Close Menu
GayathirGayathir
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    GayathirGayathir
    • முகப்பு
    • என்னைப் பற்றி
    • சிறுகதைகள்
    • நேர்காணல்கள்
    • கட்டுரைகள்
    • மொழியாக்கங்கள்
    • நாவல்
    GayathirGayathir
    Home»நாவல்»ஹெக்ஸகோன் – 7
    நாவல்

    ஹெக்ஸகோன் – 7

    gayathri RamBy gayathri RamJuly 3, 2024Updated:March 29, 20251 Comment7 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    29  ஜூன் 2023, வியாழக்கிழமை

    துப்பாக்கிச் சத்தம் மனதை என்னவோ செய்தது. நியூஸில் காண்பித்த அந்த சிசிடிவி பதிவில் துப்பாக்கியை காரின் உள்ளே வைத்து பாயிண்ட் ப்ளாங்கில் சுடுகிறார் அந்தக் காவலர். கார் சிறிது தூரம் சென்று ஒரு கம்பத்தில் அடித்து நின்றது.

    ‘பஸ் வராது, பஸ்ஸை எல்லாம் எரிக்கிறார்கள்’ என்று ஒரு பெண்மணி நாங்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும்போது சாந்த்ராவிடம் சொன்னார். சிந்துஜா, லாவண்யா, நான் மூவரும் சாந்த்ராவுடன் மோன் மார்த்தர் போகலாம் என்று முடிவு செய்தோம். பக்கத்திலேயே பேருந்து நிறுத்தம் இருந்ததால் அங்கு நின்று கொண்டிருக்கும்போது இப்படி ஒரு செய்தி.

    நாங்கள் பாரிஸில் இறங்கியதற்கு முந்தைய நாள் நாஹேல் என்ற பதினேழு வயது அல்ஜீரிய வம்சாவளி சிறுவனை ஊரின் புறநகர் பகுதியான நான்தெர்ரில் (Nanterre) ஒரு காவலர் சுட்டுக் கொன்றிருந்தார். அந்தச் சிறுவனின் காரை நிறுத்தி பேப்பர்களைக் கேட்க, அவன் காவலர்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வண்டியைக் கிளப்பியிருக்கிறான். அதனால் அவனைச் சுட்டிருக்கிறார் காவலர்.

    புறநகர்ப் பகுதியிலெல்லாம் ஒரே கலவரம். பேருந்துகளைக் கொளுத்திக் கொண்டிருந்தார்கள். பிரான்ஸ் முழுக்கக் கலவரம் பரவி விட்டது. தொலைக்காட்சிப் பெட்டியில் அடிக்கடி நாஹேலின் அம்மாவைக் காண்பித்து எல்லோரையும் வெறியேற்றிக் கொண்டிருந்தார்கள். நல்ல சுபயோக சுபதினத்தில் வந்திறங்கியிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். சில இடங்களில் போலீசாரைத் தாக்கினார்கள்.

    நாஹேலைச் சுட்ட காவலரை கைது செய்து விட்டார்கள். அவருக்கு ஆதரவாக ஒரு மந்திரி குரல் கொடுத்து பல மில்லியன் டாலர்களை அந்தக் காவலரின் குடும்பத்துக்காக சேகரித்தார். பிரான்ஸே இரண்டுபட்டு நின்றது.

    சாந்த்ராவுக்குக் கோபம் பொங்கியது.  ‘இந்த நாடு எங்குதான் போய்க்கொண்டிருக்கிறது?’ என்று முகம் சுளித்தார்.

    நம்மூர்க்காரர் ஒருவர் ‘இந்த வெள்ளைக்காரன்களை இப்படித்தான் அடிக்கடி கலவரம் செய்து பதட்ட நிலையிலேயே வச்சிருக்கணும். இல்லைன்னா நம்மையெல்லாம் ஊரக் காலி பண்ணச் சொல்லிருவான்’ என்றார். இவரென்ன மாற்றிச் சொல்கிறார்? எனக்கு இந்த தாரதம்யங்கள் எல்லாம் புரிவதேயில்லை. புரியவும் வேண்டாம்.

