28 – 30 ஜூன் 2023
ஆளாளுக்கு இரண்டிரண்டு பெரிய சூட்கேஸ்களைத் தூக்கிக்கொண்டு நாங்கள் நான்கு பேர் சென்னையிலிருந்து பிரான்ஸுக்கு பயணித்தோம்.
முதலாமவர் எல்லோருக்கும் தெரிந்த, எண்பதுகளில் ஹீரோயினாக நடித்த, இப்போது பல படங்களில் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கும் சிந்துஜா ராஜா. அவர் என் அம்மாவாக நடிக்க இருந்தார். அவருக்கும் எனக்கும் எட்டு வயதுதான் வித்தியாசம். சினிமாவில் இந்த சகஜங்களையெல்லாம் ஏற்று திறமையாக அப்பா வேடங்களில் கலக்கும் ஶ்ரீதர் அருணாச்சலம்தான் இரண்டாவது நபர்.
‘என்ன சார், இவ்வளவு யங்கா இருக்கீங்க, உங்களைவிட பெரிய ஹீரோக்களுக்கு எல்லாம் அப்பாவா நடிக்கிறீங்க’என்று சீண்டினால் தெய்வீக சிரிப்பு சிரித்தார். அவர் வாயிலிருந்து எதுவும் வெளியில் வராதாம். ஒரு வேளை உனக்கே மாமனாரா நடிக்கறேனே என்ற எகத்தாளமாகக் கூட இருக்கலாம். அவருக்கு 65 வயது. மூன்றாமவர் எங்கள் இயக்குனரின் தோழி. அவருக்கு பிரான்ஸ் செல்ல வேண்டும் என்று வெகுநாட்களாக ஆசை. ஆனால் தனியாகச் செல்ல, ஒற்றையாளாக அங்கு மொழி தெரியாத இடத்தில் தங்க பயம். ஆதலால் இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக நினைத்து எங்களுடன் பயணித்தார். பெயர் லாவண்யா. வயது: 52.
ஆக, 50,52, 58, 65வயதாகிய நான்கு பூமர் உருப்படிகளும் ஒரு வழியாக சென்னையிலிருந்து இரண்டு மணி நேரம் டில்லி, அங்கிருந்து எட்டு மணி நேரம் பயணித்து பாரிஸ் வந்து சேர்ந்தோம். நானும் சிந்துஜாவும் சாந்த்ரா என்பவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டோம். சாந்த்ராவுக்கு 75 வயது. அவர் தன் வீட்டின் மாடியில் இருந்த ஒரு ரூமை ஷார்லத் என்ற இளம் பெண்ணுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்தப் பெண் பார்தோ என்ற ஊரைச் சேர்ந்த பெண். சில மாதங்கள் ஒரு நிறுவனத்தில் தொழில்முறைப் பயிற்சி செய்வதற்காக பாரிஸில் வந்து தங்கியிருந்தாள். அதனால் இருவருக்கு மட்டுமே சாந்த்ரா வீட்டில் தங்க இடமிருந்தது. லாவண்யாவை சாந்த்ராவின் அபார்ட்மெண்டின் நேர் கீழே இருந்த குஜராத்தி ஒருவரின் அபார்ட்மெண்டில் ஒரு வாரத்துக்கு அனுமதி பெற்று தங்க வைத்திருந்தார் எங்கள் இயக்குனர் கிஷோர். அந்த குஜராத்திக் குடும்பம் எண்பதுகளிலேயே பாரிஸ் வந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். அங்கே அவர்களுக்கு நான்கு உணவகங்கள் இருக்கின்றன. வட இந்திய உணவு பரிமாறும் உணவகங்கள். ஶ்ரீதருடைய அண்ணன் மகன் பாரிஸில் இருப்பதால் அவர் அங்கு சென்று விட்டார்.
ஷூட்டிங் ஜூலை ஒன்பதாம் தேதி முடிவடைகிறது. நாங்கள் மூன்று பெண்களும் இன்னும் ஒரு பத்து நாட்கள் அதிகப்படியாக இருந்து ஊர் சுற்றிப் பார்க்கவிருந்தோம். ஆனால் மூவரும் வெவ்வேறு திசையில். சிந்துஜா பெல்ஜியம் செல்கிறார் தன் மகனைப் பார்க்க. லாவண்யா தன் தோழியைப் பார்க்க ஸ்ட்ராஸ்பூர்க் போவதாக இருந்தார். நான் நந்தனுடன் ஒன்பதாம் தேதி இரவு கிளம்பி அவர் இருக்கும் ஊரான மோலியான் செல்வதாக ஏற்பாடு. சென்னைக்குக் கிளம்பும் நாளுக்கு முந்தைய நாள் எல்லோரும் நந்தனின் வீட்டில் கூடுவதாக ஏற்பாடு. ஶ்ரீதர் மட்டும் ஷூட்டிங் முடிந்தவுடன் சென்னைக்குக் கிளம்பப் போவதாகச் சொன்னார்.
