Close Menu
GayathirGayathir
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    GayathirGayathir
    • முகப்பு
    • என்னைப் பற்றி
    • சிறுகதைகள்
    • நேர்காணல்கள்
    • கட்டுரைகள்
    • மொழியாக்கங்கள்
    • நாவல்
    GayathirGayathir
    Home»நாவல்»ஹெக்ஸகோன் – 3
    நாவல்

    ஹெக்ஸகோன் – 3

    gayathri RamBy gayathri RamJune 5, 2024Updated:March 29, 20251 Comment8 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    3

    20 ஜூலை, 2023

    ஒராதூர், பிரான்ஸ்

    அருணாவின் சொல் என்னை வதைத்தது. என் பள்ளித் தோழி கோனேஸ்வரியின் ஞாபகம் வந்தது. எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறாளோ? நந்தன் தன் ஊரை நோக்கி காரோட்டிக்கொண்டிருக்க, நானும் கயலும் பின்சீட்டில்.  காரில் முன் இருக்கைகளில் அவர்களுக்குள் அமைதியாய் ஒரு பிரளயம் நடந்து கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.

    நந்தனுக்கு வயது முப்பத்தி ஐந்து. பதினெட்டு வயதில் தன் தாயை இலங்கையில் விட்டுவிட்டு வந்தவர் இன்னமும் அவரை சந்திக்கவில்லை. எப்பேர்ப்பட்ட துர்பாக்கியம்! அம்மாவை பிரான்ஸிற்கு அழைத்து வர அனுமதி மறுத்தனர். நந்தனாலும் இலங்கை செல்ல முடியாத சூழல். அவர் தாய் வீடியோ அழைப்பில் என்னிடம் கதறியது மனதைக் குடைந்தது. அவருக்கு இந்த வருடமும் வீசா தர மறுத்து விட்டார்களாம்.

    ‘என் தாய் உங்களைவிட நான்கு வருடங்கள்தான் பெரியவர்’ என்று சொன்ன அருணாவும் நந்தனும் என்னைத் தங்கள் தாயாக வரித்துக்கொண்டனர். ‘அம்மம்மா’என்று கயல் குட்டி அழைத்தபோது நெகிழ்ந்தேன். பொதுவாக யாரிடமும் இணங்கிப் போக தெரிவதில்லை. இணங்கினால் விலகத் தெரிவதில்லை. அதனாலேயே எவரிடமும் நெருங்கிப் பழக பயம். எட்ட நின்று பார்த்துப் பேசி விலகிவிடுவதுண்டு.

    ஆனால் இவர்கள் மூவரும் பல ஜென்மத் தொடர்பாகத் தோன்றினார்கள். ‘என் அம்மாவின் பிறந்தநாளைத்தான் என்னால் கொண்டாட முடியவில்லை. உங்கள் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடுவோம்’ என்று இரண்டாவது முறையாக, பிறந்த நாள் கழிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, நந்தனின் வீட்டில் ஒரு கேக் வெட்டினோம். பக்கத்து வீட்டுக்காரர்களையும் அழைத்திருந்தார் நந்தன்.

    ஜூலை 18, என் ஐம்பதாவது பிறந்தநாளை வெகு விமரிசையாக கிஷோரின் அலுவலகத்தில் கொண்டாடினோம். அந்த சம்பவத்தைப் பிறிதொரு நாள் சொல்கிறேன்.

    பக்கத்திலிருக்கும் மார்கெட்டுக்குப் போய் ஒரு ஆப்பிள் மரக்கன்று ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து அவர் தோட்டத்தில் என்னை நட்டு வைக்கச் சொன்னார் நந்தன். நான் கன்றை ஊன்ற, கைதட்டி ஆர்ப்பரித்தனர். என் வாழ்நாளில் என் பிறந்தநாளில் இவ்வளவு சந்தோஷமாக இருந்ததாக ஞாபகம் இல்லை. இவர்களால் இந்தப் பயணம் என்றுமே என்னால் மறக்க முடியாததாகியது.

    ***

    ஜனவரி 2023

    சென்னை

     

    சிறு வயதில் சார்ல்ஸ் டிக்கன்ஸின் நாவல் ஒன்று என்னுள் ஏற்படுத்திய தாக்கம், 2002ல், சென்னையில் உள்ள அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸில் ஆசையாக பிரெஞ்ச் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது ஏற்பட்ட பைத்தியம்… 2023இல்தான் ஓரளவுக்கு சரியாகியது.

