Skip to content

ஹெக்ஸகோன் – 11

ஜூலை 10, 2023

 

ஜூலை ஒன்பதுடன் எங்களுடைய படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது.  என்னுடைய கணவனாக குறும்படத்தில் நடித்த மேகவண்ணன் அவர் குடும்பத்துடன் பிரான்ஸின் தென் பகுதியிலிருக்கும் மோன்பெல்லியே என்ற ஊருக்கு செல்வதாகச் சொன்னார். அங்கே அவருக்கு ஒரு வீடு இருந்தது. ஜூலை மாதம் பிரான்ஸிலிருக்கும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை. ஒருவர் பாக்கியில்லாமல் அவரவருக்கு ஏற்ற இடங்களுக்கு குழந்தைகளை இட்டுச் செல்கிறார்கள். நீலவண்ணனுக்கு இரண்டு பெண்கள். மூத்த பெண் அவளுடைய காதலனுடன் தனி வீட்டில் வசிக்கிறாள். சின்னவள் எம்மா. பத்தாவது படிக்கிறாள். மேகவண்ணனும் அவர் மனைவி மரியாவும் மகள் எம்மாவும் மோன்பெலியேவில் பதினைந்து நாட்கள் தங்கத் திட்டமிட்டிருந்தனர்.

‘நீயும் வருகிறாயா?’ என்று கேட்டார் மேகவண்ணன்.

‘ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கச் செல்லும்போது இந்தக் கரடி எதற்கு’ என்றேன்.

‘உன்னை பதினைந்து நாளும் எங்களோடு இருக்கச் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. நடுவில் வரும் சனி ஞாயிறன்று எங்களுடன் இருக்கலாம். ஜூலை 15, 16 எங்களுடன் செலவழிக்கலாமே. நீ தேவதை. கரடி என்று சொல்லாதே’ என்றார் தன் மனைவியைப் பார்த்து புன்னகை செய்தபடி.

அவரும் ‘நீங்கள் வந்தால் சந்தோஷமே’ என்று உண்மையாக மனதார சொன்னதுபோல் தான் இருந்தது.

உடனே யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டேன். எனக்கு டி.ஜி.வி. அதிவேக ரயிலில் பயணச்சீட்டு வாங்கி அனுப்பினார் மேகவண்ணன்.

*

பாரிஸ் மெத்ரோ ரயிலில், அதாவது பாரிஸுக்குள் மட்டுமே செல்லும் மெத்ரோவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல இரண்டு யூரோ மட்டுமே என்று தெரிந்தது. நம்மூர் ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட இருநூறு ரூபாய். கிஷோர் வாங்கிக் கொடுத்திருந்த மெத்ரோ அட்டையில் பத்து முறை மெத்ரோவிலோ பேருந்திலோ பயணம் செய்யலாம். காலியானால் திரும்ப பணமேற்றிக் கொள்ள வேண்டும். பலர் பயணச்சீட்டு வாங்குவதில்லை. அட்டையைத் தேய்த்தால் திறக்கும் கதவின் மேலாக எகிறிக் குதித்து செல்வதை கவனித்தேன். அப்படிச் செல்பவர்களில் எண்பது சதவிகிதம் புலம் பெயர்ந்தவர்கள். எக்காலத்திலும் அப்படிச் செல்லக்கூடாதென்று கிஷோர் எங்களை முன்னரே எச்சரித்து விட்டார்.

‘டிக்கட் செக்கர் வந்துவிட்டால் ஃபைன். அதுகூடப் பரவாயில்லை. போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டி வந்தால் அடுத்தமுறை வீசா கிடைக்காது’ என்று பயமுறுத்தினார். அப்படியும் இரண்டு முறை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தேன், அட்டைவேலை செய்யாததால். சாந்த்ரா ‘பரவாயில்லை, என் பின்னால் வந்துவிடு’ என்று சொன்னார். அதனால் இரண்டு முறைபயத்துடன் பயணச்சீட்டில்லாமல் பயணித்தேன். ‘டிக்கட் செக்கர் வந்தால் நீ யாரோ, நான் யாரோ’ என்றார் குறும்புச் சிரிப்புடன்சாந்த்ரா.

ஷோபா சக்தியைப் பார்த்தபோது சொன்னார் ‘நானும் இப்படி எகிறிக் குதித்துதான் போவேன். தீபன் திரைப்படத்திற்கு ‘பால்ம்த’ஆர்’ (Palme d’or )விருது கிடைத்தபோது டிவியில் என் படத்தைக் காட்டிக்கொண்டே இருந்தார்கள். அந்த நாளில் நான்மெத்ரோவில் செல்ல வேண்டியிருந்தது. எல்லோரும் என்னைப் பார்த்து நட்புடன் சிரிக்கவே, எகிறிக் குதிப்பதற்கு வெட்கப்பட்டுடிக்கட் வாங்கினேன். இந்த விருதுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்று நேர்காணலில் கேட்டபோதுஇதைத்தான் சொன்னேன். முந்தி டிக்கட் வாங்க மாட்டேன். இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டதால் டிக்கட் வாங்கவேண்டியிருக்கிறது என்று’ என்றார்.