    ‘சரி! வாருங்கள் மோன்மார்த்தருக்கு (Montmartre) நடந்தே போய் விடலாம். அதோ தெரிகிறதே கதீட்ரலின் கோபுரம்’என்றார்.

    சாந்த்ராவின் வீடு ஒன்பதாவது அரோந்தீஸ்மோவில் (arrondissement) இருந்தது. Ile-de-Paris என்று சொல்லக் கூடிய பாரிஸ் நகரம் இருபது அரோந்தீஸ்மோக்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பாரிஸின் நடுவில் ஓடும் லா ஸென் (La Seine)நதியின் வலதுபுறத்தில் இருக்கும் அரோந்தீஸ்மோக்கள்தான் இடது பக்கத்தைவிட பிரபலமான பகுதி. ஏழாவதில் ஈஃபில் (Eiffel) டவர் இருக்கிறது.  இந்தப் பகுதிதான் பாரிஸின் ஆடம்பரமான பகுதி. சாதாரண மக்கள் வசிக்க இயலாது. அரசியல்வாதிகளும், பெரும் பணக்காரர்களும் வசிக்கும் இடம். லூவ்ர் அருங்காட்சியகம் முதலாம் அரோந்தீஸ்மோ. மோன்மார்த்தர் பதினெட்டாவதில் இருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மேயர் உண்டு. ஒன்று,இரண்டு, மூன்று மற்றும் நான்காம் அரோந்தீஸ்மோக்களை பார்த்துக்கொள்வது மட்டும் ஒரே ஒரு மேயர்.

    நடக்கலாம், பக்கம்தான் என்று சாந்த்ரா சொன்னதும் ஏதோ மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து லஸ் கார்னர் வரை தூரம்தான் இருக்குமென்று நினைத்தோம். ஆனால் அது மூன்றரை கிலோமீட்டர் என்று தெரிந்திருந்தால் வேறு இடம் போகலாம் சாந்த்ரா என்று சொல்லியிருப்போம்.

    பாரிஸ் மக்கள் வேகவேகமாக நடந்துகொண்டே இருக்கிறார்கள். பஸ் நிறுத்தத்தில் பஸ் எத்தனை நிமிடத்தில் வரும் என்று ஒரு பேனல் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதில்  பத்து நிமிடத்துக்கு மேல் காட்டினால் சாந்த்ரா நடக்க ஆரம்பித்து விடுவார். அவர் மட்டுமல்ல. எல்லோருமே அப்படித்தான். சினிமாவில் காண்பிப்பதுபோல் பாரிஸில் ஹை ஹீல்ஸ் எல்லாம் போட்டுக்கொண்டு நடக்கவே முடியாது. மேலும் கீழுமாக இருக்கும் சாலைகள், கற்கள் பதித்த சாலைகள் பிரசித்தம். இப்போதெல்லாம் அந்த பெருமைமிகு கற்கள் பதித்த சாலைகளில் இருக்கும் கற்களை எடுத்துவிட்டு நல்ல சாலையே போடுகிறார்கள் என்றார் சாந்த்ரா. ஏதாவது ஸ்டிரைக் என்றால் அந்தக் கற்களை நோண்டி எடுத்து போலீஸார் மேலும் பேருந்துகளின் மேலும் வீசுகிறார்கள் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

    ஒரு வழியாக மூன்று கிலோமீட்டர் மூச்சு வாங்கிக்கொண்டு நடந்தாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்ததால் சிரமம் தெரியவில்லை. வானிலையும் ஒத்துழைத்தது. அது கோடைக் காலம் என்று அவர்கள் சொன்னாலும் சென்னைவாசிகளாகிய எங்களுக்கு அந்த 21 டிகிரி வானிலை ஊட்டியைபோல் இருந்தது. ஆனால் பாரிஸ் வானிலை இன்று இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. திடீரென்று வெயிலடிக்கும், அல்லது மழை பெய்யும். மாலையானால் குளிரும். அதனால் அடுக்கடுக்காக உடுத்திக்கொண்டு செல்கிறார்கள். தேவையானால் கோட்டைப் போட்டுக் கொள்ளலாம் அல்லது கழற்றி விடலாம்.