    ‘இருபத்தி ஐந்தாம் வருட திருமண நாளை நாம் பாரிஸில் கொண்டாடுவோம்’ என்று ஷ்யாம் சொன்னதை சந்தோஷமாக உள்வாங்கிக்கொண்டு நாட்களை எண்ணிக்கொண்டிருந்தேன். 2020இல் இருபத்தி ஐந்தாம் மணநாள் வந்தது. கோவிட் பழிவாங்கியது. சொல்லவொணா ஏமாற்றம் எனக்கு. என் வீட்டின், வேலையின் சூழ்நிலை இனி அங்கெல்லாம் போக முடியுமாவென கேள்விக்குறியாக்க, சரியான சமயத்தில் வந்தார் கிஷோர்.

    பல வருடங்களாக குறும்படங்கள் இயக்குபவர். பெரும் நடிகர்களை வைத்து குறும்படங்கள் இயக்கியிருக்கிறார். அவை பல நாடுகளின் குறும்பட பரிசுகளை ஆர்ட் ஃபிலிம் வரிசையில் வென்றிருக்கின்றன.

    ஒரு பல்லி இந்தச் சுவரிலிருந்து அந்தச் சுவருக்கு வருவதை சோக பின்னணி இசையுடன் அரைமணிக் கூறு காண்பிப்பார்கள். அது ஒரு கட்டத்தில் சுவரில் உள்ள ஒரு இடுக்கில் சிக்கி வாலை இழந்து போராடி வெளியே வரும். கடைசியில் அந்தப் பல்லிக்கு ஒரு பூச்சியும் கிடைக்காமல் வாடுவதோடு படம் முடியும் என்பது போன்ற பொத்தாம்பொதுவான ஒரு ஞானம் எனக்கு ஆர்ட் ஃபிலிம் பற்றி இருந்தது.

    டிசம்பரில் 2022ல் ஒருநாள் விளம்பர நிறுவனம் நடத்தும் செந்தில் கூப்பிட்டு ‘பிரெஞ்ச் தெரிந்த நடுத்தர வயது பெண்மணி வேண்டும். உங்களால் ஒரு பைலிங்குவல் குறும்படத்தில் நடிக்க முடியுமா?’ என்று கேட்டார்.

    ‘எப்ப இருக்கும் ஷூட்டிங்’ என்று கால்ஷீட்டே இல்லாத நடிகைபோல் தெனாவெட்டாகக் கேட்க ‘ஜனவரில இருக்கும், நான் இயக்குநர் கிஷோரை பேசச் சொல்கிறேன்’ என்றார்.

    நான் ஒரு புகழ் பெற்ற கல்லூரி ஒன்றில் வார இறுதியில் பிரெஞ்சு டிப்ளமா கோர்ஸ் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். பாடம் சொல்லித் தருவது எனக்கு மிகப் பிடித்தமான ஒரு வேலை. அது தவிர குறும்படங்கள், விளம்பரங்கள் என அவ்வப்போது நடித்துக்கொண்டிருந்தேன். சில மணித்துளிகளே திரையில் வந்தாலும் அந்த வேலையும் பிடித்திருந்தது. ஏனென்றால் பிரெஞ்ச் சொல்லிக் கொடுப்பதை விட்டால் எனக்கு அடுத்த பிடித்தமான வேலை பயணம் செய்வது. இப்படி நடிப்பதால் இந்தியாவுக்குள் பல இடங்களுக்குப் பயணம் செய்ய முடிந்தது பைசா செலவில்லாமல்.

    சிறிது நேரத்தில் கிஷோர் கூப்பிட்டார். ‘தமயந்தியா நடிக்கிறேன்னு சொன்னவங்க கடைசி நிமிஷத்துல முடியாதுன்னு சொல்லிட்டாங்க. உங்களால் முடியுமா’ என்றார்.

    ‘என்னை வைத்து நீங்கள் நினைத்தபடி வேலை வாங்க முடியுமான்னு தெரியலையே கிஷோர்’ என்று கழன்று கொள்ளப் பார்த்தேன்.

