18 ஜூலை 1986
கோனேஸ்வரி, அவ அம்மா, அப்பா எல்லாரையும் விட்டுட்டு இங்க வந்திருக்கா. அவளோட அண்ணன் போர்ல செத்துப் போனதுக்கு அப்பறம் அவங்க அம்மாவும் அப்பாவும் பயந்துகிட்டு அவளை மட்டும் இங்க அனுப்பிட்டாங்க. அவளோட சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தவங்க வீட்டுக்கு. அவங்க இவளை ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க. பாவம்! அம்மா அப்பாவை அடிக்கடி கூப்பிட முடியாது. சில சமயத்துல அவளோட கண்ணு ரெட்டா இருக்கும். அவ அழுதிருக்கான்னு தெரியும். ஆனால் நான் பேசாம அவகிட்ட போய் உட்கார்ந்துப்பேன். அவ அனுமதிச்சா அவ கையைப் பிடிச்சுகிட்டு உட்கார்ந்திருப்பேன். அந்த நொடில எனக்கான ஆதுரத்தையும் தேடிப்பேன். பல சமயம் வார்த்தைகளே வேஸ்டுன்னு தோணும். நம் கஷ்டத்தைப் புரிஞ்சுண்டு அமைதியா நம்மோட மணிக்கணக்கா உட்கார ஒருத்தர் இருந்தாலே போதும். சிட்னி கார்ட்டன் மாதிரி. லூசி மானெட் மாதிரி. ஹெர்க்யூல் பய்ரோ மாதிரி. மிஸ் மேபில் மாதிரி. அவங்களோட மணிக்கணக்கா என்னால உட்கார முடியும். எனக்கு எப்பவும் துக்கமோ பயமோ கஷ்டமோ கொடுத்ததில்லை அவங்க.
அடுத்த மாதம் என்ன செய்யப் போறேன்? எப்படி ஹரியை சமாளிக்கப் போறேன்னு நினைச்சேன். எனக்குப் பதட்டம் ஜாஸ்தியாச்சு. என்னாச்சு உனக்குன்னு கோனா கேட்டா. இப்பல்லாம் இரண்டு பேரும் பேசாமலேயே இன்னொருத்தர் சரியான மனநிலையில இல்லன்னு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டோம். பேசாம இல்ல. பேசுவோம். ஆனா கஷ்டங்களைப் பேசறதில்ல. அவள் வாழ்க்கைல என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியாது. அதே போல அவளுக்கும் என் வாழ்க்கை இப்ப வரை தெரியாது குடும்பத்துல யார் யார் இருக்காங்கறத தவிர.
‘என்னாச்சு, சொல்லணும்னா சொல்லு’ ன்னு சொன்னா.
அவ்வளவுதான்! நான் அழுதுகிட்டே எல்லாக் கதையையும் சொன்னேன். அவளோட கண்ணு டார்ச் லைட் மாதிரி பெருசா ஆயிடுச்சு. ‘என்ன சொல்ற? சொந்த அண்ணனா?’
‘ஆமா! அவன் சொந்த அண்ணனான்னே சந்தேகமாயிருக்கு.’
அவளுக்கு இன்னும் நம்ப முடியலை. கொஞ்ச நேரம் தரையைப் பார்த்துண்டிருந்தா. அப்புறம் மெல்லப் பேசினா.
‘செத்துப் போன என் அண்ணன் எப்பேற்பட்டவன் தெரியுமா? என் மேல் ஒரு துரும்புகூட விழாம பார்த்துப்பான். பதினொன்றாம் வகுப்பு படிச்சுகிட்டிருந்தான். எல்லாம் நல்லாதான் போய்கிட்டு இருந்தது. நானும் அண்ணாவும் ஸ்கூலில் படியேறி க்ளாஸுக்குப் போகும்போது, எங்களுக்கு மேலே படியேறிக்கொண்டிருந்த சிங்களப் பையன்கள் ‘தமிழ் நாய்களா’ன்னு சிங்களத்துல சொல்லி எங்கள் மீது எச்சில் துப்புனாங்க. அதைப் பார்த்த டீச்சர்களும் ஒண்ணும் சொல்லலை. அண்ணனுக்கு கோபம். தான் ஒண்ணும் செய்ய முடியலையேன்னு தவிப்பு. அதைவிட தனக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் பார்த்துக்கொண்டு நிண்டாங்களேன்னு பதற்றம். ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.’
