Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gayathri/webapps/gayathrir-com/wp-includes/functions.php on line 6114
அரூபம் – Gayathri R
Skip to content

ஜனவரி 25, 2022

 

 

சிலுசிலுவென்ற காற்று சாரலையும் உள்ளே கொண்டு வந்தது. ஊட்டி போல் இருக்கும் கோயமுத்தூர் ஐ.ஓ.பி. காலனியில்தான் சித்தி இருந்தாள். அந்தத் தனி வீட்டைச் சுற்றிலும் செண்பக மரமும் முல்லைக் கொடியும் பன்னீர் ரோஜாக்களும் பூத்துக் குலுங்கின. வெற்றிலைக் கொடியொன்று செண்பக மரத்தை அணைத்துக் கொண்டு கவலையில்லாமல் சந்தோஷமாக சுற்றிக் கிடந்தது.

“இந்தா புள்ள, பொளுதன்னிக்கும் செடியவே பாத்துகிட்டு நின்னா எப்புடி, சாரலடிக்குது பாரு. ஜன்னலச் சாத்து” என்றாள் அம்மா.

சின்னது சிணுங்கியது. ஜன்னலைச் அடைத்துவிட்டு அவளை எடுத்துக் கொண்டேன்.

“குளந்தைய இப்படிக் குடு. நீ பெரியவன குளிப்பாட்டு.”

பெரியவனுக்கு நான்கு வயதாகிறது. அடுத்தது பெண் குழந்தை. ஆறு மாதம். வீடு முழுவதும் நிறைந்து இருந்த மனிதர்களைக் கண்டு பெரியவனுக்கு நிலைகொள்ளவில்லை. சென்னையின் மூக்கோட்டை அபார்ட்மெண்ட்டில் புழுக்கத்தில் இடுங்கி இடுங்கி விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு சித்தியின் வீடு அரண்மனை போல் தோன்றியிருக்க வேண்டும். ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தான். சித்தி எங்கிருந்தோ ஒரு சின்ன ப்ளாஸ்டிக் கதையை அவனுக்கு கொடுத்திருந்தாள். “மணி டிராமாவுல நடிச்சப்போ வாங்குனது.”

“கதா, த க்ரேட் கதா” என்று அனுமாரைப் போல் தோளில் வைத்துக் கொண்டு திரிந்து கொண்டிருந்தான். என் அம்மச்சி, பெரியம்மா, சித்தி, மாமா குடும்பம் மற்றும் என் குடும்பம் என்று பதினேழு பேர் இருந்தோம். எல்லோருக்கும் ஆண் குழந்தைகள். எங்கள் வீட்டில் மட்டும் ஒரு பெண், ஒரு ஆண். என் தலைமுறையில் குடும்பத்திற்கே நான் ஒரே பெண் என்பதால் செல்லம் அதிகம்.

ஒவ்வொரு வருடமும் குல தெய்வக் கோயிலுக்குச் சென்று பொங்கல் வைக்க எல்லோரும் சித்தி வீட்டில் கூடுவோம். எங்கள் குழாயர் கூட்டத்தின் குலதெய்வம் காங்கேயத்துக்கு அருகிலிருக்கும் கொத்தனூர் அம்மன். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று இந்த இந்த ஊரார் சென்று பொங்கல் வைக்கலாம் என்று பிரித்து விடுவார்கள். மாசி மாத பௌர்ணமி பூசை கோலாகலமாக இருக்கும். அன்று எல்லாப் பங்காளிகளும் வந்து பொங்கல் வைப்பார்கள். அம்மச்சியும் ஐயாவும் வருடந்தோறும் எங்கள் வருகைக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு முறை நாங்கள் ஒன்று கூடும் போதும் இந்த இடமே அதிரும்படி ஒரு வாரம் ஆட்டம் போடுவது யார் கண்ணை உறுத்திற்றோ என்னவோ நான்கு வருடங்களுக்கு முன் என் மாமா தன் இரண்டு பதின்ம வயது மகன்களையும், அத்தையையும் தவிக்கவிட்டுப் போய்ச் சேர்ந்தார். தன் ஒரே மகனின் இழப்பைத் தாங்க முடியாமல் எங்கள் ஐயாவும் ஒன்பதே மாதத்தில் கண்ணை மூடினார். அதனால் இறந்தவர்களுக்கு வருடாந்திர பூசை போட்டு விட்டு நான்கு வருடங்கள் கழித்து இந்த வருடம் பொங்கல் வைக்க எல்லோரும் சந்திப்பதால் கூடுதல் உற்சாகம்.