    மோசமாக உடை உடுத்தியவரை என்னால் பார்க்கவே முடியவில்லை. அந்தந்த இடத்துக்குத் தகுந்தாற்போல் உடுத்துகிறார்கள். முக்கியமாக இன்னொரு விஷயம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பெரிய கழுத்து உள்ள உடைகளை பெண்கள் அவ்வளவாக அணிந்து நான் பார்க்கவில்லை. அவர்கள் உடலுக்குத் தகுந்தாற்போல் அட்டகாசமாக ஆடை அணிகிறார்கள். மிகவும் குட்டியான ஷார்ட்ஸோ, அல்லது மினி ஸ்கர்ட்டோ அதிகம் காணப்படவேயில்லை. அப்படி யாராவது அணிந்திருந்தால் அவர்கள் சுற்றுலாப் பயணிகள். மிகவும் பாந்தமாக அழகாக உடலுக்குத் தகுந்தாற்போல் உடையணிவதில் வித்தகர்கள் பாரிஸ்காரர்கள். நான் காலையில் உடை உடுத்தி, அலங்காரம் செய்துகொண்டு கூடத்துக்கு வந்தால் சாந்த்ரா தலையிலிருந்து பாதம்வரை பார்ப்பார். அவர் முகமே சொல்லிவிடும் நாம் சரியாக உடுத்திக்கொண்டிருக்கிறோமா இல்லையா என்று.

    ஒருநாள் அவருடைய ஒட்டக நிற கைப்பையைக் கொண்டு வந்து ‘இந்த டாப்ஸோடு இது ஒத்துப் போகிறதா’ என்று கேட்டார்.’ நான் சந்தேகமாக தலையை ஆட்டியதும், உள்ளே போய் மாற்றிக்கொண்டு வந்தார்.

    நான் ஒருநாள் ‘இந்த ஸ்கர்ட் போட்டுக் கொள்ளலாமா?’ என்று கேட்டேன். ‘அதற்கான கால்கள் உனக்கு இருந்தால் போட்டுக்கொள்ளலாம்’ என்றார்.

    அவர்கள் உயரமெல்லாம் நம்மைப் போல்தான் என்றாலும் உடல் பெருத்த மனிதர்களை பெரிதாகப் பார்க்க முடிவதில்லை. இப்படி வேகுவேகுவென்று தினமும் மைல் கணக்கில் நடந்தால் எங்கிருந்து உடம்பு வரும்?

    மோன்மார்த்தர் போகும் வழியில் ஜான் ரெனுவார் (Jean Renoir) வீட்டைத் தாண்டிச் சென்றோம். அந்த வீட்டின் வெளியே ஒரு பலகையில் ‘இங்கு ஜான் ரெனுவார், திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், 1937 – 1969 வரை வசித்தார்’ என்று எழுதியிருந்தது. ஒரே சந்தோஷமாகி விட்டது எனக்கு. அடுத்த தெருவில்தான் ஃப்ரான்ஸுவா த்ரூஃபோ (François Truffaut) வசித்தார். அங்கு நாளை கொண்டு போய் காட்டுகிறேன் என்றார் சாந்த்ரா என் முகத்தைப் பார்த்து. ஃப்ரான்ஸுவா த்ரூஃபோவின் Quatre cents coups (400 blows) நாம் இருக்கும் தெருவில்தான் எடுத்தார் என்று சாந்த்ரா சொன்னவுடன் எனக்கு எப்படி என் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.

    என் உற்சாகத்தைப் பார்த்து ஜான் ரெனுவார் வீட்டின் வழியே என்னைக் கூட்டிச் சென்று விடவேண்டும் என்று சாந்த்ரா நினைத்தார். ஆனால் அந்த ரோடு தனியார் ரோடு என்பதால் அங்கிருந்த காவல்காரி எங்களை அனுமதிக்கவில்லை. அந்த சாலையிலிருந்து வெளியே வந்து ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் பின்னால் ஓடி விடலாம் என்று சாந்த்ரா நினைத்தாலும் அந்தக் கண்கொத்திப் பாம்பு காவல்காரி ‘சாரி! உள்ளே விட முடியாது’ என்று சொல்லி விட்டார். சாந்த்ராவுக்கு வருத்தம்.