‘மூன்று வருடம் முன்பு இதே ஜூலை மாதம், இதே கருப்பு ஜூலை மாதம் 24ஆம் திகதி கடைக்குப் போய்விட்டு திரும்பிக்கொண்டிருந்த அவனை சிங்களக் காடையர்கள் தெருவில் அடித்துக் கொன்றார்கள். ஒரு போலீஸ் அதிகாரி ‘இவன் புலி’ என்று சொல்லி டயர்களை அவன் மீது போட்டுக் கொளுத்தினான். எரியாத அவனுடைய ஒரு காலை அடுத்த நாள் குப்பை லாரி அள்ளிக்கொண்டு போனதாக பார்த்த ஒருவர் சொன்னார். என் பெற்றோர் என்னையும் இழக்கக் கூடாதென்று சிரமப்பட்டு இங்கு அனுப்பி விட்டாங்க.’
கோனாவின் சிவந்த கண்ணீர் நிறைந்த கண்களைப் பார்த்து எனக்கு கோவமும் அழுகையும் வந்தது. ‘என்ன கோனா, இந்த உலகத்திலிருக்கற எந்த நாடும் எதுவுமே செய்ய முடியாதா? உங்களுக்கு மட்டும் ஏனிந்த கஷ்டம்?’
‘பார்க்கலாம். யாராவது எங்களுக்கு உதவுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்’ என்றாள்.
கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் அமைதியா இருந்தோம். அவளுடைய கஷ்டத்துக்கு முன்னாடி என்னோடது ஒண்ணுமே இல்லன்னு ஆகிடுச்சு.
மெல்ல கோனா பேசினாள்.
‘சரி! உன் விஷயத்துக்கு வரலாம். அடுத்த முறை அவன் உன்கிட்ட வந்தா என்ன பண்ணுவ?’
‘தெரியல கோனா. பயமா இருக்கு. வீட்டுலயும் சொல்ல முடியாது. ஒருத்தரும் நம்ப மாட்டாங்க.’
‘அட சீ! பயமாவது மண்ணாங்கட்டியாவது. வீட்டுல எல்லாம் சொல்ல வேணாம். நீயே ஹாண்டில் பண்ணு. அடுத்த முறை அவன் வரும்போது இதைப் பண்ணு’ என்று கோனா சொல்லச் சொல்ல எனக்கு தைரியம் வந்தது.
***
18 ஜூலை 1989, ஞாயிற்றுக்கிழமை
இன்று பதினாறாவது பிறந்தநாள். இந்த மூன்று வருடங்களில் என்னென்னவோ நிகழ்ந்து விட்டது. காலம் உருண்டோடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நான் மட்டும் ஒரே இடத்தில் நின்றுவிட்டேன். ஆனாலும் ஆறு இழுத்துச் செல்லும் கூழாங்கல்லைப் போல காலம் தன்னோடு மனிதனை இழுத்துக்கொண்டு தானே போகிறது.
ஒரு வருடத்துக்குமுன், நான் எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போது முழுப் பரிட்சை நேரத்தில் ஒரு நாள் சுமதியைக் காணவில்லை. சுந்தரியக்கா வீட்டில் நேரம் காலம் தெரியாது உட்கார்ந்திருப்பாள் என்பதால் சற்று அசட்டையாக இருந்து விட்டார்கள் எங்கள் பெற்றோர். நாலு தப்படி வைத்தால் சுந்தரியக்கா வீடு. இங்கிருந்து ஒரு கூப்பாடு போட்டாலே அவர்கள் வீட்டுக்குக் கேட்கும். சுந்தரியக்காவின் அம்மாவும் சுமதியை தன் பிள்ளையைப்போல் பார்த்துக் கொள்வதால் அதிகம் என் பெற்றோர் கவலைப்படுவதில்லை.
எனக்குத் தேதி இன்னும் நன்றாக நினைவிலிருக்கிறது. அன்று மார்ச் மாதம் 8ம் நாள், 1988. அன்று ஞாயிற்றுக்கிழமை. பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தேன். திடீரென வீட்டில் ஒரு அமைதியின்மை. அறையை விட்டு வெளியில் வந்து பார்த்தால் எல்லோரும் பரபரப்பாக கவலை தோய்ந்த முகத்தோடு இருந்தனர். அம்மாவை ஏறிட்டுப் பார்த்தபோது சுமதியைக் காணோம் என்று கூறினார்.
‘சுந்தரி வீட்டுக்கு அவ போகவேயில்லையாம். கார்த்தால காபி குடிச்சுட்டு சுந்தரி வீட்டுலருந்து குமுதம் வாங்கிண்டு வரேன்னு போனா. சாப்பிடக் கூப்பிடலாம்னு போனப்போதான் தெரிஞ்சது’ என்று அம்மா கவலையானாள்.