    ஏனென்றால் தமயந்தி என்கிற அந்தக் கதாபாத்திரம்தான் அதில் நாயகி. ஆர்ட் பிலிம் நாயகி என்றால் அழுக்கு மூஞ்சியோடு உருண்டு பிரண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து நடிக்க வேண்டும். நான் அப்படியொன்றும் மெனக்கெட்டு நடிப்பதில்லை. நடிக்க வராது. விளம்பரங்களில் பொதுவாக பல்லைக் காட்டிக்கொண்டிருந்தால் போதும். படங்களிலும் சொல்லிக் கொள்ளும்படி பெரிய கதாபாத்திரங்களும் செய்ததில்லை. மும்முரமாக வாய்ப்பு தேடும் அளவுக்கு கலைத் தாகமும் இல்லை.

    ‘உங்களை நடிக்க வைப்பதை நான் பார்த்துக்கறேன்’ என்றார்.

    சும்மாவேனும் ‘எங்கே இருக்கும் ஷூட்டிங்?’ என்று கேட்க,

    ‘பாண்டிச்சேரில அஞ்சு நாள் ஷூட், அப்புறம் ஜூலை மாதத்துல பாரிஸ்ல’ என்று அவரின் ‘ல’ ஒலி தேயுமுன் ‘நான் நடிக்கறேன், கண்டிப்பா. பல விளம்பரப் படங்கள் செஞ்சிருக்கேன். சில படங்களில கூட நடிச்சிருக்கேன், சின்னச் சின்ன கதாபாத்திரங்களில்’ என்றேன் படபடவென்று.

    வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த ஷ்யாமும் என் பிள்ளை பரத்தும் என்னை உற்றுப் பார்த்தனர். ‘நடிப்பா! எல்லா படத்திலும் தலையை ஆட்டிக்கொண்டு நாலு பேரில் ஒருத்தியாக இருப்பாய், இல்லை ‘நல்ல நேரத்துல உங்க மனைவிய ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்தீங்க’ போன்ற வசனம் மட்டும் தானே பேசுவாய், என்ற செய்தி இருந்தது.

    நொடித்துக்கொண்டு அவர்களைப் பார்த்து கண்களை உருட்டினேன். கள்ளச் சிரிப்புடன் இரண்டும் தத்தம் கைபேசியில் அமிழ்ந்ததுகள். நான் எப்போது இதையெல்லாம் பொருட்படுத்தியிருக்கிறேன்!

    கிஷோரிடம் சந்தோஷமாக சரியென்று சொல்லிவிட்டேன், மலைபோல் குவிந்திருக்கும் வேலைகளைப் பற்றி யோசிக்காமல்.

    ‘அறிவிருக்காம்மா உனக்கு? யார் அவங்க, என்ன ஸ்க்ரிப்ட் , என்ன கதை, எதாவது கேட்டியா? பாரிஸ்ல ஷூட்டிங்னு சொன்னதும் அசிங்கமா தலையாட்டிட்டு வந்து நிக்கறியே. அங்க நீ பாதுகாப்பா இருப்பேன்னு உனக்குத் தெரியுமா? வெள்ளைக் கலர் கார் வந்து நின்னா அது அப்பா காருன்னு நினைத்து எத்தனை தடவை ஏறி மத்தவங்களை பயமுறுத்தியிருக்க.’

    ‘அப்பா! அன்னிக்கு அப்படித்தாம்பா ஏதோ ஒரு வெள்ளை ஆடி கார்ல ஏறதுக்கு பூட்டின கதவைத் திறக்க ட்ரை பண்றா. அதுகூட வித்தியாசம் தெரியல. எப்படித் தனியா அனுப்புவ அம்மாவ?’ என்று கத்தினான் பரத்.

    அப்போது என்னுடன் மூன்று கதாபாத்திரங்கள் சென்னையிலிருந்து பாரிஸ்வரை வரப் போகின்றன என்று தெரியாது.

    என்னைப்பற்றி இவர்களெல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எரிச்சல் வர, ஷ்யாம் தன் பங்குக்கு ‘அட, நீ வேற பரத், இவளை யாரும் கடத்திகிட்டு போக வேணாம், இவளே தொலைஞ்சு போவா. அஞ்சு வருஷமா காலேஜ் போறாளே. இங்கிருந்து போக வழி கேளு’ என்றார்.