‘ஆனாலும் இரண்டு யூரோ அதிகம்தான். பாவம், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்’ என்றேன் சாந்த்ராவிடம்.

‘இரண்டு யூரோவில் உங்கள் நாட்டில் என்ன வாங்க முடியும்?’ என்று சவால் விட்டார் சாந்த்ரா.

‘என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஏகப்பட்டது வாங்கலாம். இரண்டு லிட்டர் பால், தயிர், மூன்று நாளைக்குக் காய்கறி,…’ என்று வரிசையாக அடுக்கினேன்.

‘கிராமத்தில் இருக்கும் என் மாமியார் இருநூறு ரூபாய்க்குதான் கரண்ட் பில் கட்டுகிறார் ஒரு மாதத்துக்கு. ஏன்? ஒரு சல்வார்டாப்ஸோ, புடவையோ, சட்டையோ கூட வாங்கலாம்’ என்றேன். சாந்த்ரா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. பேசாமல் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து விடலாம் என்று நினைத்திருப்பார்.

பாரிஸில் விலைவாசி பயங்கரம். புறநகர்ப் பகுதிகளிலெல்லாம்கூட 1200 சதுர அடி வீடு ஆயிரம் யூரோ (கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்) வாடகை. மாதம் குறைந்த பட்சம் 3000 யூரோ சம்பாதித்தால் மட்டுமே மூச்சு விட முடியும். அதாவது கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும். இந்தியாவில் இருந்து பாரிஸ் சென்று பத்து நாள் இருக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் இரண்டு லட்ச ரூபாய் வேண்டும். விமான டிக்கட்டே 70,000ல் இருந்து 90,000 வரை. அங்கே செலவு செய்ய ஒரு லட்சம் கட்டாயம் வேண்டும். எல்லா சுற்றுலாத் தலங்களுக்கும் குறைந்தது 1500 ரூபாய் கட்டணம் உண்டு.

*

சரியான பிளாட்பாரம் பார்த்து நின்றால் நாம் நிற்கும் பிளாட்பாரமில் வரும் எல்லா வண்டிகளும் நமக்கு வேண்டிய இடத்திற்குப் போகும். இந்த வண்டிதான் அங்கு போகும் அது போகாது என்றெல்லாம் இல்லை. சரியான பிளாட்பாரத்தில் நிற்பது மட்டும்தான் முக்கியம்.  எல்லாப் பக்கங்களிலும் வழி சொல்லும் பலகைகள் உண்டு. இரு முறை தனியாகப் போய் வந்துவிட்டால் மெத்ரோ நமக்குப் புரிபட்டு விடும். பாரிஸ் நகரத்தில் தனியாக மெத்ரோவில் ஏறி சுற்றிப் பார்ப்பது சுலபம்தான்.

‘சென்னையில் இப்படி வசதியில்லை. நான் அங்கு வந்தபோது பஸ்ஸில் ஏறி மிகவும் சிரமப்பட்டேன்’ என்றார் சாந்த்ரா.

‘முதலில் பாரிஸோடு சென்னையை ஒப்பிடுவதே தப்பு சாந்த்ரா. இந்த வானிலையும்  இப்படியான சாலைகளும் சென்னையில் இல்லை. எங்கள் மக்கள் தொகையையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். மட்டுமல்லாமல் எங்கள் ஊர் மக்களிடம் வழி கேட்டால் உங்களை வீடு வரை கொண்டு விட்டு வருவார்கள்’ என்றேன்.

‘அது, ஆமாம்! மக்கள் ரொம்ப அன்பானவர்கள்’ என்றார்.

‘இங்கும் மக்கள் அன்பானவர்களே. தோபாந்தோனுக்கு நான் வழி கேட்டபோது எல்லோரும் வழி சொன்னார்கள் சாந்த்ரா. அதையும் சொல்ல வேண்டும்.’

‘நீ வழி கேட்ட அனைவரும் ஆண்களா?’

‘ஒருவரைத் தவிர அனைவரும் ஆண்கள்.’

‘அதானே பார்த்தேன்!’ என்றார் கிண்டலாகப் புன்னகைத்துக்கொண்டு.