‘மாமா வீட்டுல? ‘
‘அங்கயும் இல்லை. தெரிஞ்சவங்க எல்லார் வீட்டுலயும் பார்த்தாச்சு.’
எங்கள் தெருவிலிருந்து செய்தி பரவி காலனியின் பதினான்கு தெருவும் அக்காவைத் தேட ஆரம்பித்தது.
முதன் முதலாக சிவந்த விழிகளுடன் இருந்த என் தந்தையைப் பார்த்தேன். நாங்கள் நடுத்தர வர்க்கம்தான் என்றாலும் அப்பா எங்களுக்கு எதிலும் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டார். பெரிதாக வசதிகள் செய்து தர முடியாவிட்டாலும் மூன்று வேளை சாப்பாடும் துணிமணியும் கிடைத்து விடும். வேறென்ன வேண்டும்? ஏழு பேர் கொண்ட குடும்பம் என் அப்பாவின் சம்பளத்தில் மட்டுமே நடந்துகொண்டிருந்தது. என் அம்மாவும் பாட்டியும் சிட்டையாக பணத்தை நிர்வகித்தார்கள். சுமதியின் திருமணம் ஏற்பாடானால் தாராபுரத்திலிருக்கும் தாத்தாவின் ஒரு ஏக்கர் நிலத்தை விற்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். மற்ற இரண்டு பெண்களின் திருமணத்துக்கு முன் ஹரி தலையெடுத்து விடுவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.
‘நாங்க சத்தியமங்கல ப்ருஹசரணம். நம்மாளுங்களுக்குள்ளயே பாருங்கோ. வடமா வேண்டாம். அதுவும் தஞ்சாவூர்,பாலக்காடு பிராமணாளே வேண்டாம். அந்த வாயும் கையும் நமக்கு சரிப்பட்டு வராது’ என்று ஜாதகப் பரிவர்த்தனை செய்யும் கமலா மாமியிடம் பாட்டி கையை ஆட்டி ஆட்டிப் பேசினாள்.
‘ஏன் மாமி? ஒரு நல்ல தஞ்சாவூர் வடமப் பையன் இருக்கானே’ என்றாள் மாமி.
‘யப்பா, வேணாம்மா. ஒரு தடவை எங்காத்துக்காரர் பவானி ஆறுல பரிசல்ல போயிண்டிருந்தார். கூட கே.பி. சுந்தராம்பாள் வந்திருந்திருக்கா. என்ன சார், நீங்க வடமாளா, வாத்திமாளான்னு கேக்க, இவர் ப்ருஹசரணம்னு சொல்லிருக்கார். ப்ருஹசரணமா? அது ‘பெப்பே’ ஆச்சே முகவாய்க்கட்டைல கை வச்சுண்டு எங்காத்துக்காரரைப் பார்த்தாளாம். கொங்கு மண்டல பிராமணா நாங்க. ஒழுங்கா பிராமண பாஷை கூட பேச வராது. தஞ்சாவூர்,பாலக்காட்டுக்காராளைப் பொருத்தவரை நாங்க அவா செட்டுலயே சேர்த்தியில்லை. அந்த வடம ஜம்பத்துக்கு முன்னாடி ஒப்ப நிக்க முடியாதும்மா. நாங்க பெப்பேதான். அதுக்கு இன்னொரு பெப்பேதான் சரிப்பட்டு வரும்’என்றாள்.
மாலை நான்கு மணியாயிற்று. தேடித் தேடி அனைவரும் ஓய்ந்து விட்டனர்.
‘போலீஸுக்கு போயிடலாமா?’ என்று பக்கத்துக்கு வீட்டு ஜாகீர் அப்பா கேட்டார்.
‘இல்லீங்க மொஹமத், வெயிட் பண்ணுவோம். இன்னும் சிலரோட வீட்டுல பார்த்துடுவோம்’ என்றார் அப்பா.
திருப்பூரில் என் அம்மாவின் தங்கை இருந்தார். அவர் வீட்டுக்குப் போயிருப்பாளோ என்று ஒருவரை அனுப்பியிருந்தார் அப்பா. அனுப்பிய ஆள் சுமதி அங்கே இல்லை என்பதை ஜெயந்தியின் வீட்டுக்கு போன் பண்ணி சொன்னார். பாட்டி லலிதா சஹஸ்ரநாமம் ஜபிக்க ஆரம்பித்திருந்தாள்.
‘…மராளி மந்த கமனா மஹாலாவண்ய சேவதி:….’