மாமா இறந்தபின் அத்தை தன் பிள்ளைகளுடன் சித்தி வீடு இருக்கும் அடுத்த தெருவிற்கு குடி வந்தார். சித்தி வீட்டுக்கும் அத்தை வீட்டுக்குமாக ஓயாமல் நடந்து இரண்டு தெருவையும் தேய்த்துத் தீர்த்தோம்.

தினமும் போர்டிகோவில் க்ரோட்டன் செடியின் அருகில் ப்ளாஸ்டிக் நாற்காலி போட்டு அமர்ந்து“சாமி, ஓடாத சாமி’ என்று அம்மச்சி சந்தோஷமாக வீட்டைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் கொள்ளுப் பேரனைக் கண்டிப்பதாக பாவனை செய்து கொண்டிருந்தாள்.

வழக்கம் போல் மதிய உணவிற்குப் பின் எல்லோரும் உட்கார்ந்து அரட்டையடிக்க ஆரம்பித்தோம். பேச்சு அரசியல், சினிமா, வேலை என்று எங்கெங்கோ சுற்றினாலும், அது வெறும் வெளிப் பூச்சு என்று எல்லோருக்கும் தெரியும். மாமா இல்லாத வெறுமை, அந்த ஆதங்கம் பெரும் கல்லைப் போல் ஒவ்வொருவர் மனதிலும் அழுத்திக்கொண்டு இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. அவரைப் பற்றிப் பேசினால் எல்லோரும் உடைந்து போவார்கள் என்று தெரிந்தும் அவரைப் பற்றிப் பேசுவதை தவிர்க்க முடியவில்லை.

ஐயா இறந்தது கூட குடும்பத்தை பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால் ஒரு நாள் கூடத் தலைவலியென்று படுக்காத மாமா திடீரென மாரடைப்பில் காலமானதை யாராலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ‘தங்கப் புள்ள’ என்று கண்கள் சிரிக்க, கருத்த முகத்தில் பளீரென்ற வரிசையான வெள்ளைப் பற்கள் தெரிய மாமா கூப்பிடும்போது…

குடும்பத்தில் எல்லோரையும் விட நான் சிவப்பு, அழகு என்பதால் என்னை வேலை செய்யவே விட மாட்டார் மாமா. தப்பித் தவறி வயலுக்கு அவருக்கு சாப்பாடு கொண்டு சென்று விட்டால் வீட்டில் இருப்பவர்களை பின்னி எடுத்து விடுவார்.

“ஆத்தா, இங்க உக்காந்து என்ன சீவிக்கிட்டு இருக்கற, இவ தங்கப் புள்ள கிட்ட சாப்பாடு குடுத்தனுப்பறத பாக்கலியா? இன்னொரு தரவ புள்ளய வெய்யில்ல அலைய விடுங்க, கொல விளும்.”

“ஆமாண்டா, உங்காத்தா வெயில்ல கருகறது உனி உனக்குத் தெரிஞ்சிட்டாலும்… தாடிக்கொரு சீயக்கா, பொச்சுக்கொரு சீயக்கா…”என்று அலுத்துக்கொண்டே பெருமையாக அம்மச்சி தன் மகனைப் பார்ப்பாள்.

“ம்க்கும், எங்களுக்கெல்லாம் ஒடம்பு இரும்பாலத் தான செஞ்சிருக்குது…”என்று அத்தை முணுமுணுத்தாலும் அவளுக்கும் என் மேல் கொள்ளைப் பிரியம்தான்.

திருமணம் முடிந்து மறுவீட்டு விருந்துக்கு நான் வந்திருந்தபோது “மாப்பள மாமனார் மாமியார் ஓகே தான? சரியில்லைனா வுட்டுட்டு வந்துரு தங்கப்புள்ள. மசுரே போச்சு…” என்றார் அணைத்துக்கொண்டு.

தன் அண்ணன் என் மேல் வைத்திருக்கும் அளவற்ற பிரியம் எப்போதும் என் அம்மாவை நெகிழச் செய்தது. தன் அண்ணனை யார் என்ன சொன்னாலும் தாங்கிக் கொள்ள மாட்டார். சித்தியும் பெரியாம்மாவும் கூட அப்படித்தான். என் அப்பாவுக்கு மட்டும் மாமாவை ஏனோ அவ்வளவாகப் பிடிக்காது.