    ‘பழைய வாட்ச்மேனாக இருந்தால் விட்டிருப்பான்’ என்று சுணங்கினார்.

    நாங்கள் படித்தபோது எங்கள் புத்தகத்தில் கோதிக் பாணியில் மோன்மார்த்தர் படங்கள் இருக்கும். அப்படித்தான் இருக்கப் போகிறது என்று நினைத்த எனக்கு ஏமாற்றம். கனவுலகத்திலேயே வாழும் எனக்கு இத்தனை வருடத்தில் அவற்றையெல்லாம் சரி செய்திருப்பார்கள் என்று என் மூளையில் உறைக்காதது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் வழியில் Le Bateau Lavoir ஐப் பார்த்தவுடன் மறுபடி சந்தோஷம் ஊற்றெடுத்தது. அந்த இடத்தில்தான் இருபதாம் நூற்றாண்டின் பெரிய அறிஞர்களும், எழுத்தாளர்களும், ஓவிய மேதைகளும் தங்கியிருந்தார்கள். ஒரு காலத்தில் அந்த அழுக்கு வீட்டின் அறைகளில் தங்கியிருந்துதான் உலக சாதனை படைத்தார்கள் பல  மேதைகள். அன்று இந்த மோன்மார்த்தர் முழுவதும் இவர்கள் ஆட்சி தான்.

    அப்போலினர்(Apollinaire), ஹென்ரி மதிஸ்(Henri Matisse), பிக்காஸோ (Picasso)(இங்கிருக்கும்போது தான் அவர் Young girl with a flower Basket, Les Demoiselles d’Avignon போன்ற படங்களை வரைந்தாராம்), வான் கோக் (Van Gogh)(வான் கோ என்று அவர்கள் உச்சரிப்பதில்லை) ஜார்ஜ் ப்ராக் (Georges Braque), மார்க் ஷகால்(Marc Chagall)மற்றும் பலர் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். அந்த வாசலில் கீழே விழுந்து கும்பிட வேண்டும் என்று தோன்றினாலும் ‘ரொம்ப டிராமா போடாம வா’ என்று என்னுள் இருக்கும் பெனாத்தா என்னை அமுக்கினாள்.

    ஒரு இடத்தில் சாலையின் ஓரத்தில் வான் கோக்கின் படத்தை வைத்து எழுதியிருந்ததன் சுருக்கம்:

     

    இவர் 1886 இல் பாரிஸுக்கு வந்தபோது  பல நூறு ஓவியர்களில் ஒருவர். பிரெஞ்சு தலைநகர் அப்போது கலைஞர்களால் நிரம்பி வழிந்தது. அவர்கள் செல்வத்தையும் புகழையும் தேடுவதற்காக வெகு தொலைவில் இருந்து வந்தனர். வின்சென்ட், தனது சகோதரர் தியோவுடன் இங்கு வசித்து வந்தார்.

    வின்சென்ட் வான் கோக் பாரிஸ் நகர கவர்ச்சியின் அதீதத்தில் மயங்கிக் கிடந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 1888இல், அவர் உடல் மற்றும் ஆன்மா இரண்டையும் அதிக அழுத்தத்திற்கு தான் உட்படுத்துவதை உணர்ந்தார்.

    பின்னர் மோன்மார்த்தர் வந்து மற்ற ஓவியர்களுடன் பழகத் தொடங்கிய பிறகு, அடர்த்தியான வண்ணங்களில் வரைவதை விட்டுவிட்டு இம்ப்ரெஷனிஸ்ட் முறையை பரிசோதிக்கத் தொடங்கினார். ஓவியங்களைப் பற்றி விவாதிக்கக் கூடிய நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு விவாதித்தார்.