அம்பாளுடைய நடையழகை வர்ணிக்கும் இந்த வாக்கியம்… மந்த கமனா- மெல்ல ஒயிலான நடை. அப்படித்தான் நடப்பாள் சுமதி. வேகம் பேச்சில் மட்டுமே இருக்கும். மற்றதெல்லாம் கனவு கண்டுகொண்டே மெல்லத்தான் செய்வாள். எங்கே போயிருப்பாள்?
அப்பா நிலைகுலைந்து போய் காலனிக் கிணற்றை எட்டிப் பார்த்தார். ‘பின்னாடி தோட்டத்துல கூட ஒரு கிணறு இருக்கில்ல? அங்கயும் பார்த்துட்டு வந்துடறேன்’ என்று சொன்ன அப்பாவின் முகத்தை காணச் சகிக்கவில்லை. முகமெல்லாம் வெளிறி, பட்டனை மாற்றிப் போட்ட கசங்கிய சட்டையோடு, கண்ணீர் தளும்பிய கண்களோடு, கலைந்த தலையோடு , சட்டென்று ஒரு பத்து வயது அதிகமானதைப்போல் தோற்றமளித்தார்.
ஜாகீர் மெல்ல என்னிடம் வந்து கிசுகிசுத்தான். ‘கீதா, எனக்கொரு சந்தேகம்டி. அன்னிக்கு அனுஷம் தியேட்டர் பின்னாடி இருக்கற வயக்காட்டுல சுமதியக்காவையும் பாண்டியண்ணனையும் பார்த்தேன். சிரிச்சு பேசிகிட்டிருந்தாங்க. நான் யார்கிட்டயும் சொல்லல. ஒரு வேளை…’ என்று இழுத்தான்.
‘நீ வாய வச்சுகிட்டு சும்மா இருடா’ என்று ஜாகீரின் வாயை நான் மூடும் நேரம் ஹரி பேசினான்.
‘அப்பா, இருங்கோ. ஒண்ணும் தோட்டத்துக்குப் போக வேண்டாம். இன்னிக்கு முகூர்த்த நாள். அநேகமா யார் கூடயாவது ஓடிப்போயிருப்பா’ என்றான் உணர்ச்சியில்லாமல்.
அந்தக் கோணத்தில் யோசித்தே பார்த்திராத எல்லோரும் ஸ்தம்பித்தனர். அப்பா தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார். பாட்டி இன்னும் வேகமாக ஜபித்தார். காந்தித் தாத்தாவும் அம்மாவும் செய்வதறியாது நின்றிருந்தார்கள். ஜாகீர் அப்பாவும் குமாருடைய அப்பா ஜகதீசனும் என்ன செய்யலாம் என்று கவலையுடன் பேசிக்கொண்டிருந்தனர்.
‘ஒண்ணும் செய்ய வேண்டாம் மாமா. அவளே வருவா பாருங்கோ. நாளை வரை பார்க்கலாம்’ என்றான் ஹரி.
‘அப்படியெல்லாம் நம்பிகிட்டு உட்கார்ந்திருக்க முடியாது சாமி’ என்றார் மொஹமத் மாமா. ‘ஆமா, ஆமா’ என்று தலையாட்டினார் ஜகதீசன் மாமாவும். அப்பாவைக் கூட்டிக்கொண்டு இருவரும் காவல் நிலையத்துக்கு சென்றனர்.
காவல் நிலையத்திலும் அதேதான் சொல்லியிருக்கிறார்கள். யார்கூடயாவது ஓடிப் போயிருக்குமுங்க. இந்தக் காலத்துப் பசங்க சினிமா பார்த்து கெட்டழியுதுங்க என்று புலம்பி விட்டு, இருந்தாலும் தேடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்பாவை போலீஸ் ஸ்டேஷன் படியேற வைத்துவிட்டாளே இவள் என்று கோபம் வந்தது.
ஜாகீர் ‘சொல்றதுதான் பெட்டர்’ என்று கிசுகிசுத்தான். ஜாகீரின் அம்மா ரெஜினா அத்தை நாங்கள் திருட்டு முழி முழிப்பதை பார்த்துவிட்டாள்.
‘ஏய், என்ன நடக்குது? உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா உண்மையை சொல்லிடுங்க’ என்று எங்களைப் பார்த்து கண்களை உருட்டினாள். எல்லோரும் எங்களைப் பார்த்தார்கள். பூதக் கண்ணாடிக்கு அடியில் மாட்டிக்கொண்ட எறும்புகளாகத் தவித்தோம்.