    ‘ஏன்? எனக்குத் தெரியுமே?’ என்று கடுப்பாகச் சொன்னேன்.

    ‘யாருக்கு வழி தெரியாது?அந்த வள்ளுவர் கோட்டம் பக்கத்தில் லேசாக குழப்பமிருக்கும். அப்புறம் அழகாக துணிகளை டிஸ்ப்ளே பண்ணியிருக்கும் அந்த காவேரின்னு ஒரு பொத்திக் இருக்குமே, அங்க மட்டும் கொஞ்சமே கொஞ்சம் புத்தி தடுமாறி வழி கொஞ்சம் தெரியாது. அவ்வளவுதான்’ என்று நினைத்துக்கொண்டேன்.

    ‘நீங்கள் எல்லோரும் என் கனவைக் கலைக்க வந்த மாயப் பிசாசுகள். எனக்கு ஐம்பது வயதாகப் போகிறது. நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும்’ என்று எல்லோரையும் அடக்கி கிஷோரைப் பற்றி எடுத்துச் சொல்லி பரத்தை ஆற்றுப்படுத்தினேன்.

    ‘சரி! Find my friendsல என்னை சேர்த்துக்கொள். நீ எங்கே இருக்கறேன்னு அப்பப்போ பார்த்துக்கறேன்’ என்று  என் மகன் அமைதியானான்.

    *

    மே 2023

     

    ‘ஏர் இந்தியாவிலா வருகிறீர்கள்?இரண்டு பெட்டிகள் எடுத்து வரலாம். இருபத்தி மூணு இருபத்தி மூணா நாற்பத்தாறு கிலோ எடுத்து வரலாமே?’ என்று பாரிஸிலிருந்து ஸ்டாலின் வியக்கும்போதே ஏதோ அவர் பின் மண்டையில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைத்தேன். நினைத்தது அடுத்தநாள் சரியாகி விட்டிருந்தது.

    அடுத்தநாள் ஸ்டாலினும் அவர் மனைவி தேவியும் பேசினார்கள். ‘ஒரு சின்ன ஹெல்ப். உங்கள் துணியெல்லாம் வைத்தபிறகு இடமிருந்தால் என்னுடைய ஒரு பார்சலை நீங்கள் கொண்டு வர முடியுமா?’ என்று கேட்டார். இடமிருந்தால்தானே ஒரு பார்சல் கொண்டு வர முடியுமா என்று கேட்கிறார்கள். இதில் என்ன பிரச்சனை என்று ‘சரி, என் பொருட்களை பெட்டிகளில் வைத்துவிட்டுச் சொல்கிறேன்’ என்றேன். வாக்கில் எனக்கு சனி என்று தெரியாது.

    போக ஒருநாள் வர ஒருநாளையும் கணக்கிலெடுத்துக் கொண்டால் இருபத்திமூன்று நாட்கள் இருக்கப் போகிறேன். அதுவும் ஒரே இடத்தில் இல்லை. துணி துவைக்க முடியுமோ முடியாதோ தெரியாது. அதனால் குறைந்த பட்சம் இருபத்தி ஐந்து செட் துணிகளாவது எடுக்க வேண்டாமா? அதுவும் ஷூட்டிங் என்றால் அதற்குத் துணி, அலங்கார சாதனங்கள் இன்னும் பிற தளவாடங்கள் என்று இரண்டு பெட்டிகளும் வெடித்துவிடும் நிலைமையில் இருந்தன. பெட்டிக்குள் சாமான்களை  வைப்பது, பிறகு வெளியில் எடுப்பது என்று ஒரு பத்து நாட்களாக பைத்திய மனநிலையில் இருந்தேன். வேலைகளை கெடுவிற்குள் முடிக்க வேண்டும். தினமும் ஓயாமல் மணி அடிக்கும் கைபேசிக்கு பதில் சொல்ல வேண்டும்.

     ‘ஏம்மா,ஷ்யாமுக்கும் பரத்துக்கும் யார் சமைத்துக் கொடுப்பா? ஒரு நாள், இரண்டு நாள்னா தேவலை. இருபத்தி மூணு நாள்.’

    ‘மேம். மூணு வாரத்துக்கு வேற டீச்சர் ஏற்பாடு பண்ணிட்டீங்களா?’

