த மெலிதான உடம்பை தன் கைகளின் வடிவத்து வார்த்து விட்டதைப் போல அவனுக்கு இருந்தது. அவளுடைய மலர்ச்சியான இதயம், கேப்ரியலின் அருகாமையால் சூடாகி, நெருப்பைத் தொட்டுக் கொண்டிருக்கும் மெழுகு போல் உருகியது

அந்த இளைஞன் தரையில் தேவதாரு மரங்களின் கிளைகளைப் பரப்பினான். சிவப்பு கறுப்பு கட்டம் போட்ட தன்னுடைய கம்பளிக் கோட்டைக் கழற்றி அதன் மேல் போட்டான். பிறகு அதன் மேல் எமிலியைக் கிடத்தினான். அவளுடைய கண்கள் ஆச்சரியத்துடன் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டிருந்தன.

நேரத்தின் ஒரு கணத்திற்கு நிறங்கள் இருக்கலாம், மணம் இருக்கலாம், ஒளி இருக்கலாம், உணர்வு இருக்கலாம். ஆனால் அதற்கு உருவம் இல்லை, எல்லை இல்லை. மூடுபனியைப் போன்று மிதக்கும் தன்மை உடையது அது.

நிலவின் கிரணங்கள் மரங்களினூடே குவிந்து பால் போல் வெண்மையாக அந்த நிலப்பரப்பை வெளிச்சமாக்கியது. தேவதாரு மரங்களின் வாசனை கேப்ரியலின் கம்பளிக் கோட்டை ஊடுருவியது

அவன் அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்தான்; அவள் அவனை இறுகப் பற்றிக் கொண்டாள். எவ்வித பாசாங்கும் இல்லாமல் இருவரும் அந்த நொடியில் முழுவதுமாகத் தங்களை ஒருவருக்கொருவர் ஒப்படைத்தனர்

இரவு முழுவதும் சுகித்திருந்தனர். 

காலையில் நிழலைத் தவிர வேறு எதுவும் அசையவில்லை. அனைத்தும் அதனதன் இடத்திலேயே இருந்தன, அந்தக் காதலர்கள் உட்பட

இவையெல்லாம் மறுபடியும் நடக்கக் கூடியவைதான், நாளை இரவே!

உணர்வோடும், ஒளியோடும் கலந்த அதே மணங்களை, அதே நிறங்களை மறுபடியும் விருந்துக்குக் கூப்பிடலாம். ஆனால் எமிலியின் உள்ளுணர்வு இந்த சந்தோஷம் சூரியக் கிரணங்களைக் கண்ட பனி போல, தூள் தூளாகி மறையும் எனச் சொல்லியது. உருவமில்லாத கணங்களை, எப்படிப் பிடித்து வைத்துக் கொள்வது!

எமிலி அந்தக் கம்பளி உடுப்பிலும் நடுங்கினாள். கேப்ரியல் தன் கோட்டை எடுத்துக் கொண்டான். கவலை தோய்ந்த முகத்துடன், அவசரமாக திரும்பிப் போக எத்தனித்தான்

அவர்கள் இப்போது அருகருகே நடந்து கொண்டிருந்தார்கள். அவன் இப்பொழுது அவளைத் தூக்கவில்லை. எமிலியின் கால்கள் வண்டித் தடங்களில் தடுமாறின

அவன் அவளிடமிருந்து இப்போது தள்ளி இருந்தான். கூடிய சீக்கிரமே மறைந்து போகும், தேவதாரு மரக்கிளைகளால் அவன் முதுகில் ஏற்பட்டிருந்த நட்சத்திர வடிவத் தழும்புகள் மட்டுமே அவர்கள் இரவை ஒன்றாகக் கழித்ததற்கான சாட்சியமாக இருந்தன

இவ்வளவு நடந்ததற்குப் பின் ஈரப்பதத்துடன் கூடிய அந்த குளிர்ந்த விடியற்காலையில் ஊருக்குத் திரும்புவது பெரிதான விஷயமாக  இல்லாமல் இருந்திருக்கும் கொஞ்சம் அவர்கள் தங்கள் பிரிவைப் பற்றி யோசித்திருந்தார்களேயானால்

ஆனால் இதயம் எச்சரிப்பதைக் கேட்க நேரம் இல்லை. கடைக்குப் போக நேரம் ஆகி விட்டது.

முன்பு உணர்ச்சிகளே இல்லாதவள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த எமிலி, இப்போது தன் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருந்தாள். அவசரமாக அவள் வேறு ஒரு முகத்தைத் தயார் செய்ய வேண்டியிருந்தது, இந்த உலகத்துக்குக் காட்ட. நம்முடைய உண்மையான முகத்தைத் தெரிந்து கொண்ட பின் பொய்யாக இருப்பதுதான் எவ்வளவு கடினமாக இருக்கிறது!