‘உங்கண்ணன் கொஞ்ச விவகாரம் புடிச்சவன்டி’ என்று என் அப்பா மிகச் சாதாரணமாகச் சொல்லி விட்டாலே என் அம்மாவால் ஜீரணிக்க முடியாது. பிலுபிலுவென்று என் அப்பாவைப் பிடித்து விடுவாள். சண்டை மண்டை உடையும். அது சாதாரண சண்டையாக இருக்காது. அப்பாவின் உடன்பிறப்புகளை இழுத்து தரையில் போட்டு தேய்த்து உருத்தெரியாமல் ஆக்கி விடுவாள்.

‘ஏன் உங்களோட பொறந்ததுக எப்புடி?என்ர கொளுந்தன் அப்புடியே அண்ணியாரேன்னு வந்து உருகிட்டாலும். கொளுந்தியா கேக்கவே வேணாம். வாயில கத்திய வச்சுகிட்டு யாரத்தா வெட்டிப் போடலாம்னு சுத்துது….’ என்று ஆரம்பித்தாளென்றால் அரைமணி நேரம் பாராயணம் செய்துவிட்டு ‘…கொத்தனூர்க்காரி எனக்கு இந்த சன்மத்துல இதான்னு எளுதி போட்டா. நானா இருக்கப் போயி எல்லா களிசட மேலயும் சக்கரயத் தூவி முளுங்கிக்கறேன்…இதுகளொடயெல்லாம் எங்கண்ணன் சாமி’ என்று மூச்சு வாங்கி முடிப்பாள்.

அப்பா சும்மா இருப்பாரா? அந்த ஹாலிலேயே உட்கார்ந்துகொண்டு வக்கீலைப் பார்த்து, கோர்ட் படியேறி டைவர்ஸ் வாங்கி,பாகம் பிரித்து, குழந்தைகளைப் பிரித்து, (சாமி, நீ உங்கொப்பனோடயா, ஆத்தாளோடயா?) பின் களைத்துப் போய் நிதர்சனத்திற்கு வந்து, ‘சோத்தைப் போடு’ என்று அமைதியாவார்.

 

மதிய நேரம் என்றாலும் இளவெயிலும், தூறலும், குளிர்ந்த காற்றும் உண்ட மயக்கத்தை அதிகப்படுத்த ‘கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரோம்’ என்று பேச்சிலிருந்து பெரியவர்கள் மெல்ல கழன்று கொள்ள, நானும் என் சகோதரர்களும் மட்டும் இருந்தோம். குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

“மாமாவை ரொம்ப மிஸ் பண்றேன்” என்றான் லயோலாவில் விஸ்காம் படித்துக் கொண்டிருக்கும் என் தம்பி.

“ம், போன முற நம்ம எல்லாரையும் குதிரையாறு ஃபால்ஸ் கூட்டிகிட்டுப் போனாரில்ல? என்னமா ஆட்டம் போட்டோம்”என்றான் இன்னொருத்தன்.

“ம். இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம்.”

“நல்லாத்தான் இருந்தாரு அப்பா, எப்படி இப்படி… திடீர்னு” என்ற மாமாவின் மகன் தொடர்ந்து ‘தண்ணி குடுன்னு கேட்டார். கடகடன்னு தண்ணியக் குடிச்சவரு டக்குன்னு கீள விளுந்துட்டாரு. பதறிப் போய் அவரத் தொடறதுக்குள்ள மெல்ல எளுந்து அம்மாவப் பாத்தாரு. அப்படியே சரிஞ்சுட்டாரு. என்ன நினைச்சிருப்பாரோ? நாம அவ்ளோதான்னு தெரிஞ்சிருக்குமோ?” என்றான்.

“செத்தப்பறம் எங்க போவோம்? வாட் ஹாப்பன்ஸ்?”

“யாருக்கும் தெரியும்.. ஒவ்வொருத்தரும் ஒண்ணொண்ணு சொல்றாங்க. மறுபடி பொறக்கலாம் இல்ல ஆவியா சுத்திகிட்டு இருக்கலாம். இல்ல அதற்கு மேல ஒண்ணுமில்லாமக்கூட இருக்கலாம். என்னனு தெரிஞ்சா நல்லா இருக்கும் இல்ல?”