‘அதுவந்து, ஜாகீரு சுமதியக்காவையும் பாண்டி அண்ணாவையும் அனுஷம் தியேட்டருக்குப் பின்னாடி பார்த்தானாம்’ என்று திக்கித் திணறி சொல்ல, ரெஜினா அத்தை வேகமாக வந்து ஜாகீரில் முதுகில் பட்டென்று போட்டாள்.
‘முன்னாடியே சொல்லித் தொலைக்கறதுக்கு என்னடா? இவ்வளவு நேரம் வீணாப் போச்சுல்ல. நீயும் நல்ல அமுக்குணிதான்’ என்று இருவரையும் திட்டினாள். ரெஜினா அத்தை திட்ட ஆரம்பித்தால் ஓய மாட்டாள். ஜாகீரின் தங்கை அமுலு சமத்தாக இருப்பாள். நானும் ஜாகீரும் சிறு வயதில் செய்யாத சேட்டைகள் இல்லை.
ஒருமுறை அவன் சமையலறையில் இருந்து ஒரு டஜன் முட்டைகளைக் கொண்டு வந்தான். எனக்கு வழவழப்பாக இருந்த அந்த முட்டைகளைப் பார்க்கவும் தொடவும் நன்றாக இருந்தது. அமுலு அப்போது எல்.கே.ஜி. படித்துக்கொண்டிருந்தாள். அவளை புழக்கடையில் உள்ள வேப்பமரத்தடியில் உட்கார வைத்து ஒவ்வொரு முட்டையாக அவள் தலையில் உடைத்தோம். ஜாகீர் ஒரு முட்டை நான் அடுத்த முட்டை என்று வரிசையாக உடைத்தோம். உடைத்து உடைத்து வேப்பமரத்தினடியில் போட்டோம். அதிலிருந்து வழியும் மஞ்சள் கருவையும் பிசின் போன்ற திரவத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லையென்றாலும் அந்த உடைக்கும் செயல் சந்தோஷத்தைக் கொடுத்தது. அமுலுக்கு பிடித்ததோ என்னவோ அசையாமல் உட்கார்ந்திருந்தது. அவ்வப்போது தலையை தேய்த்து விட்டுக் கொண்டது.
அந்த சுபகாரியத்தை செய்துகொண்டிருக்கும்போதே அத்தை வந்துவிட்டாள். ஓட முயற்சி செய்த எங்களைப் பிடித்து அமுலுவை தென்னம் மாரிலிருந்து ஒரு குச்சியை உருவிக்கொண்டு வரச் சொன்னாள். இரண்டு பேருக்கும் முட்டிக்குக் கீழ் அடி விழுந்தது.
‘அவந்தான் தறி கெட்டுத் திரியறான்னா, ஐயர் வீட்டுப் புள்ள முட்டையை எடுத்துகிட்டு ஆட்டமா ஆடற’ன்னு திட்டிக்கொண்டே அடித்தாள். என்னைவிட ஜாகீருக்குத்தான் நிறைய அடி. சத்தத்தைக் கேட்டு என் வீட்டு புழக்கடைக்கு வந்த அம்மா
‘கடங்காரிக்கு இன்னும் ரெண்டு கால்ல போடு ரெஜினா’ என்று எண்ணையை வார்த்தாள்.
எல்லா ஆட்டமும் என்னுடைய பத்தாவது வயதில் முடிவுக்கு வந்தது. இந்த பரபரப்பிலும் ரெஜினா அத்தையைப் பார்க்கும்போது அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. எவ்வளவு அருமையான நாட்கள்.
அதற்குள் பாண்டி அண்ணா வீட்டுக்கு ஆட்கள் ஓடியிருந்தார்கள். பாண்டி அண்ணாவின் வீடு பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் இருந்தது. அண்ணா எங்களுக்கு வழக்கமாக ஆட்டோ ஓட்டுவார். யாருக்காவது உடம்புக்கு முடியவில்லை என்றாலோ, கடைவீதிக்குப் போக வேண்டும் என்றாலோ அப்பா பாண்டி அண்ணாவின் ஆட்டோவைத்தான் அழைப்பது வழக்கம்.
பாண்டி அண்ணாவும் வீட்டிலில்லை என்று தெரிந்தவுடன் அவருடைய நண்பர்களை விசாரித்தார்கள். இருவரும் மாசாணியம்மன் கோயிலில் அன்று காலை திருமணம் செய்துகொண்டது தெரிந்தது. இரவு ஒன்பது மணி சுமாருக்கு சுமதியும் பாண்டி அண்ணாவும் (இனிமேல் அத்திம்பேர்) மாலையும் கழுத்துமாக வந்து நின்றனர். வீட்டில் என்னையும் பேபியையும் தவிர அனைவரும் உடைந்துபோய் விட்டனர். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை அவளைப் பார்த்து. அப்பாவைப் பார்க்கத்தான் சங்கடமாக இருந்தது.
