Skip to content

ஹெக்ஸகோன் – 2

2

« La jeunesse n’aime pas les vaincus »

                                 – Simone de Beauvoir

18 ஜூலை,  1983

இன்னிக்கு எனக்கு பர்த்டே! டென்த் பர்த்டே! குண்டு தமிழ் டீச்சர் இந்தபர்த்டேவிலிருந்து தினமும் டயரி எழுதச் சொன்னார். அம்மாவிடம் கேட்டு நோட்டுவாங்கினேன். அடுத்த வருடம் டயரி வாங்கிக் கொடுக்கறேன்னு அம்மா சொன்னா.

ஸ்கூல்ல இருந்து மூணு மணிக்கு வந்துட்டேன். அம்மாகிட்ட ஒரு மணி நேரம்விளையாடிட்டு வரேன்னு சொல்லி வெளியே ஓடினேன். உமா, மீனா, தேவி எல்லாரும்விளையாட தேனு வீட்டுக்கு வரச் சொன்னாங்க.

எங்கடி ஓடறன்னு அக்கா சுமதி கத்தினாள்.

தேனு வீட்டுக்கு போறேன்னு சொன்னேன்.

என் தங்கை பேபி (அவள் பெயர் ஷண்முகப் ப்ரியா, வீட்டுல பேபின்னு கூப்பிடுவோம்) நானும் வரேன்னு சொன்னா.

அவளையும் இழுத்துண்டு ஓடினேன். தேனு வீடு 102ஆம் நம்பர், எங்க வீடு 149. எங்ககாலனியில  நூறுக்கு மேல வீடு இருக்கும். இரண்டு தெரு தள்ளி இருக்கு தேனுவோடவீடு. சீக்கிரம் போகணும். பேபி வேற வேகமா ஓட மாட்டா. சின்ன காலுதான. ஆறுவயசுதான்.

வழியில் அமுலும் ஜாகீரும் அவங்க அம்மாவோட வந்தாங்க. எங்கடி ஓடறீங்க குட்டிங்களான்னு ஜாகீர் அம்மா கேட்டாங்க. தேனு வீட்டுக்குன்னு சொன்னேன். அம்மா, அம்மா நாங்களும் போகவான்னு ஜாகீர் கேட்டான். அப்பறமா போகலாம்னு ஜாகீரம்மா சொல்லிட்டாங்க. அவங்க ரெண்டு பேரையும் பார்க்க பாவமா இருந்தது.

தண்ணி பைப்பு இருந்த இடத்திலிருந்து ரெண்டாவது வீடு தேனு வீடு. கலர் கலரா தண்ணிக் குடம் வரிசையா வெச்சிருந்தாங்க. கூஸ் மாமா நின்னுண்டிருந்தார் வரிசைல. அவர் என்னோட அம்மாவோட அண்ணா. அவர் வீட்டுலதான் காந்தித் தாத்தாவும் காந்திப் பாட்டியும் இருக்காங்க. அவங்க என்னோட அம்மாவோட அப்பா, அம்மா. என்னை அவர் பார்த்தவுடனேயே தேனு வீட்டுக்குன்னு கத்தி சொல்லிட்டு பாவாடையை ஒரு கைலயும் பேபிய ஒரு கைலயும் பிடிச்சுண்டு ஓடினேன்.

தேனு அம்மாட்ட எனக்கு இன்னிக்கு பர்த்டேன்னு சொன்னேன். அப்படியா சாமின்னு சொல்லி ஒரு அதிரசம் தந்தாங்க. உமா, மீனா, தேவி, ஜோதி, தேனு எல்லாரும் ஹாப்பி பர்த்டே பாட்டு பாடினாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துது. பர்த்டே வந்தாலே எனக்கு ரொம்பப் பிடிக்கும். புதுப் பாவாடை, பாயசம், முட்டாய் கிடைக்கும். அன்னிக்கு யாரும் திட்ட மாட்டாங்க. ஸ்கூல்ல மிஸ்கூட திட்ட மாட்டாங்க.

எல்லாரும் கொஞ்ச நேரம் கசகசன்னு பேசி பாண்டி விளையாடலாம்னு முடிவு செஞ்சோம். தேனு கட்டம் போட, சாட் பூட் த்ரீ போட்டு, நான் முதல்ல கல்லெறிஞ்சு விளையாட ஆரம்பிச்சேன்.