    ‘மேம், வி.எஃப்.எஸ் அப்பாயிண்ட்மெண்ட் முப்பதாம் தேதி. மறந்துடாதீங்க.’

    ‘ஏய்! ஷேனல் பர்ஃப்யூம் வாங்கிட்டு வா.’

    ‘ஈபில் டவர் பார்ப்பியாடி?’

    ‘என் நாத்தனார் பையன் தூலூஸ்ல இருக்கான். ஒரு எட்டு போய் இந்த ஊறுகாய குடுத்துடுவியா?’

    ‘அதெல்லாம் ஒரு கல்சர். அந்த ஊருக்கெல்லாம் ஒரு கோடி கொடுத்தாலும் நான் போக மாட்டேன்.’

    ‘ஏண்டி, ஜூன்ல போறதுக்கு இப்பவே துணி எடுத்து வைக்கிற பாரேன். உன்னையெல்லாம் திருத்தவே முடியாது.’

    ‘உனக்கென்னப்பா கொடுத்து வச்சவ. நமக்கெல்லாம் எரிஞ்சு தொலையற சென்னையும் மன்னார்குடியும்தான்.’

    ‘லா சாப்பல்ல சங்கீதா, சரவண பவன் எல்லாம் இருக்கு. அங்க போய் சாப்பிடு.’

    ‘மேம், அப்போ ரெட் டாக்ஸி அட்வெர்டைஸ்மெண்ட் பண்ண முடியாதா?’

     

     ஊருக்குக் கிளம்பும் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வழியாக மூட்டை கட்டி முடித்தால் ஊசி வைக்கக்கூட இடமில்லை. ஸ்டாலின் தினமும் ஒரு முறையாவது கூப்பிட்டார்.

    ‘ஜூன் இருபத்தி எட்டாம் தேதி இரவு பாரிஸ் வந்து விடுவோம் ஸ்டாலின். எங்கள் டைரக்டர் அப்போது ஃபின்லாந்தில் இருப்பார். ஜூலை 2ஆம் தேதியிலிருந்துதான் வேலை ஆரம்பம். வேலை எப்படியிருக்கும் என்று தெரியாது. அதனால் மூன்று நாட்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாரிஸை சுற்றிப் பார்த்துவிட வேண்டும்.’

    கிஷோர் எடுத்திருந்த ‘விண்ட் ஆஃப் கேமரூன்’ என்ற படம் சிறந்த குறும்படத்துக்கான விருது வாங்கியிருந்தது. அந்த விருதை வாங்க அவர் ஃபின்லாந்து சென்றிருந்தார்.

    ‘சரி ! எந்த இடமெல்லாம் பார்க்க வேண்டும்?’

    லத்தீன் குவார்ட்டர், சோர்போன், பெர் லாஷேஸ் சிமெடரி, கதாகோம்ப், பாம்பிடூ, மீராபோ பாலம், ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பனி புத்தகக் கடை, லூவ்ர் அருங்காட்சியகம், சென் நதி…பிறகு ஜிவர்னியில் இருக்கும் க்ளாத் மோனேவின் வீடு மற்றும் அவருடைய ஓவியங்கள் இருக்கும் ம்யூசே மார்மத்தன் மோனே.’

    ‘மூன்று நாளில்? இவ்வளவும்!!! சரி! லத்தீன் க்வார்ட்டர் ஐந்தாவது அரோந்தீஸ்மோ….’ என்று எங்கு போகலாம் என அட்டவணை போட ஆரம்பித்தார் ஸ்டாலின். தேவியோ அன்பு மழை பொழிந்தார். ‘நீங்கள் இடம் ஏற்பாடு செய்துவிட்டீர்கள். இல்லையென்றால் இங்கேயே, நம்ம வீட்டிலேயே வந்து தங்கலாம். நான் வேண்டுமானால் உங்களுக்கு அரிசி, பருப்பெல்லாம் கொண்டு வந்து தருகிறேன். நீங்கள் தங்கும் இடத்தில் சமைப்பதென்றால்’ என்றார். நம் ஆட்களின் விருந்தோம்பலுக்கு ஈடு இணை உலகத்தில் இல்லை என்று பெருமிதத்துடன் நினைத்துக் கொண்டேன்.