கடைசியில் எங்களுக்கு பெப்பே காண்பித்து விட்டாள் சுமதியக்கா.
சினிமாவில் வருவதுபோல் அப்பாவின் காலில் விழுந்து அழுதாள் சுமதி. ஏனோ எனக்கு அவள் செய்வதெல்லாமே அவளுக்குப் பிடித்த நடிகையின் நடிப்பைப் போலவே இருக்கும். அழும்போது கூட அந்த நடிகை அழுவதுபோல இருந்தது. ‘வே’வென்று வாயைத் திறந்து அழாமல் நாசூக்காக நளினமாக அழுது மன்னிப்புக் கேட்டாள்.
அம்மா ஆத்திரத்தில் அடிக்க வந்தபோது காந்தித் தாத்தா (என் அம்மாவின் அப்பா) தடுத்து நிறுத்தி ‘மாப்பிள்ளை,நம்ம மனுஷாளுக்கு ஓடினது தெரியறதுக்கு முன்ன நீங்களே கல்யாணம் பண்ணி வெச்சுடுங்கோ’ என்றார்.
‘என்னப்பா சொல்றேள்?’ என்று தன் பர்சை எடுத்துப் பிரித்து அதிலிருந்து நான்கு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக் காண்பித்து ‘இவ்வளவுதான் இருக்கு என்கிட்ட. இந்த மாச மளிகை சாமானுக்கு அம்மாகிட்ட கொடுக்க வச்சிருக்கேன். எப்படிப்பா நானூறு ரூபால கல்யாணம் பண்றது?’ என்று மனதின் பெருவலியை முகத்தில் தேக்கிக்கொண்டு கேட்ட என் தந்தையின் முகத்தை என் கடைசி மூச்சுவரை மறக்க மாட்டேன்.
மாமாவும் இன்னும் சில உறவினர்களும் பண உதவி செய்ய, ஒரு வழியாக அடுத்த முஹூர்த்தத்தில் நெருக்கமான உறவினர்களை மட்டும் அழைத்து அவளுக்கு திருமணம் செய்து அனுப்பிவிட்டார் அப்பா. வீடே இழவு விழுந்த வீடுபோல் இருந்தது.
எதிர் வீட்டு மல்லிகா அத்தைக்கு கடும் கோபம். ‘எங்க வீட்டுப் புள்ள இப்படி ஒரு ஜாதிக்காரன கட்டிகிட்டு வந்திருந்தா, புள்ளயே வேணாம்னு ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டிருப்போம். ஐயருங்க உங்களுக்கு தைரியமில்ல. எல்லாத்துக்கும் பயம். அவனோட வீட்டப் பாத்திருக்கீங்களா? அவங்க அம்மா, இதோ, அடுத்த தெரு சுந்தர்ராஜன் டாக்டர் க்ளீனிக்க பெருக்கி தொடைக்குது. மொறவாசல் பண்ற குடும்பம். என்ன மாதிரி குடும்பத்துலருந்து எங்க போயிருக்குது பாரு. நாங்களா இருந்தா அவன் கையக் கால முறிச்சுப் போட்டுப் போடுவோம்’ என்று பொரிந்து தள்ளினார்.
‘அப்புறம் என்ன மல்லிகா பண்றது? எல்லாரோட வாழ்க்கையும் நாசமாகிடும். அவா அவாளுக்கு என்ன கர்மாவோ அது படிதான் வாழ்க்கை. நம்மால ஒண்ணும் செய்ய முடியாது. அவ சந்தோஷமா இருப்பா. இருக்கணும். அவ எல்லாம் தெரிஞ்சு தேடிண்ட வாழ்க்கைதான?’ என்றார் காந்தித் தாத்தா.
‘என்னவோ சொல்லுங்க. மனசுதா ஆறல’ என்று முணுமுணுத்தார் மல்லிகா அத்தை.