நேரம் போனதே தெரியல. பக்கத்து வீட்டு குமார் வந்து அம்மா உன்னைய கூப்பிடுறாங்ககீதான்னு சொன்னப்புறம்தான் பேபியை இழுத்துண்டு ஓடினேன். ஓடாத புள்ள, பொளுதன்னிக்கும் ஓட்டம்தான் , நடக்கவே தெரியாதுன்னு திட்டுனாங்க தேனம்மா.

வேற நாளா இருந்தா அம்மா திட்டியிருப்பா. இன்னிக்கு திட்டல விளையாடிட்டு லேட்டா வந்ததுக்கு. கைகால் அலம்பிண்டு வந்து சாப்பிடு. உனக்குப் பிடிச்ச மொட்லி பாயசம் பண்ணியிருக்கேன்னா.

ஜவ்வரிசிப் பாயசம்னு சொல்லு. பத்து வயசாச்சு. இன்னும் என்ன மொட்லி பாயசம்னு அலுத்துண்டா பாட்டி.

அப்பா, ஹரி அண்ணா , சுமதி அக்கா , நான், பேபி எல்லாரும் தரையில வரிசையா உட்கார்ந்தோம் டிபன் சாப்பிட.  தாத்தா,என் அப்பாவோட அப்பா, போன வருஷம் தான் செத்துப் போனார். பாட்டியும் அம்மாவும் பரிமாற எல்லோரும் சாப்பிட்டோம். அண்ணாவுக்கு மட்டும் கெட்டித் தயிர் தனியா பாட்டி எடுத்து வெச்சிருந்தா. எங்களுக்கெல்லாம் தண்ணி மோர்தான். சுமதி சண்டை பிடிப்பாள். ஆனால் ஒண்ணும் செல்லாது. அண்ணா யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டான். எப்போதும் படித்துக்கொண்டிருப்பான். பன்னிரெண்டாவது வகுப்பு படிக்கிறான். சுமதி ஒன்பதாவது, நான்அஞ்சாவது, பேபி ஒண்ணாங் கிளாஸ். அம்மாவும் பாட்டியும் அவர்களே எடுத்துப் போட்டுண்டு சாப்பிட்டாங்க. சுமதி அப்பப்போ ஹெல்ப் பண்ணினா பரிமாற.

அப்பா, நாம் என்ன ஜாதின்னு திடீர்னு கேட்டா பேபி.

ஆச்சரியமான அப்பா ஏன் கேக்கறன்னு கேட்டார்.

இல்லப்பா, தேனு அக்காவோட பாட்டி ஊர்ல இருந்து வந்திருக்கால்ல, அவா கேட்டாநான் ஹிண்டுனு சொன்னேன். அதில்ல, ஜாதி என்னன்னு கேட்டா. எனக்குத் தெரியலை, அப்படீன்னு பேபி சொன்னா.

அது வந்துவெளியிலயே சொல்லிக்க முடியாத ஒரு ஜாதி. அதைப் பத்தி எங்கயும்பேசக் கூடாது. ஓகேவான்னார் அப்பா.

சரின்னு தலையாட்டினா.

ஆறரை மணிக்கு கோவிலுக்குப் போகலாம்னு சொல்லி எல்லாரும் அவங்கவங்க வேலையைப் பார்க்கப் போயிட்டாங்க. பேபி என்னை விட்டு எங்கயும் போக மாட்டா. எப்பவும் குரங்குக் குட்டி மாதிரி என் பக்கத்துலயேதான் இருப்பா.

என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். நான் என்ன பண்ணப் போறேன்னு பேபி என்னையே பார்த்துண்டிருந்தா. கொஞ்ச நேரம் இந்திரஜால் காமிக்ஸ் படிக்கலாம்னு படிக்க ஆரம்பிச்சேன். அக்கா சத்தமா படிச்சு கதை சொல்லுன்னு பேபி சொன்னா.

இரும்புக் கை மாயாவி அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். எப்படி கரண்டைத் தொட்டு மாயாவி மறைஞ்சு போயிடுவாருன்னு ஒரே ஆச்சரியப்படுவா. பேபி வயசு எனக்கிருக்கும்போது அம்மாட்ட நானும் கரண்ட் கம்பியப் பிடிச்சா மறைஞ்சு போயிடுவனான்னு கேட்டவுடனே அம்மா பதறிப் போய் சுமதிகிட்ட இனி இந்த மாதிரி காமிக்ஸ் இவ கிட்ட காமிக்காதன்னு சொல்லிட்டா. அப்புறம் உட்கார்ந்து அமைதியா எனக்கு சொல்லிக் கொடுத்தா அப்படியெல்லாம் பண்ணக் கூடாதுன்னு.

அம்மா நிறைய புக்ஸ் படிப்பா. கூஸ் மாமாவும்தான். மாமா எங்களை கூஸ்ஸ்ஸ்ன்னுகூப்பிடறதால அப்படி பேர் வச்சுட்டோம். சாப்பிடும்போது கூட அம்மா புக் படிச்சுண்டேதான் சாப்பிடுவா. அப்பாவுக்கும் பாட்டிக்கும் கோவம் வரும். அதனால அம்மா சில நாள் தனியா சாப்பிடுவா புக் படிச்சுண்டே. ஒரு நாள் சோத்துல விழற வண்டையும் சேர்த்து முழுங்கப் போறன்னு அப்பா திட்டுவார். எனக்கு சிரிப்பா வரும். அப்படியாச்சுன்னா எப்படியிருக்கும்னு கற்பனை பண்ணிப் பார்ப்பேன். இப்பக் கூட பயங்கரமா சிரிப்பு வருது.

இரும்புக்கை மாயாவியோட உறை பனி மர்மம் புக்க வாசிச்சு முடிச்சேன். பேபியைப் பார்த்தேன். தூங்கிட்டா. வீடே அமைதியா இருந்துது. சாமி அலமாரியில் வச்சிருக்கற என்னோட புதுப் பாவாடைய இன்னொரு தடவை பார்க்கணும்னு ஆசை வந்தது. ஓடிப்போய் பார்த்தேன். ரோஸ் கலர்ல பூப்போட்ட பாவாடை. அதே கலர்ல சட்டை. சாயந்திரம் பாட்டி ஆசீர்வாதம் பண்ணிக் கொடுப்பா.

பாவாடையைப் பார்த்துட்டு வந்துதான் இந்த டைரிய எழுதறேன். எல்லாரும் ரெடியாகும்போது நான் அதைப் போட்டுப்பேன். எல்லாரும் கோவிலுக்குப் போவோம். குருக்கள் மாமா சர்க்கரைப் பொங்கல் தருவார். கோவிலுக்குப் பக்கத்து வீட்ல இருக்கற கல்கண்டு தாத்தா எனக்கு எப்பவும் கல்கண்டு தருவார். அவர் கிட்ட எப்பவும் விபூதி வாசனை வரும். அவர் வாய் சிவ சிவான்னு முணுமுணுத்துண்டே இருக்கும்.

கல்கண்டு தாத்தாவும் பாட்டியும் மட்டும் அந்த வீட்ல இருந்தாங்க.அவங்க பசங்க அவங்களை இங்க விட்டுட்டு மெட்ராஸ்ல இருக்காங்களாம். கல்கண்டு பாட்டி மெல்ல நடந்து சமைப்பா. அப்பப்போ தாத்தா வீட்டு ஹால்ல உட்கார்ந்து பேசிட்டு வருவேன்.  

இந்த யுனிவர்ஸ்ல கேலக்ஸி, மில்கி வே எல்லாம்தான் தாத்தா இருக்கு, சாமி எங்க இருக்காருன்னு ஒரு தடவ தாத்தாகிட்ட கேட்டேன். கரண்ட பாக்க முடியுதா உன்னாலன்னு கேட்டார். முடியாது. ஆனால் லைட் எரிஞ்சா தெரியும்னு சொன்னேன். அதே போலத்தான் சாமியும். கண்ணுக்குத் தெரியாது. ஆனா வேற ஏதாவது மூலமா அவர் இருக்கறத உணர்த்துவார்னு சொன்னார். எனக்கு சாமிய அப்படி உணர வேணும்னு சொன்னேன். பௌர்ணமி அன்னிக்கு நிலா நாம் எங்க போனாலும் நம்ம கூட, நமக்கு மேல வர மாதிரியே இருக்கும்ல. அதுபோல சாமி எப்பவும் உனக்கு மேல உன் கூடவே வருவாரு. எப்பவும் அப்படியே கற்பனை பண்ணிக்கோ. அவர் கூட பேசு. சந்தோஷமா இருந்தாலும் பேசு. துக்கமா இருந்தாலும் பேசு. அவர் மேல இருந்து உன்னை எப்பவும் பார்த்துகிட்டே இருப்பார். உனக்கு கஷ்டம் வரும்போது காப்பாத்துவார். இப்படியே அவர்கூட பேசிக்கிட்டே இருந்தா ஒரு நாள் அவர நீ உணர முடியும் குழந்தனு சொன்னார்.

சாமிய உணர நான் ஆசையா வெயிட் பண்றேன். எப்போன்னுதான் தெரியல. நிறைய எழுதிட்டேன். அம்மா என்னைக் கூப்பிடற சத்தம் கேக்குது. நான் கிளம்பணும்.ராத்திரி படுக்கறதுக்கு முன் மிச்சத்தை எழுதிட்டு தூங்குவேன்.

**

வந்துட்டேன். ஆனா எனக்கு எழுத வேண்டாம்னு தோணித்து. ஆனாலும் எங்க தமிழ்டீச்சர் நல்லது கெட்டது எல்லாத்தையும் எழுது. அது உனக்கு நன்மை பயக்கும்னு சொன்னாங்க. இப்படி எழுதறது கல்கண்டு தாத்தா சொன்ன மாதிரி சாமி கிட்டசொல்றது மாதிரியும் இருக்கும்னு தோணுது. மேல இருந்து பாக்கறீங்க தான சாமி. இன்னிக்கு கோவிலுக்கு போயிட்டு வந்தப்பறம் நடந்தது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். எனக்கு என்னமோ பிடிக்கலை. ஒரு மாதிரி பயமா இருக்கு. இதுக்குமேல எழுத பயமா இருக்கு.

**

‘சாமி, நான் எழுதல. உன் கிட்ட பேசிடறேன். நீ நடந்தத பார்த்திருப்ப. ஆனாலும் உன்கிட்ட பேசினா எனக்கு நிம்மதியா இருக்கும். கோவிலுக்குப் போயிட்டு, கல்கண்டு தாத்தா பாட்டியப் பார்த்து நமஸ்காரம் பண்ணிட்டேன். கோவிலுக்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் சுந்தரி அக்காவைப் பார்த்துட்டு வரேன்னு சுமதி போயிட்டா. அம்மா, அப்பா, பாட்டி மூணு பேரும் பேபியையும் கூட்டிண்டு கூஸ் மாமா வீட்டுக்குப் போறதா சொன்னா. மாமா வீடும் அதே காலனிதான். 96ஆம் நம்பர். வீட்டுக்குப் போய் அண்ணாவை மாமா வீட்டுக்கு வரச் சொல்லிட்டு அவனோட நீ வான்னு சொன்னாங்க. நான் குதிச்சுண்டே வேகமா வீட்டுக்கு ஓடி வந்தேன்.’

‘மாமா வீட்டுக்குப் போக எனக்கு ரொம்பப் பிடிக்கும். வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டிதிருப்பார்  மாமா. மாமா பையன் ராமுவும் அஞ்சாவதுதான் படிக்கிறான். அவனுடன் விளையாடலாம். வீட்டுக்கு வந்தவுடன் அண்ணாவின் ரூமுக்குப் போனேன். அண்ணா முதுகைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அண்ணா, ஹரி அண்ணா… அப்பா உன்னை கூஸ் மாமா வீட்டுக்கு வரச் சொன்னா. வா போகலாம்னு கூப்பிட்டேன். மெல்ல என்னை திரும்பிப் பார்த்தான். திடீரென்று பார்த்தால் கொஞ்சம் கொஞ்சம் அப்பாவைப் போலிருக்கான் அண்ணா. எனக்கு அவன் மேல் ஒரே பாசமா இருந்தது. அவன் கையைப் பிடித்து இழுத்தேன். வா அண்ணா போலாம்னு அவசரப்படுத்தினேன். அப்பா, அம்மா, பாட்டி எல்லாரும் எங்கன்னு கேட்டான். மாமா வீட்டுக்கு போயிட்டாங்கன்னேன். பேபினு கேட்டான். அவளும்தான்னேன். சுமதி? அக்கா, சுந்தரி வீட்டுக்குப் போயிருக்கா. வந்துடுவான்னேன்.

சரி, இதோ வரேன்னு அண்ணா சொன்னான். நான் குதிச்சுண்டே சமையலறைக்குப்போய் தண்ணி குடிச்சுட்டு ஜன்னல் வழியா ஜாகீர் வீட்ட பார்த்துண்டு இருந்தேன்.

கீதா, கீதான்னு அண்ணா கூப்பிடறது கேட்டது. எனக்கு ஒரே சந்தோஷம் . அண்ணா என்னை அப்படி பெயர் சொல்லிக் கூப்பிடுறது எப்பவோதான். பேசவே மாட்டான். இதோ வரேன் அண்ணான்னு சொல்லி குதிச்சு ஓடினேன்.

ஆனால் அங்கே அண்ணா… அப்படி…எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல சாமி! எப்படி சொல்றது?

அண்ணா டிரஸ் ஒண்ணுமே போட்டுக்காம என்னைப் பார்த்து கோணலா சிரிச்சான். எனக்குப் பேச வாய் வரலை. பக்கத்துல வான்னு கூப்பிட்டான். நான் அப்படியே உறைஞ்சு போய்  நின்னுட்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னால பார்த்த அண்ணா இல்லை இவன். இவன் வேற. அப்பா மாதிரி சத்தியமா இல்லை. அன்னிக்கு படத்துல பார்த்த வில்லன் மாதிரி பார்க்க பயமா இருந்தான். எனக்கு ஒன் பாத்ரூம் போகணும்போல் இருந்தது. இன்னிக்குதான் முதல் முதலா பயம்னா என்னன்னு தெரிஞ்சது சாமி.

‘கீதா, ஹரி, கிளம்பியாச்சா’ன்னு சுமதியோட குரல் கேட்டதும் அண்ணா அவன் ரூம் கதவை மூடிட்டான். மூடறதுக்கு முன்னால என்னை கண்ணைச் சுருக்கிப் பார்த்து அடிக்குரல்ல ‘இதைப் பத்தி யார் கிட்டயாவது சொன்னே, நீ தீர்ந்த’ன்னு மிரட்டினான்.

அதுக்கப்பறம் நடந்தது எதுவும் எனக்கு ஞாபகமில்ல சாமி!

-தொடரும்

14 thoughts on “ஹெக்ஸகோன் – 2”

  1. Saravanan Sivanraja

    அன்புள்ள காயத்ரி அவர்களே,
    உங்கள் எழுத்தோடு சேர்ந்து எளிதாக பயணிக்க முடிகிறது. ஒரு நல்ல அத்தியாயம் பதட்டதோடு முடிந்திருக்கிறது. மேலும் வாசிக்க ஆவலோடு உள்ளேன்.
    இப்படிக்கு
    சரவணன் சிவன்ராஜா

  2. ஹெக்ஸகோனா?
    ஹெக்ஸகன் – பிரிட்டிஷ் இங்லிஷ்
    ஹெக்ஸகான் – அமெரிக்கன் இங்லிஷ்
    ஹெக்ஸகோன் – ?

    நன்றி!

  3. அருமையான நடை…இப்படி abuse செய்யப்படாத பத்து வயது குழந்தைகள் இருக்குமா என்றே சந்தேகமாக இருக்கிறது.

  4. சுதாகரன்

    எளிய நடை தான் எழுத்துக்கு தேவை. ஆனாலும் வாசிப்பில் ஒரு வசிகரம் மிஸ்…

  5. அன்புள்ள காயத்ரி,

    மிகவும் எளிய நடையில் எதார்த்தமான கதை வடிவம். மேலும் படிக்க ஆவல்.

  6. Gm mam, shocking.. how is it possible, own bro…pathic. as male, I always think, we male like see the glimse of exposure only.. in that age, this guy…is rare, showing off.. quite pathic for the little one. Super fast to read,. Then in my school days, my fav was then, “iron hand” n the mandrek the magician. N pantom. Thank you mam.

  7. இரும்புக்கை மாயாவியோட உறை பனி மர்மம் .. சிறுவயதில் இங்கிருந்துதான் பலருக்கும் வாசிப்பு தொடங்கி இருக்கும் இல்லையா .. பால்ய நினைவுகளைத் தூண்டிவிட்டது உங்கள் எழுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Gayathri R

Gayathri R