“தெரிஞ்சுக்கலாமா?” என்றான் மும்பையில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த பெரியம்மா மகன் சங்கர். அவன் தான் எங்கள் எல்லோரையும் விடப் பெரியவன்.

“எப்புடி?” என்று விழிகள் விரியக் கேட்டேன்.

“ஓய்ஜா போர்ட் தெரியும்ல?”

“ஐய்யய்யோ, ஜகன் மோகினி படம் பார்த்தாலே பயத்துல ராத்திரில விளக்கைப் போட்டுகிட்டு தூங்கற ஆளு…நான் வரல இந்த விளையாட்டுக்கு” என்றேன்.

அந்த யோசனையைக் கேட்டு என்னைத் தவிர எல்லோரும் பரபரப்பானார்கள். ஆறு ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாகப் போனதால் என் எதிர்ப்புக் குரல் அமுங்கிப் போனது.

“போர்ட் இருக்கா என்ன?”

“இல்லடா, ஒரு கார்ட்போர்ட்ல ஏ பி சி எழுதி காயின் நடுல வச்சு ட்ரை பண்ணுவோம்.”

“நா போறேன். நீங்க என்னவோ செய்ங்க.” என்றேன்.

“சத்யா, போகாத, மாமாவுக்கு உன்னயத் தான் ரொம்பப் புடிக்கும். ப்ளீஸ்” என்று நான் மறுக்க மறுக்க தள்ளிக்கொண்டு போனார்கள்.

சந்தேகத்துடனும், லேசான பயத்துடனும் மாடியில் இருக்கும் ஐயாவின் அறைக்குச் சென்றோம். சங்கர் மேசையில் ஒரு கெட்டி அட்டையைப் போட்டு அதன் மேல் ஒரு வெள்ளைத் தாளை வைத்தான். அதில் வட்டமாக ஏ பி சி எழுதினான். உள் வட்டத்தின் இடது பக்கத்தில் ‘யெஸ்’ என்றும் வலது பக்கத்தில் ‘நோ’ என்றும் எழுதினான். நடுவில் ஒரு பத்து ரூபாய் நாணயத்தை வைத்துவிட்டு மேசையைச் சுற்றிலும் நாற்காலிகளைப் போட்டான்.

“சத்யா, கார்த்திக், வினு, நானு… நாங்க நாலு பேரும் இதைச் செய்யறோம். நீங்க மூணு பேரும் உட்கார்ந்திருங்க…” என்று மாமாவின் இளைய மகனையும், என் தம்பியையும், சித்தி பையனையும் உட்காரச் சொல்லி விட்டான். கதவு, ஜன்னல்கள் எல்லாவற்றையும் அடைத்து, நடுவில் ஒரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்தான். மதிய நேரமானாலும் கதவு ஜன்னல்கள் அடைக்கப்பட்டு இருந்ததாலும், திரைச்சீலைகள் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் தடை செய்ததாலும், அந்த இடம் ஒரு அமானுஷ்ய போர்வை போர்த்திக் கொண்டது. நடுவில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் எங்கள் நிழல்கள் ஆடிக் கொண்டிருந்தது கலக்கத்தை உண்டாக்கியது.

“டேய்…இது தேவையா?” என்று முனகினேன்.

என்னை அவர்கள் பொருட்படுத்தவேயில்லை.

“வாங்க! காயின் ஓரத்தில் எல்லாரும் ஒரு விரலை வைங்க.” மற்றவர்களுக்கு இடம் விட்டு நான் ஒரு மூலையில் வைத்தேன்.

மரியாதையான, உணர்ச்சி மிகுந்த குரலில் “புண்ணியலோக ஆவிகளே! எங்களுக்கு இது முதல் முறை. எங்க மாமாவோட ஆவி இருந்தா கூட்டிகிட்டு வாங்க. ஐயா இருந்தாலும் கூட்டிகிட்டு வாங்க. மாமா, ஐயா, இங்க இருந்தீங்கன்னா எங்களுக்கு எப்படியாவது தெரியப்படுத்துங்க” என்றான் சங்கர்.

எனக்கு வயிற்றைக் கலக்கியது. இவர்கள் பேச்சைக் கேட்டு வந்துருக்கக் கூடாதோ? உருவமாக இருந்தவர்கள் அருவமாக ஆகும் போது எங்கிருந்து இந்த பயம் வருகிறது? நம்மைத் தூக்கி வளர்த்துக் கொஞ்சியவர்கள் தானே? அரூபத்திற்கு காலம் காலமாக நாம் கொடுத்திருக்கும் அடையாளங்கள்தான் நம்மை அதன் மேல் பயம் கொள்ளச் செய்கிறது. சமயத்தில் உருவமே பயம் என்றால் யாராவது வலியப்போய் அருவத்தை தேடுவார்களா?