இது நடந்து ஆறே மாதத்தில் பாட்டி தவறி விட்டாள். காலையில் இரண்டு தோசை தின்று ஹார்லிக்ஸ் குடித்தவள் என் அம்மாவிடம் என்னவோ போலிருக்கிறது என்று சொல்லியிருக்கிறாள். என் அம்மா அவள் பக்கத்தில் உட்கார்ந்ததும் அவளின் கையை இறுகப் பிடித்துக்கொண்டு உயிரை விட்டாள். என்னையும் பேபியையும் மல்லிகா அத்தை மதிய நேரத்தில் பள்ளியிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார். என் அம்மா கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். மாமியாரானாலும் தன் அம்மாவைவிட அவளோடுதான் பல வருடம் இருந்திருக்கிறாள். அப்பா இறுகிய முகத்துடன் காரியம் செய்தார். எனக்கு ஏனோ அழுகையே வரவில்லை. எதுவும் தோன்றவில்லை. சுமதி மட்டும் வந்து அரைமணிக்கூறு இருந்தாள். அவள் கழுத்தில் வெறும் மஞ்சக்கயிறு மட்டுமே இருந்ததைப் பார்த்தேன். இளைத்துப் போன மாதிரி இருந்தது. என்னைப் பார்த்து சிறு புன்னகை செய்துவிட்டுப் போய் விட்டாள்.
எழுவர் ஐவராகி விட்டோம்.
***
கோனா சொல்லிக் கொடுத்தபடி அடுத்த மாதத்தின் நாட்கள் வந்ததும் நான் தைரியமாக தயாராக இருந்தேன். முதல் நாள் ஹரியின் வருகைக்காக காத்திருந்தேன். பனிரெண்டரை மணி வரை அவன் வரவில்லை. பிறகு ஆழ்ந்த நித்திரை அணைத்துக் கொண்டது. சுமார் அதிகாலை இரண்டு மணியளவில் என்னை யாரோ ஸ்பர்சிக்கும் உணர்வு வந்து உடம்பை உதறிக்கொண்டு எழுந்தேன். இளித்தபடி அவன்.
‘யூஸ் ஆயிட்ட போலிருக்கே! உனக்கும் பிடிச்சுடும் கொஞ்ச நாள்ல’ என்றான். இப்போது எனக்கு பயமிருக்கவில்லை. அருவருப்பின் உச்சகட்டத்தில் சீறினேன்.
‘கைல என்ன இருக்கு பார்த்தியா? நாயே! இனி பக்கத்துல வந்த…இதுதான் உனக்கு’ என்று கத்தியைக் காண்பிக்க ஒரு கணம் ஸ்தம்பித்த அவன் சிரித்துக்கொண்டே அநாயாசமாக என் கையை முறுக்கி கத்தியை வீசினான். அவன் உயரத்தும் பலத்துக்கும் நான் உறை போடக் காண மாட்டேன்.
‘ஓ! வீராங்கனை ஆகறீங்களோ! என்னை பயமுறுத்த முடியாதுடீ. என்னை வெட்டுவாளாம்’ என்று ஆக்ரோஷமாக கிசுகிசுத்துக் கொண்டே செய்ய வேண்டியதை செய்து விட்டு வெளியேறினான்.
இந்த முறை எனக்கு கையாலாகாத்தனத்துடன் கோபமும் வந்தது. என்னால் கோனாவின், அவள் அண்ணனின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது.
சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் ஹரியின் அறைக்குச் சென்றேன். அவன் கதவைத் தாழிடவில்லை. பூனைபோல் மெதுவாக அடியெடுத்து வைத்து அவன் அறையைச் சுற்றி நோட்டமிட்டேன். அவன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் மேஜை மேல் கல்லூரியில் அவன் ஒப்படைக்க வேண்டிய குறிப்புகள் அடங்கிய ரெகார்ட் நோட்டை எடுத்துக் கொண்டேன். அவனுடைய ஸ்டாம்ப் கலெக்ஷன் ஆல்பத்தையும் எடுத்துக் கொண்டேன். மேஜை மேல இருந்த இன்னும் இரண்டு நோட்டுப் புத்தகங்களையும் எடுத்துக் கொண்டேன். ஓசைப்படாமல் என் இடத்துக்கு வந்தேன். புழக்கடைக் கதவைத் திறந்து குளியல் அறைக்குச் சென்று நிதானமாக எல்லாவற்றையும் கிழித்தேன். ‘க்ளாஸ் ஃப்ர்ஸ்ட் தான நீ சனியனே! சாவு!’ என்று கறுவிக்கொண்டே எல்லவற்றையும் கிழித்தேன். ஸ்டாம்ப் ஆல்பத்தை கிழிக்க முடியாமல் அதைக் குளியலறை தொட்டிக்கு மேல் விறகு வைக்கும் பரணுக்குள் வைத்தேன். கிழித்த குப்பைகளை ஒரு பைக்குள் போட்டு மூட்டைகட்டி குமுட்டி அறைக்குக் கொண்டு வந்து அதன் மேல் என் துணிகள் சிலவற்றை அடைத்து அலமாரியில் வைத்தேன். காலையில் குப்பைத் தொட்டியில் போடலாம் என முடிவு செய்தேன். பிறகு பேய்த் தூக்கம் தூங்கினேன். அம்மா காலையில் ‘கீதா, ஸ்கூலுக்கு நேரமாச்சு, எழுந்திரு’ என்று பல முறை அலறிய பிறகு எழுந்தேன். புழக்கடையில் பல் தேய்த்துக்கொண்டே மெல்ல நோட்டம் விட்டேன். ஹரி அங்கேயும் இங்கேயும் அலைந்துகொண்டிருந்தது தெரிந்தது.