    அட்டவணையை முடித்தபின் ‘பார்சல் எட்டரைக் கிலோவாம். இப்பத்தான் விற்பனையாளர் சொன்னார்’ என்று சொல்லி அதிர வைத்தார் ஸ்டாலின். பார்சல் என்றால் தம்மாத்தூண்டு சின்னதாக கொண்டுவரச் சொல்வார் என்றுதான் நான் எதிர்பார்த்திருந்தேன்.

    ‘எட்டரைக் கிலோவா? என்ன அப்படி?’

    ‘தேவி இந்தியாவிலிருந்து பைகள் வரவழைத்து இங்கு விற்கிறாள். வெறும் பைகள்தான். நீங்கள் விற்பனையாளருக்கு முப்பதாயிரம் கொடுத்து விடுங்கள். நான் உங்களுக்கு இங்கே யூரோவில் தருகிறேன்.’ பின்னால் அவர் மனைவி அவருக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவ்வளவு பைகள் வைக்க இடம் எங்கே? ஒரு பெட்டி 19 கிலோ இருந்தது. இன்னொன்று 21 கிலோ. இதில் எட்டரையை எங்கு அமுக்க?

    போதாக்குறைக்கு ஷ்யாம் வேறு வசை பாடினார். ‘அதெப்படி அவர்கள் உன்னிடம் இப்படிக் கேட்கலாம்? உள்ளே என்ன வைத்திருப்பாங்கன்னு உனக்கு என்ன தெரியும்? எதற்கு இவ்வளவு பை கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வாய்?’

    நான் ஸ்டாலினிடம் இதைச் சொன்னேன். ‘இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள்.  பாரம் அதிகமானால் நாங்கள் காசு தருகிறோம். என்ன இவ்வளவு பை என்று கேட்டால் பாரிஸில் இருக்கும் நண்பர்களுக்கு எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லுங்கள். இன்னொரு ஐடியாவும் உண்டு. நீங்க வரும் நேரத்தில் துணிகளுக்கு இங்கே சோல்த், அதாவது தள்ளுபடி நிறைய இருக்கும். ஐம்பது பர்சண்ட் கம்மி விலையில் துணிகள் வாங்கலாம். சொல்லப் போனால் நீங்கள் இங்கேயே உங்கள் துணிகளை வாங்கிக்கொள்ளலாம். வெறும் ஐம்பது யூரோவில் கிடைக்கும்’ என்று குயுக்தியாகப் பேசினார்.

    ‘கழிவு இல்லாமலேயே அதை விடக் குறைந்த விலையில் இந்தியாவில் வாங்கலாம்’ என்று சொல்லிய எனக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. தேவி என் முடிவைக் கேட்காமலேயே பை விற்பவரின் குறுஞ்செய்திகளை எனக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

    ‘உங்களால் முடியவில்லையென்றால், உங்களுடன் வரும் குழுவிடம் கேட்டுப் பாருங்கள், எல்லோருக்கும் ஊர் சுற்றிக் காட்டப் போகிறேன் என்று அவர்களிடம் சொல்லுங்கள்’ என்று சொல்ல எனக்கு உச்சகட்ட அதிர்ச்சி.

    ‘சாரி! கொண்டு வர முடியாது’ என்று சொல்லி விட்டேன்.

    ‘ஓகே! நோ ப்ராப்ளம்’ என்று பதில் வந்தது.

    அதற்குப் பிறகு அவ்விடமிருந்து மூச்சு சத்தம்கூட இல்லை. பாரிஸ் சென்று இறங்கிய பிறகும் கூட…

    *

    -தொடரும்

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    gayathri Ram

    Related Posts

    ஹெக்ஸகோன் – 11

    October 2, 2024

    ஹெக்ஸகோன் – 10

    October 2, 2024

    ஹெக்ஸகோன் – 9

    September 18, 2024

    ஹெக்ஸகோன் – 8

    July 18, 2024
    View 1 Comment

    1 Comment

    1. Yuvarajan on June 9, 2024 8:09 pm

      Happy n congrts for nice trip. Njjed the conversation. Bon voyage

      Reply
    Reply To Yuvarajan Cancel Reply

    Archives
    Facebook X (Twitter) Instagram YouTube
    © 2025 Gayathir. Designed by Technobytee.

    Type above and press Enter to search. Press Esc to cancel.