எமிலிக்குத் தன்னை தன்னுடன் வேலை செய்யும் மற்ற பெண்கள் காணாதவாறு எங்கேயாவது புதைத்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. முன் போல் யாரும் கவனிக்காத வண்ணம் இருக்க முடியாது எனத் தெரிந்து போயிற்று. அவளுடைய புதிய உதடுகள், முன்னர் நிர்மலமாக இருந்த, இப்போது ஆட்கொள்ளப்பட்ட கண்கள்; ஆனால் அதன் ஆழத்திற்கு அச்சப்பட்டு மூடிய கண்கள் என எல்லவற்றையும் கவனிக்க மாட்டார்களா

எமிலி கடையின் கதவைத் திறந்தவுடன் மன உளைச்சலுக்கு ஆளானாள். அவளுடைய மனதில் இருந்த காட்சிகள் யாவும் காற்று வீசி நீரில் உருக்குலைந்த பிம்பங்களாய் நிலையற்றுத் தடுமாறின

அவளுடன் வேலை செய்யும் பெண்கள், அவள் நுழைந்தவுடன் அவளை ஓரங்கட்டி ஆர்வத்துடன் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்

மார்ஸெல் திடீரென அவள் முன் ஒரு பார்சலை நீட்டி, “இந்தா, இது உனக்கு வந்த பார்சல். அந்த மரக்கடையில் வேலை செய்யும் பையன் தன்னுடைய கிராமத்திற்குப் புறப்படும் முன் உனக்குக் கொடுத்தது. இன்னும் இங்கேயே சுற்றிக் கொண்டிருந்தால், தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணிற்கு ஒரு கொத்து க்ரான்பெரீஸ் கூட வாங்க முடியாமல் போய் விடும் என்று சொன்னான்.”

அவர்களுடைய சிரிப்புச் சத்தம் ஆலங்கட்டி புயலைப் போல் எமிலியின் மேல் விழுந்தது

“பார்சலில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்,” என்றாள் மார்ஸெல். 

எமிலி எதுவும் பேசாமல் நின்றாள்; பேசுவதற்கு எதுவுமில்லாமல் எல்லாவற்றையும் அவன் கொண்டு சென்று விட்டான்

அவன் தினமும் இரவின் நிலவொளியில் உன் ஜன்னலின் கீழ் வந்து நின்று பாடுவானாமே? உண்மையா எமிலி , சொல்! நாங்கள் உன்னை ஒரு சாமியார் என்றல்லவா இத்தனை நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தோம், நீ சரியான ஆள் தான்.”

எமிலி பதில் சொல்லவில்லை; சொல்ல எதுவுமில்லை. அவன் எல்லாவற்றையும் கொண்டு சென்று விட்டான், குரல் உட்பட

“இங்கே பார் எமிலி, கண்ணாடி!”

எமிலியின் உடம்பு நடுங்கியது. அவள் மிகவும் ஆசைப்பட்டுக் கொண்டிருந்த கண்ணாடி. ஆனால் எதற்காக இனி கண்ணாடியில் பார்க்க வேண்டும், அவன் அவளைப் பார்க்க விரும்பாத போது?

மார்ஸெல் கண்ணாடியைப் பிடித்துக் கொள்ள, எல்லோரும் எமிலியையும் தங்களுடன் அழுத்திக் கொண்டு கண்ணாடி முன்னால் நின்றனர்

எமிலி முதல் முறையாக தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தாள்அழுது கொண்டிருக்கும் தன் உருவத்தை

 

மேடம் க்ரோபூ இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர, எமிலிக்கு மகிழ்ச்சி தரக் கூடிய வேலையைக் கொடுத்தாள்.

நீ மறுபடியும் இந்த ஃப்ராக்கை பின்ன ஆரம்பிக்க வேண்டும். இது ரொம்பச் சின்னதாக இருக்கிறது. மறுபடி வேலையை ஆரம்பிக்கும் போது மனதை அலைபாய விடாதே. நீ இந்த உலகத்தில் பிறந்ததே பின்னுவதற்காகத்தான்!”

எமிலி திரும்பவும் ஃப்ராக் வேலையை ஆரம்பித்தாள். அவளுக்கு ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. அந்த ஃப்ராக் தன் இறுக்கமான முடிச்சுகளில் அவள் மாற்றதிற்கான கனவை இன்னும் வைத்திருந்தால்

பதற்றத்துடன் அந்தப் பெண் ஃப்ராக்கைப் பிரித்தாள். ஆனால் அந்தக் கம்பளி இழைகள் எதையும் தரவில்லை; மாறாக அதன் இழைகள் விடுபட விடுபட அவள் மனமும் முடிச்சிலிருந்து விடுபட்டது

அவளுக்கு மீண்டும் கம்பளியையும் கூடவே கனவையும் பின்ன தைரியம் வரவில்லை

அவள் போகும் வழியில் வயல் வேலை செய்தாள். புற்கள் வெட்டும் வேலையோ, தோட்ட வேலையோ, துவைக்கும் வேலையோ, எதுவும் அவளுக்குக் கடினமாக இல்லை

தன் கையும் உடம்பும் துவண்டு போகும் அளவுக்கு வேலை செய்தாள். அந்தப் பவள நிற ஃப்ராக்கைப் பின்னிய அந்த ஒரு வார துன்பத்தைத் தொலைக்க தன் வேலையில் தானே மூழ்கிப் போனாள்.

ஆனால் பிறந்து விட்டால், வாழ்வது அவ்வளவு சுலபம் அல்லவே.

எமிலி தன்னைத் தானே அழிக்க முற்பட்டாலும் அவளுடைய ஆன்மாவுடனான தன் முதல் சந்திப்பை அழிக்க முடியாமல் அழுதாள்.

கடுமையான வேலை அவள் இதயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எதிர்பார்ப்பு அவளிடம் இன்னும் தங்கியிருந்தது; அற்புதம் ஏதாவது நடக்கும் எனக் காத்திருந்தாள். 

ஒரு நாள் எமிலி தன்னுடைய ஆன்மா மிகவும் அமைதியுடன் இருப்பதைக் கண்டாள். 

அவள் அப்போது கடவுளை வழிபட்டுக் கொண்டிருந்தாள்.

 

(இலையுதிர் காலம், 1938)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Gayathri R

Gayathri R