‘எனக்கு ஊர் சுத்திப் பார்க்கிற ஆசையெல்லாம் இல்லை. நம்மூருக்குப் போய் இட்லி சாப்பிட்டா தான் நிம்மதி’ என்றார்.
பாரிஸ் போய் இறங்கி இரண்டு நாட்கள் ஆயிற்று. ஊர் சுற்றிக் காண்பிக்கிறேன் என்று சொன்ன ஸ்டாலின் ‘வந்திறங்கியாச்சா’ என்று கூட கேட்கவில்லை.
மூன்றாம் நாள் நான் கடுப்பாக அவருக்குக் குறுந்தகவல் அனுப்பினேன்.
‘சாரிங்க, என் வைஃப் கிட்ட நீங்க வரப் போறீங்கன்னு சொல்லியிருக்கவே கூடாது. அதனால்தான் பிரச்சனை… அதக்கொண்டு வா, இதக்கொண்டு வான்னு’ என்றார். கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ ‘இன்னும் ஒரு மணி நேரத்தில் தயாராக இருங்கள். நான் உங்களை ஜிவர்னி (Giverny)கூட்டிக்கொண்டு போகிறேன்’ என்றார்.
சிந்துஜா, நான், லாவண்யா, நாங்கள் மூவரும் அவருடன் ஜிவர்னி என்ற, ஒன்றரை மணி நேர பிரயாணத்தில் இருக்கும் க்ளாத் மோனேவின் (Claude Monet) ஊருக்குச் சென்றோம். போகும் முன்னரே சாந்த்ரா அந்த இடம் மாலை ஆறு மணி வரைதான் திறந்திருக்கும் என்று சொல்ல, அதற்குள் சென்று விடலாம் என்று ஸ்டாலின் நம்பிக்கை கொடுத்தார்.
பாரிஸிலிருந்து ஜிவர்னிக்குப் போகும் பாதையின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. கிராமத்து வீடுகள் அவ்வளவு அழகு. Monopoly houses என்பார் சாந்த்ரா. மோனோபோலி விளையாட்டில் அட்டைகள், தாயத்தோடு சிறு சிறு வீடுகள் கொடுத்திருப்பார்கள். அந்த வீடுகளைப் போலவே இந்த வீடுகள் இருக்கின்றன என்பார்.
நாங்கள் ஐந்தரை மணிக்கு அங்கு இருந்தோம். மூடும் முன்னர் வந்துவிட்டோம் என்று சந்தோஷமாக டிக்கட் வாங்கும் இடத்துக்குச் சென்றால், இனி விட மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். ஆறு மணியாகவில்லையே இன்னும் என்றதற்கு ஆறு மணிக்குப் பூட்டி விடுவோம். அதற்குள் உள்ளே சென்றவர்கள் திரும்ப வேண்டும். அதனால் டிக்கட் ஐந்தரையோடு முடித்து விடுவோம் என்றனர். ஐந்தரை தானே இப்போது என்றால் ஐந்து முப்பத்தைந்து என்று புருவம் தூக்கினார்கள். இந்தியாவிலிருந்து வந்திருக்கிறோம், தயவு பண்ணுங்கள் என்று கெஞ்சினாலும் அவர்கள் மசியவில்லை.
மிகவும் ஏமாற்றமாகப் போயிற்று. அவருடைய அந்த வீட்டின் தோட்டத்தில் ஒரு பெரிய குளம் உண்டு. குளத்தில் பூத்திருக்கும் அல்லி மலர்களை தோட்டத்திலிருக்கும் ஒரு பெஞ்சில் அமர்ந்துதான் வரைவார் என்று படித்திருக்கிறேன். அவர் வரைந்த ‘Water Lilies’ படங்கள் நிறைய. அது மட்டுமல்லாமல் அந்தக் குளத்தின் மேல் இருக்கும் ஒரு சிறிய வளைந்த பாலத்தின் மேல் நின்று அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் மிகவும் புகழ் வாய்ந்தது. அந்தத் தோட்டத்தையும் அந்தக் குளத்தையும் நன்றாகப் பராமரிக்கிறார்கள் என்றும் கேட்டிருந்தேன். சரி, இப்போது பார்க்க முடியவில்லையென்றாலும் மறுபடி இந்தியா செல்வதற்குள் திரும்பி வரலாம் என்று நினைத்து சமாதானப்படுத்திக் கொண்டேன்.