‘நாங்க ஏண்டா உன் நோட்டை எடுக்கப் போறோம். சரியாப் பாரு’ என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தது கேட்டது.
நான் சீக்கிரம் குளித்துவிட்டு பின்பக்கம் வழியாக முன் வாசலுக்கு வந்து படியில் நின்றபடி ‘என்னவாம் பிரச்சனை?’ என்றேன். அலாவுதீன் பூதம் போல என் குரல் கேட்டு சட்டென்று ஹாலுக்கு வந்தான் ஹரி. ‘அவனோட இரண்டு முக்கியமான நோட்டைக் காணலியாம். நீ பார்த்தியா?
‘நான் எப்படி என் ரூமை விட்டு வெளியே வருவேன்? எனக்கென்ன தெரியும். ராப்பூரா ஒரே கொசுக்கடி. சரியா தூங்கவேயில்ல’ என்றதும் என்னை குரோதத்துடன் பார்த்தான் ஹரி. கோண வாய் சிரிப்பை நான் இப்போது சிரித்தேன். திரும்பி நடந்தேன்.
அதற்குப் பிறகு ஹரி என் அறைக்கு வருவதை நிறுத்திவிட்டான்.
ஆனால் மூன்று வருடங்களாக வேறு விதமான சித்திரவதை செய்ய ஆரம்பித்திருக்கிறான்.
*
‘ஹாப்பி சிக்ஸ்டீந்த் பர்த்டே டு மீ!!!’
-தொடரும்
கொடுமை……
Good day mam, sin wave or sea wave …. of happiness. That, egg broken is soooo funny .. imagining the incident.. I can’t control my laugh… really cute to remember… that record note …tearing.. awesome… huge thumbs up. Ty mam…
அடுத்த பாகத்துக்கு ரொம்ப காக்க வைக்கிரீங்க ….
Waiting for next episode….
இந்த எட்டாவது அத்தியாயம் இதுவரை வந்த பகுதிகளில் டாப் என்று தோன்றுகிறது. அச்சு அசலாக அங்கு இருப்பது போல் எழுதுறீங்க.
“இப்பல்லாம் இரண்டு பேரும் பேசாமலேயே இன்னொருத்தர் சரியான மனநிலையில இல்லன்னு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டோம்”
“காலம் உருண்டோடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நான் மட்டும் ஒரே இடத்தில் நின்றுவிட்டேன். ஆனாலும் ஆறு இழுத்துச் செல்லும் கூழாங்கல்லைப் போல காலம் தன்னோடு மனிதனை இழுத்துக்கொண்டு தானே போகிறது”
அந்த தாத்தா எதற்கு எடுத்தாலும் கர்மா, பர்மா சூப்பர்மா என்று சொல்வது எல்லாம் இயலாமையால் வரும் சாக்குபோக்குத்தான்.
சுமதியை போன்ற பெண்கள் இப்படி விழுவதற்கான சாத்தியங்கள் அதிகம். எனது நண்பன் ஓசூரில் அவனது அக்கா சுமதியை போன்றே வீட்டுக்கு கார் ஓட்ட வந்தவருடன் போய் கல்யாணம் செய்து விட்டது. அவர்கள் மாத்துவா பிராமணர்கள். அதன் பிறகு அவர்களின் அப்பா இருக்கும்வரை வீட்டில் சேர்க்கவில்லை. அதன் பிறகு சேர்த்து கொண்டார்கள். அந்த அளவு அழகாக இருப்பார், ஆனால் அப்பாவி. டிரைவருக்கும் அவருக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இருக்காது. முதல் தடவை எனக்கு பயங்கர அதிர்ச்சி. பார்த்து பதினான்கு வருடங்கள் ஆகிவிட்டன.
வாழ்க்கை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு எந்த சலனமும் இல்லாமல் எந்த ஓசையும் எழுப்பாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறது.