Close Menu
GayathirGayathir
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    GayathirGayathir
    • முகப்பு
    • என்னைப் பற்றி
    • சிறுகதைகள்
    • நேர்காணல்கள்
    • கட்டுரைகள்
    • மொழியாக்கங்கள்
    • நாவல்
    GayathirGayathir
    Home»கட்டுரைகள்»Villequier – விக்டர் ஹ்யூகோவின் துயரம்
    கட்டுரைகள்

    Villequier – விக்டர் ஹ்யூகோவின் துயரம்

    gayathri RamBy gayathri RamOctober 25, 2025Updated:October 25, 2025No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பிரெஞ்சில் பட்டப்படிப்பு படிப்பவர்கள் Demain dès l’aube என்ற விக்டர் ஹ்யூகோவின் கவிதையைக் கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் எங்கள் பேராசிரியை இந்தக் கவிதையைச் சொல்லிக் கொடுத்தது இன்னும் பசுமையாக நினைவிலிருக்கிறது. நாங்கள் கண்களில் கண்ணீர் நிரம்ப கேட்டுக்கொண்டிருந்தோம். (இந்தக் கவிதை மட்டுமல்ல. இன்னும் அவர் சொல்லிக் கொடுத்த பல கவிதைகள் ஞாபகம் இருக்கின்றன. எங்களை அப்படியே அந்தக் கவிஞர்கள் வாழ்ந்த நூற்றாண்டுக்குக் கடத்தும் வல்லமை அவருக்குண்டு. எல்லாரும் வகுப்பில் மனம் கனக்க, கண்கள் பனிக்க கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த இன்னொரு கவிதை மற்றொரு நாள்).

    நார்மாண்டியில் இருக்கும் வீல்கியே (Villequier) என்ற அழகான ஊரிலிருக்கும் தன் மகள் லியோபோல்டீனின் கல்லறையை, அவள் இறந்து நான்கு வருடங்கள் கழித்து   விக்டர் ஹ்யூகோ பார்க்கச் செல்லும்போது அவர் எழுதிய கவிதைதான்  Demain dès l’aube (நாளை, அதிகாலையில்…). 

    விக்டர் ஹ்யூகோவின் முதல் மகள் லியோபோல்டீனுக்கு ஃபெப்ருவரி 1843ஆம் வருடம் வீல்கியேவிலுள்ள ஷார்லுடன் திருமணம் நடக்கிறது. அதே வருடம் செப்டம்பர் 4ஆம் தேதி லியோபோல்டீன் தன் கணவர், மாமனார், கணவரின் சொந்தக்காரப் பெண் மற்றும் ஒரு வேலையாளுடன் வீல்கியேவில் ஓடும் சென் நதியில் படகுப் பயணம் செய்கிறார். அப்போது லியோவுக்கு 19 வயது. ஷார்லுக்கு 26 வயது. திடீரென வேகமாகக் காற்று வீச படகு கவிழ்கிறது. ஆற்றின் நீரோட்டம் மிக வலுவாக இருக்க, குளிர்காலத்துக்காக அடுக்கடுக்காக உடுத்தியிருந்த  உடைகள் தண்ணீருக்குள் பாரமாகிப் பிடித்திழுக்க, அனைவரும் மூழ்கினர். ஷார்ல் அருமையான நீச்சல்காரராக இருந்தாலும் தன் மனைவியைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் உயிரிழந்தார். கரையிலிருந்து பார்த்தவர்கள் ஷார்ல், லியோவின் முகத்தை தண்ணீருக்குமேல் இருக்க வைக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் அவளின் கால்கள் படகின் கயிறில் மாட்டிக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்கள். 

    அந்த நேரம் பிரான்ஸின் தென் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தார் ஹ்யூகோ. அவிஞான் (Avignon) என்ற இடத்திலிருந்த ஹ்யூகோ,  ஒரு கஃபேக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த  நாளிதழைப் பார்த்து இந்தத் துயர சம்பவத்தைத் தெரிந்து கொண்டார். தன் மகள் இறந்த செய்தியைத் தெரிந்துகொண்டவுடன் வீல்கியேவுக்கு விரைகிறார். ஆனால் அதற்குள் பல நாட்களாகிவிட்டதால் அவளையும் அவள் குடும்பத்தினரையும் புதைத்து விடுகிறார்கள். தன் மகளைக் கடைசியாகப் பார்க்க முடியாத துயரம் ஹ்யூகோவை வெகுவாக வாட்டியது. அதன் பின் அவர் எழுதிய கவிதைகளில் நிறைய மாற்றத்தைப் பார்க்கலாம்.

    தன் மகளுக்கு சமர்ப்பணம் செய்திருக்கும் Les Contemplations என்ற கவிதைத் தொகுப்பில், ஒரு தந்தையாக, எப்போதும் அவர் மனது வீல்கியேவுக்கு தன்னையறியாமல் செல்வதைக் காணலாம். அதில் அவர் அந்த ஆற்றங்கரையில் நடந்து செல்வார், கல்லறையை நினைத்துப் பார்ப்பார், அவளின் ஆன்மாவோடு பேச முயல்வார், கடவுளிடம் பேசுவார்…

    Demain dès l’aube என்ற கவிதையில், அவர் அதிகாலையில் எழுந்து தனியாக அவர் மகளின் கல்லறைக்குச் செல்லும் காட்சியை, நடந்து செல்லும் வழியை, அந்த இடத்தை, வார்த்தைகளால் வரைந்திருப்பார். 

    ‘நாளை, விடியற்காலையில், இந்த ஊர் வெண்மையாக மாறும் அந்த நேரத்தில், 

    நான் புறப்படுவேன்…

    நீ எனக்காகக் காத்திருக்கிறாய் என்பதை நான் அறிவேன்

    காட்டின் வழியாக, மலையின் வழியாக பயணப்படுவேன்

    இனியும் நான் உன்னிடமிருந்து தூரத்தில் இருக்க முடியாது…’

    என்று தொடங்கும் அக்கவிதை.  (பிரெஞ்சும் தமிழும் நன்றாகத் தெரிந்த கவிஞர்கள் யாரேனும் மொழியாக்கம் செய்தால் நன்றாக இருக்கும். கவிஞர்கள் மட்டுமே கவிதைகளை மொழியாக்கம் செய்ய முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.)

    À Villequier என்ற அவரது கவிதையிலும் சோகம் ததும்புகிறது. 

    ‘இப்போது பாரிஸ்- அதன் கல்லறைகள், அதன் பளிங்குகள்,

    அதன் பனிமூட்டம், அதன் கூரைகள் – என் கண்களிலிருந்து அகன்று விட்டன.

    இப்போது நான் மரங்களின் கிளைகளுக்குக் கீழே இருக்கிறேன்,

    வானத்தின் அழகைப் பற்றி சிந்திக்கிறேன்.

    துக்கம் என் ஆன்மாவை இருளாக்கிய துயரத்தின் ஆழத்திலிருந்து

    மெல்ல வெளிவருகிறேன் – வெளிறியவனாக,

    ஆனால் வென்றவனாக.

    பெரும் இயற்கையின் அமைதியான குரல்

    மெதுவான என் இதயத்துள் ஊடுருவுகிறது-

    ஒரு பிரார்த்தனையைப் போல, ஒரு வெளிச்சம் போல…’

    இப்படி நீளமாகப் போகிறது கவிதை… (மொத்தம் 120 வரிகள்)

    அது கடவுளிடம் அவர் செய்யும் பிரார்த்தனை. அவர் மகளை ஏன் கொண்டு சென்றாய் என்று அவர் இறைவனிடம் கேட்கவில்லை. அவள் இறந்த பிறகு எப்படி தான் வாழ்வது என்பதை சொல்லித் தருமாறு கேட்கிறார்.  இந்தக் கவிதை பிரெஞ்சு இலக்கியத்தில் எழுதப்பட்ட மிகச் சிறந்த துயரக் கவிதைகளில் ஒன்று. பாரிஸில் தன் சுகமான அறையில் இருந்துகொண்டோ அல்லது அகதியாகவோ அவர் இந்தக் கவிதையை எழுதவில்லை. சென் நதியோடும் அந்தச் சிறிய வீல்கியே கிராமத்தில் இருந்துகொண்டு எழுதுகிறார். அவர் மகளும் அவள் கணவரும் அவரின் குடும்பமும் புதைக்கப்பட்டிருக்கும் கல்லறைக்கு அடுத்துள்ள தேவாலயத்தின சுவரில் ஹ்யூகோவின் இந்தக் கவிதையைப் பதித்திருக்கிறார்கள். ஏதோ யோசனையில் அதைப் புகைப்படம் எடுக்காமல் விட்டுவிட்டேன். 

    அவர் மகளின் கல்லறைக்குமுன் நிற்கும்போது, Demain dès l’aube கவிதையை எங்கள் ஆசிரியை மதாம் சித்ரா கிருஷ்ணன் சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அப்போது மனக்கண்ணில் விரிந்த சென் நதி, ஹ்யூகோ நடந்து வந்த அந்தக் காடு , லியோபோல்டீனின் கல்லறை எல்லாவற்றையும் ஒரு நாள் நேரில் பார்ப்பேன் என்று கடுகளவும் நினைத்ததில்லை. என் கற்பனையில் விரிந்த வீல்கியேவுக்கும் நிஜத்துக்கும் சிறிதுகூட சம்பந்தமில்லை. 

    நிஜம் – விவரிக்க முடியாத அற்புதம்.

    கவிதையைக் கடந்து சென்ற உணர்வு!!!

    ***

    articles Gayathri R. leopoldine tamilwriting VictorHugo Villequier கட்டுரைகள் காயத்ரி ஆர். காயத்ரி ஸீரோ டிகிரி விக்டர்ஹ்யூகோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    gayathri Ram

    Related Posts

    ஹெக்ஸகோன் – 11

    October 2, 2024

    ஹெக்ஸகோன் – 10

    October 2, 2024

    ஹெக்ஸகோன் – 9

    September 18, 2024

    ஹெக்ஸகோன் – 8

    July 18, 2024
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Archives
    Facebook X (Twitter) Instagram YouTube
    © 2026 Gayathir. Designed by Technobytee.

    Type above and press Enter to search. Press Esc to cancel.