*

மேகவண்ணன் அழைப்பை ஏற்று பாரிஸிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மோன்பெலியே நகரத்துக்கு TGV என்ற வெகு வேக ரயிலில் மூன்றரை மணி நேரத்தில் சென்றேன். கார் த லியான் என்ற ஸ்டேஷனில் இருந்துதான் வேறு ஊர்களுக்குச் செல்லும் பெரும்பாலான ரயில்கள் புறப்படுகின்றன. நந்தனின் வீட்டிலிருந்து கிளம்பியதால் அவர் என்னை வழியனுப்ப வந்திருந்தார். விமான நிலையத்தைப் போலவே ஒரு கட்டத்துக்கு மேல் அவரை அனுமதிக்கவில்லை. பயணிகள் மட்டும்தான் என்று தடுத்து விட்டனர். அது இரண்டடுக்கு ரயில். சுத்தமாக இருந்தது. எனக்குக் கிடைத்த இருக்கை நடுவில் மேசையோடு இருந்தது. இந்தப் பக்கம் இருவர் அந்தப் பக்கம் இருவர் என்று உட்காரலாம். இது மாதிரியான இருக்கைகள் சதாப்தியில் பொதுவாகப் பெட்டியின் நடுவில் இருக்கும். இந்த வண்டியில் பெட்டியின் கடைசியில் இருந்தது. எனக்கு எதிரே ஸ்டைலாக, புஜங்களில் டாட்டூ வரைந்த ஒரு தந்தையும் இருபதுகளில் இருக்கும் அவரின் மகளும் அமர்ந்திருந்தனர். என் அருகே ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன்.

வண்டி கிளம்பும் நேரம் வந்ததும், டிக்கட் கலெக்டர் வந்து ‘எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா, ஏதேனும் வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள். Bon Voyage!’ என்று சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டுச் சென்றார். எல்லோரும் ‘மெர்சி’ என்றார்கள். அதற்குப்பின் அந்தப் பெட்டியிலிருந்து சத்தமேயில்லை.

வண்டி கிளம்பியவுடன் ‘உங்கள் போனை சைலண்ட் மோடில் வைக்கவும். மற்றவருக்கு தொல்லையில்லாமல் ஹெட்போனில் பாட்டு கேட்கவும். புகை பிடிக்கவும் கூடாது. குழந்தைகளுக்கான பிரத்யேகப் பெட்டி இருக்கிறது. வேண்டுமானால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று அறிவிப்பு பிரெஞ்சிலும், பிரெஞ்சைப் போன்ற உச்சரிப்புடன் ஆங்கிலத்திலும் வந்தது. சுரங்கப் பாதையினுள் செல்லும்போது விமானத்தில் போவதுபோல காதை அடைத்தது.

நம்மூர் போல ‘மத்தியானம் என்ன சமைச்சு வச்சிருக்க? கண்ணன் வந்தானா? ஊர் சுத்தாம சோறு தின்னானா இல்லியா?’ என்று அலற முடியாது. அனைவரும் இடித்து வைத்த புளிபோல் சீட்டில் ஒட்டிக் கொண்டு வீடியோ பார்க்கிறார்கள் அல்லது புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். போன் பேச வேண்டும் என்றால் பெட்டிக் கதவைத் திறந்து வெளியில் போய் கிசுகிசுத்து விட்டு வருகிறார்கள். முதல் வகுப்புப் பெட்டிக்காரர்களுக்கு தனியே வெளியில் ஒரு பெஞ்சு உண்டு. அதில் உட்கார்ந்து கதைக்கலாம், பத்து டெசிபலில். மனிதர்கள் என்ன, அந்த ரயிலில் பயணம் செய்யும் நாய் பூனைகளும் முனகுவது கூட இல்லை. அழகாக மடியில் உட்கார்ந்து கொண்டு வருகின்றன.

ரயிலின் ஒரு பெட்டி டைனிங் கார் மற்றும் பார். வேண்டுமென்றால் அங்கே போய் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் நான் பார்த்த வரை எல்லோரும் சாப்பாடு கட்டிக்கொண்டு வந்து விடுகிறார்கள்.

அப்பாவும் மகளும் வழியில் ஒரு ஊரில் இறங்கினார்கள். இறங்கும்முன் என்னிடமும் என் பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞனிடமும் ‘Bonne journee’ (‘இந்த நாள் இனிய நாளாகட்டும்’) என்று சொல்லிவிட்டு இறங்கினார்கள். ஆஹா! அருமையான மக்கள் என்று நினைத்துக் கொண்டேன். மோன்பெலியேவிலிருந்து பாரிஸ் திரும்பி வரும்போது என் எண்ணம் சற்று மாறியிருந்தது.