    வான் கோக் மறக்க முடியாத கலைப் படைப்புகளை உருவாக்கினார். இந்த மோன்மார்த்தர் காலகட்டத்தை அவரது கலை வளர்ச்சியில் ஒரு முக்கியமான ஆயத்த கட்டமாகக் காணலாம். பின்னாளில் பிரபலமடையப்போகும் ப்ரோவென்ஸ்(Provence) காட்சிகளை அவர் வரைவதற்கு இங்கு அவர் மேற்கொண்டது ஒரு பயிற்சி ஆய்வு.

     

    ‘போதும் படித்தது. சீக்கிரம் வா, இன்னும் நிறைய இருக்கிறது’ என்ற குரல் கேட்டவுடன் அதை போட்டோ எடுத்துக்கொண்டு ஓடினேன்.

    பின்னர் நந்தனுடன் ஒரு நாள் வான் கோக்கின் அமைதியான அந்த எழில் கொஞ்சும் கிராமத்துக்குப் போனேன். அந்த ஊர் இடுகாட்டின் ஒரு மூலையில் இருந்தது வான் கோக்கின் கல்லறை. பக்கத்தில் அவனுடைய சகோதரன் தியோவினுடைய கல்லறை. இருவரின் கல்லறை மேலும் அலங்காரமாக செடியை வளரவிட்டிருந்தார்கள். மோன்மார்த்தரிலிருந்த கூட்டம் இங்கில்லை. ஏன், யாருமே இல்லை. நானும், நந்தனும், அந்தக் கல்லறையைப்பராமரிப்பவரும் மட்டுமே இருந்தோம். அவருடைய கல்லறைக்கு பின்னால் சாலையில் இருந்த மரத்தில் ஹிரோன்தெல் பறவைகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன.

    ‘ ஹிரோந்தெல் பறவைகள்’ என்றார் நந்தன்.

    ‘ஹும். பிரெஞ்சில் ஒரு பழமொழி உண்டு. Une hirondelle ne fait pas le printemps !’

    ‘அப்படியென்றால் ?’

    ‘ஒரு ஹிரோந்தெல் பறவை வசந்தத்தின் அறிகுறியல்ல என்பது நேரடி மொழிபெயர்ப்பு. அதாவது வெளித்தோற்றங்களை நம்பக்கூடாது என்றும் ஒரு தனிப்பட்ட உண்மையிலிருந்து பொதுவான முடிவுகளை எடுப்பது நியாயமல்ல என்றும் சொல்கிறது.’

    ‘ஓ! வான்கோக்கிற்கு இது பொருந்துமோ ?’

    ‘இருக்கலாம்.’

    ‘ஏன் க்ளாத் மோனேவின் வீட்டைப் பார்க்க வரும் கூட்டத்தைப் போல் இங்கு யாரும் வருவதில்லை?’ என்று நந்தன் கேட்டபோது என்னிடம் பதில் இல்லை.

    வான் கோக் வாழ்ந்த 37 வருடங்களில் 38 இடங்களில் இருந்திருக்கிறார். அவர் தன் வாழ்நாளின் கடைசி 70 நாட்களைக் கழித்த Auberge Ravoux என்ற விடுதியைப் பார்க்கும்போது கண்டிப்பாக மனம் பிசையும். அந்த விடுதியின் ஐந்தாம் நம்பர் அறையில் அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அந்த அறையை அதற்குப்பின் யாருக்கும் தராமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். வான் கோக் தன் படங்களை மாட்டுவதற்காக அடித்த ஆணிகள் கூட அப்படியே இருக்கிறதாம். நான் சென்ற அன்று அந்த விடுதி மூடியிருந்தது. அடுத்த நாள்தான் திறப்பார்கள் என்று சொல்லி விட்டார்கள். ஏமாற்றமாக இருந்தது.

    இந்தப் பயணத்தில் பல இடங்களை பார்க்கத் தவறினேன். ஒன்று சரியான நாளில் சென்றிருக்க மாட்டேன். அல்லது சரியான நேரத்தில் போயிருக்க மாட்டேன்.