வெளியில் மழைத் தூறல் பரபரவென்று காய்ந்த இலைகள் மீது விழும் சப்தம் வேறு இந்த அமானுஷ்ய சூழ்நிலையோடு ஒத்திசைத்தது.

மெல்ல பத்து ரூபாய் நாணயம் நகர்ந்தது. எல்லோரும் சற்றுத் திகிலுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். “யாருடா நகத்துறீங்க?” என்று கேட்டான் வினு, மாமாவின் மகன்.

“நான் இல்லை” என்று மற்ற மூவரும் ஒரே குரலில் பதிலளித்தோம்.

“மாமாவா வந்திருக்கிறது?” என்று கேட்டான் சங்கர்.

நாணயம் நேராக ‘நோ’ என்ற சொல் இருக்கும் இடத்தை அடைந்தது. “அப்ப நீங்க யாரு?”

நாணயம் வேகமாக ‘ஐ’ ‘ஒய்’ ‘ஏ’விற்குச் சென்றது. “ஐயா” என்று கண்களை விரித்துக் கொண்டு சொன்னான் கார்த்திக். எப்படியிருக்கீங்க என்ற கேள்விக்கு ‘குட்’ என்ற வார்த்தை பதிலாக வந்தது.

“டேய், நம்ம ஐயாவுக்கு இங்க்லீஷே தெரியாதேடா” என்று அடிக்குரலில் நான் உறுமியதற்கு “ம்” என்ற பதிலோடு அடுத்த கேள்விக்குத் தாவினார்கள்.

எனக்கு நம்பிக்கையற்றுப் போனது. நாமே நம்மையறியாமல் நமக்குச் சாதகமான பதில்களை, நாம் கேட்க விரும்பும் சொற்களை தேர்வு செய்கிறோம் என்று தோன்றியது. இந்தப் பைத்தியகாரத்தனத்திற்கு சம்மதித்திருக்கவே கூடாது. பிடிக்காததை செய்யவே கூடாது என்று வைராக்கியம் கொண்டாலும் சில முறை அது சுடுகாட்டு வைராக்கியமாகி விடுகிறது. பல முறை வேண்டாம் வேண்டாம் என்று மனது பதறப் பதற சூழ்நிலை அதனுள் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. என்னுடைய இந்தக் கையறு நிலை எனக்கு என் மேல் எரிச்சலைத் தந்தது. எழுந்திருக்கலாம் என்று நினைக்கையில்,

“மாமா எங்கிருக்கார் ஐயா? வரச் சொல்ல முடியுமா?” என்றான் சங்கர்.

“நோ” என்ற பதில் வரவும் “ஏன் ஐயா?” என்று கேட்டான் சங்கர்.

“பார்ன்” அதாவது பிறந்து விட்டார் என்ற பதில் வந்தது.

“எங்கே? இந்த ஜென்மத்தில் அவர் பெயர் என்ன?”

சில விநாடிகள் நகராமல் இருந்த நாணயம் மெல்ல நகர்ந்தது. ‘ஏ’ ‘வி’ ‘ஐ’ ‘என்’ ‘ஏ’ ‘எஸ்’ ‘ஹெச்’ – அவினாஷ்.

முதுகுத்தண்டின் அடியிலிருந்து தீக்கங்கு ஒன்று புறப்பட்டது. “புல் ஷிட், இனஃப்’ என்று பதற்றத்தோடு நாற்காலியை வேகமாக பின்னுக்குத் தள்ளி எழுந்து கதவைத் திறந்தேன். திரைச்சீலைகளை நீக்கி ஜன்னல்களையும் திறந்தேன். கை நடுங்கியது.

அதிர்ந்து போய் எல்லோரும் என்னைப் பார்த்தனர். சிறிது நேரம் யாரும் ஒன்றும் பேசவில்லை. நான் கோபத்தில் இருந்தேன். “கிண்டல் பண்றிங்களாடா?” என்று சீறினேன்.

“கண்டிப்பா இல்ல… ஏன் மாமா உன்னோட பையனா பொறந்திருக்கக் கூடாதா? மாமா போய் நாலு வருசமாச்சு. நம்ம அவிக்கும் நாலு வருசம். சரியா இருக்கு” என்று அதிர்ச்சி கலந்த வியப்போடு சொன்னான் சங்கர்.