மோன்பெலியேவிலிருந்து பாரிஸ் திரும்பும்போது ஸ்டேஷன் வாசலில் என்னை மேகவண்ணன் இறக்கிவிட்டுவிட்டுப் போய் விட்டார். நான் அறிவிப்பு வந்ததும் நேராக பிளாட்பாரத்துக்கு சிறிது முன்னால் நின்றிருந்த டிக்கட் சோதனை செய்பவரிடம் என் டிக்கட்டை காண்பித்தேன். அவர் ‘வலது பக்கம் செல்லுங்கள். Bonne Journee’ என்றார். நான் கோச் நம்பரைப் பார்த்து உள்ளே ஏறும்முன் என் பின்னாலிருந்து கடுமையான ஒரு குரல் வந்தது. திரும்பிப் பார்த்தால் தள்ளுவண்டியில் குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு பெண்மணி முறைத்துக் கொண்டிருந்தார். ‘என்ன சொன்னீர்கள்?’ என்று கேட்டேன்.

‘சீக்கிரம் ஏறு, இல்லையென்றால் எனக்கு வழியை விடு’ என்று கடுகடுவென்று சொன்னார். பிரான்ஸ் வந்தபிறகு முதல் முறையாக கடுஞ்சொல் கேட்டதால் அதிர்ச்சியுடன் உள்ளே ஏறினேன். அந்தப் பெண்மணிக்கு அந்த டபுள் டெக்கர் வண்டியின் மேலடுக்கில் இருக்கைபோல. எனக்கும் மேலடுக்கில்தான் இருக்கை. அவர் தள்ளுவண்டியை மேலே தூக்கிக் கொண்டு போக சிறிது சிரமப்பட்டார். நான் தயங்கிக்கொண்டே ‘உதவி வேண்டுமா’ என்று கேட்க ‘தேவையில்லை, எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ளத் தெரியும்’ என்று கடுப்படித்தார். தேவையா இது என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

எனக்கு என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்களிடம் பேசவேண்டும் என்றிருந்தது. ஆனால் தயக்கத்தினால் பேசவில்லை. பிரஞ்சு SNCF ரயில்வே, தன் பயணிகளை பக்கத்தில் உட்கார்ந்து பயணிப்பவருடன் பேச வைப்பதற்கு முயற்சி செய்கிறது. 65 சதவிகித பிரஞ்சு மக்கள் ரயிலில் தன்னுடன் பயணிப்பவரிடம் பேச விரும்புகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. ஆனால் மற்றவர் பேச விரும்ப வேண்டுமே என்ற தயக்கத்தில் பேசுவதில்லை என்று அந்த ஆய்வு சொல்கிறது. சிலர் அமைதியாக ஓய்வாக இருக்கவே விரும்புகிறார்கள். தங்களுக்கான நேரமாக அதைக் கருதுவதால் யாருடனும் பேச விரும்புவதில்லை என்றும் தெரிவிக்கிறது. இதில் குழம்பிப் போய், குறைந்த பட்சம் Valentine’s Day, Christmas போன்ற சமயங்களிலாவது கூட பயணிப்பவருக்கும் ஒரு கேக்கோ பிஸ்கட்டோ எடுத்து வாருங்கள் என்று ரயில்வே சொல்கிறது. பசியில் வயிறு இறைந்தால்கூட முழு பெட்டிக்கும் கேட்குமளவு நிசப்தத்தோடு செல்கிறது TGV. நம் ரயில் பயணங்கள் ஞாபகத்துக்கு வந்தன.

நம்மைப் பார்த்து இவர்கள் திருந்துவதற்கு இன்னும் பல ஆண்டுகளாகும். பாவம் என்று நினைத்துக் கொண்டேன்.

-தொடரும்

3 thoughts on “ஹெக்ஸகோன் – 11”

  1. “பசியில் வயிறு இறைந்தால்கூட முழு பெட்டிக்கும் கேட்குமளவு நிசப்தத்தோடு செல்கிறது TGV” – நைஸ்!
    பயண பதிவுகள் போல் அல்லாமல் சஸ்பென்ஸ் எல்லாம் வைத்து நாவல் சீராக பயணம் செய்கிறது. பாரீஸில் ஒரு வாரம் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. மெட்ரோக்கள் கொஞ்சம் சிரத்தை எடுத்து கொண்டால் புரிந்து விடும். என்ன, ஆங்கிலம் யாருக்கும் தெரியாதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். உணவின் விலையும் அதிகம். இலங்கை தமிழர்கள் நடத்தும் கடைகள், அந்த பகுதியில் செல்லும்போது எதோ தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் இருப்பது போல்தான் இருந்தது. கொரோனாவிற்கு முன்பாக இது எல்லாம்; நெப்போலியனின் அரண்மனையில் எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று தோன்றியது. சொல்ல நிறைய இருக்கிறது. பாரீஸ் என்னால் மறக்க முடியாத ஒரு நகரம்.

  2. Dear Mam,
    I couldn’t wait so long for the next episodes, please upload in shorter time intervals. The novel is so interesting and desirably haunting.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Gayathri R

Gayathri R