    ‘இந்த 75 அடி அறையில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் உணர்வதற்கு நிறைய இருக்கிறது’ என்று எழுதி வைத்திருந்தார்கள்.  இந்த அறை 1985 முதல் வரலாற்று நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    மோனேவைப் போல் வின்சென்ட் வான் கோக், தான் வாழ்ந்த காலத்தில் புகழடையவேயில்லை. ஏழ்மையில் வாடினார்.  கடைசியாக தன் சகோதரன் தியோவுக்கு எழுதிய கடிதத்தில் அங்கேயிருக்கும் கஃபேயில் என்னுடைய படங்களைக் காட்சிப்படுத்தலாம் என்றிருக்கிறேன் என்று எழுதியிருக்கிறார். அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து அரசு அவர் ஆசையைப் பூர்த்தி செய்தது.

    ‘இந்த வழியாக எத்தனை முறை சென்றிருப்பாய், இந்தக் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றிருப்பாய், இதோ தெரியும் இந்த வெட்டவெளியை வரைந்திருப்பாய், இல்லையா? லட்சக்கணக்கான மக்கள் இந்த வாசல் வழியாக வந்து உன் வெற்று அறையைப் பார்ப்பார்கள் என்று கிஞ்சிற்றும் நினைத்திருக்க மாட்டாய். நீ கால் பதித்த இந்தச் சாலைகள் முழுக்க Vincent, Vincent, Vincent என்று பெயர் பொறித்த தங்கக் குமிழ்களைப் பதிப்பார்கள் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டாய்.’

    ‘க்ளாத் மோனே உயிருடன் இருந்த காலத்திலேயே புகழுடன் ஆர்ப்பரித்து வாழ்ந்ததுபோல் இன்று அவர் இடம் மக்களால் ஆர்ப்பரிக்கிறது. உன் மணற்கடிகையின் கடைசித் துகள்களை இங்கு செலவழித்தாய். உனக்கு அங்கீகாரம் அளிக்காமல் கொன்று விட்டோமே என்ற அவமானத்தால் இந்தக் கிராமமே மயான அமைதியை அப்பிக்கொண்டிருக்கிறது. என்ன செய்ய! இருக்கும்போது வைதுகொண்டு இகழ்ந்துகொண்டு பாராமுகமாக இருந்து, இல்லாதபோது மாரில் அடித்துக்கொள்வதுதானே மானுட வழமை’ என்று என்னென்னவோ நினைத்தபடிநடந்துகொண்டிருந்தேன்.

    கிராமத்தின் சாலையில் ஆங்காங்கே Vincent என்று எழுதியிருந்த தங்கநிற குமிழ்களைத் தடவிப் பார்த்தேன்.

    நின்று, மூடியிருந்த அந்த ஐந்தாம் நம்பர் அறையைத் திரும்பிப் பார்த்தேன். துப்பாக்கிச் சத்தம் கேட்டது.

    நல்லவேளை! அந்த விடுதி மூடியிருந்தது. இல்லையென்றால் நான் வெடித்துச் சிதறியிருப்பேன்!

    • அடுத்த அத்தியாயம் அடுத்த புதன்கிழமை

    #novel Gayathri R. tamilwriting காயத்ரி ஆர். காயத்ரி ஸீரோ டிகிரி தமிழ்நாவல் நாவல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    gayathri Ram

    Related Posts

    ஹெக்ஸகோன் – 11

    October 2, 2024

    ஹெக்ஸகோன் – 10

    October 2, 2024

    ஹெக்ஸகோன் – 9

    September 18, 2024

    ஹெக்ஸகோன் – 8

    July 18, 2024
    View 1 Comment

    1 Comment

    1. Yuvarajan on July 8, 2024 6:16 pm

      Good day mam, this chapter is golden leaf for, yes wish u wrote this with gold ink. Inthis seris, this part is Enough for me. Already I read three times… thnk u mam.

      Reply
    Leave A Reply Cancel Reply

    Archives
    Facebook X (Twitter) Instagram YouTube
    © 2025 Gayathir. Designed by Technobytee.

    Type above and press Enter to search. Press Esc to cancel.