“ஆக்சுவலா நீ சந்தோஷப்படணும் தான மாமா உனக்கே குழந்தையா வந்து பொறந்திருந்தா? ஏன் கோபப்படற?”

பதட்டத்தில் பதில் சொல்லத் தெரியவில்லை.“போதும். கீழ போகலாம். ஒரு மணி நேரத்துக்கு மேல ஆச்சு” என்றேன்.

அழுகையும், கோபமும், தவிப்புமாக என்னை ஒரு இனம் புரியாத உணர்ச்சி ஆட்கொண்டது.

சிறிய வயதில் ராசுவின் வீட்டுக்கு முன் இருக்கும் கிணற்றில் ஓங்கி வளர்ந்து நின்ற அரசமரத்தின் இலைகள் வெள்ளையாக பூத்துப் போய் இருக்கும். ‘அங்க வெள்ள ஜடைப் பேய் இருக்கு’ என்று என்னை பாடாய் படுத்திய சகோதரர்கள் இன்று என்னை மூச்சுமுட்ட ஒரு இருட்டறையின் மூலையில் தள்ளியது போலிருந்தது.

தடதடவென படிகளில் இறங்கினேன்.

“எங்கடா போனீங்க. எந்நேரமும் பேச்சு. ஏம்புள்ள கண்ணெல்லாம் செவந்திருக்கு? நீ தூங்கறதுக்கென்ன? கொளந்த தூங்கும்போது நீயும் தூங்குனாத்தான ஒடம்பு விசுக்குன்னு இருக்கும்? என்ன?” என்றபடி பெரியம்மா எங்களுக்கு தட்டு நிறைய அரிசி முறுக்கும் அதிரசமும் தந்துவிட்டு டீ போட சமையலறைக்குச் சென்றாள்.

குழப்பப்பட்ட மனதோடு மெல்ல நடந்தேன். ஹாலில் அத்தை அவினாஷுக்கு போர்ன்விட்டா கொடுத்துக் கொண்டிருந்தாள். ஏனோ என்னால் அவளை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. அவினாஷையும் இனி முன்போல் பார்க்க முடியாதோ என்ற எண்ணம் அரித்தது. சேச்சே! இது வெள்ள ஜடைப் பேய்க் கதையின் தொடர்ச்சிதான். நோய்வாய்ப்பட்ட அந்த மரத்தை பேயென்று நினைத்த அதே மயக்கம்தான் இது. சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும். மனது கொஞ்சம் ஆசுவாசமடைந்தது.

அவினாஷ் போர்ன்விட்டாவைக் குடித்துவிட்டு மறுபடி வீட்டைச் சுற்றி வண்டியோட்டக் கிளம்பினான். “எம்மட தங்கச் சின்னக் கவுண்டரு கிளம்பிட்டாரு” என்று வாஞ்சையோடு அவனைப் பார்த்துவிட்டு, என்னிடம் “சின்னத்தாயி வந்துருவா இப்ப, அவ வேலைய முடிச்சிட்டு போனப்பறம் வரங்கண்ணு’ என்றபடி செருப்பை அணிந்து கொண்டு கிளம்பினாள் அத்தை. ஏனோ கூடவே நானும் என் சகோதரர்களும் வாசல் வரை சென்றோம்.

‘உன்ர மாமன் இந்தக் குட்டிங்கள பாக்காம போயிருச்சே புள்ள. கொண்டாடிருக்கும்…’ என்று என்னைப் பார்த்து சோகமாகச் சொன்னாள் அத்தை.

‘எப்படி? என் புள்ளையையும் தடவித் தடவியா? என்னைப்போல் சொல்ல முடியாமல் தவிச்சு வாழ்க்கையை நாசமாக்கவா?’

அத்தை காம்பவுண்டைத் தாண்டி வெளியே சென்றதும், டுர்ரென்று கத்திக் கொண்டு வீட்டைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்த அவினாஷ் திடீரென்று காம்பவுண்டைத் தாண்டி தெருவுக்கு வந்து அத்தையைப் பார்த்து,

“ஐ மிஸ்ஸ்ஸ் யூயூயூ…” என்று பெருங்குரலில் கத்திவிட்டு உள்ளே ஓடினான்.

2 thoughts on “அரூபம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Gayathri R

Gayathri R