‘சரி! திரும்ப பாரிஸுக்குப் போவோம். இப்போது நேரமிருப்பதால் உங்களை லத்தீன் கார்த்தியருக்கு (Latin Quartier)கூட்டிப் போகிறேன். அப்படியே சோர்போன் யுனிவர்சிட்டியும் (Sorbonne University)பார்க்கலாம்’ என்றார் ஸ்டாலின்.
நேராக முதலில் ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனி புத்தகக் கடைக்குச் சென்றோம். அங்கேயும் கடையை சாத்தும் நேரமாகிவிட்டது. விட மறுத்தனர். உள்ளே சென்று புத்தகங்களைப் பார்க்க மாட்டோம். இந்த புகழ்மிக்க கடையின் உள்ளே ஒரு இரண்டு நிமிடம் இருந்துவிட்டுப் போகிறோம் என்றதும் விட்டனர். உள்ளே பணம் செலுத்துமிடத்தில் ஒரு நிமிடம் நின்றுவிட்டு வந்துவிட்டோம். ஒரே பிரமிப்பாக இருந்தது. வெளியே வந்து எதுவும் பேச முடியவில்லை. பெரிய புகழ் மிக்க எழுத்தாளர்கள் பலர் வந்து சென்ற இடம். வில்லியம் பர்ரோஸ் அவருடைய The Naked Lunch எழுத இங்கிருந்த புத்தகங்களிலிருந்துதான் குறிப்பெடுத்தாராம்.
ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனி புத்தகக் கடையாக மட்டுமில்லாமல் எழுத்துப் பயிற்சி பட்டறை, எழுத்தாளர்கள் சந்திப்பு என்று பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அங்கு ஒரு கஃபேவும் உண்டு.
வளரும் எழுத்தாளர்கள் தங்களைப்பற்றி ஒரு பக்கத்துக்கு எழுதிக் கொடுத்து, கடை நடத்துபவர்களுக்குப் பிடித்திருந்தால் இந்தக் கடையினுள் தங்கலாம். பகலில் புத்தகம் அடுக்கியிருக்கும் நீள பெஞ்சுகள் இரவில் கட்டில்களாக மாறிவிடும். அவ்வளவு புத்தகங்களின் மத்தியில் இரவு தங்கலாம். பக்கத்தில் சென் நதி, நடந்தால் இருபது நமிடத்தில் ஐஃபில் டவர். காலை எட்டு மணிக்கு நாத்ர்தாம் தேவாலயத்தின் மணியோசையைக் கேட்கலாம். எப்பேற்பட்ட கொடுப்பினை! அதற்குக் கைமாறாக செய்ய வேண்டியதெல்லாம் காலையில் கடையைத் திறக்க வேண்டும். இரவில் மூட வேண்டும். பகலில் இரண்டு மணி நேரம் கண்டிப்பாக கடையில் வேலை செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் கடையிலிருந்து எந்தப் புத்தகம் வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். ஊர் சுற்றலாம். ஆறு நபர்கள் ஒரே சமயத்தில் தங்குவதற்கான வசதி இருக்கிறது. 1951ல் இருந்து இன்றுவரை சுமார் 40,000 பேர் தங்கியிருக்கின்றனர். ஒரு வாரத்திலிருந்து ஏழு வருடங்கள் வரை தங்கியவர்கள் கூட உண்டு.
இதற்கு ‘டம்பில்வீட்’ (Tumbleweed) என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆலன் கின்ஸ்பர்க், ஹென்றி மில்லர், ரே ப்ராட்பரி போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் இங்கே டம்பில்வீடாக தங்கியிருந்தவர்கள்தாம்.
அடுத்து சோர்போன் யுனிவர்சிட்டி சென்றோம். சாலையின் இரு மருங்கிலும் நீண்டிருந்த அந்தப் பல்கலைகழகத்தைப் பார்த்தேன். எப்பேர்ப்பட்ட ஆட்கள் படித்த, கற்பித்த இடம்! மேரி க்யூரி, பியர் க்யூரியின் சோதனைக் கூடங்களை வெளியிலிருந்து பார்த்தோம். அப்படி சட்டென்று யாரையும் உள்ளே விடுவதில்லை அவர்கள். ரோட்டிலேயே வேலியில் மேரி, பியரின் படங்கள் அவர்களின் சாதனைகள் என்று ஒட்டியிருந்தார்கள்.
‘என்னங்க இது? உங்கள் ஊரில் எதையுமே ஒழுங்கா பார்க்க விட மாட்டீர்களா? நல்ல வேளை ஏர்போர்ட் வாசலில் இருந்து உங்கள் ஊரை காண்பிக்காமல் போனீர்கள்’ என்று சலித்துக் கொண்டேன்.
‘ஷூட்டிங் ஆரம்பித்தால் அப்புறம் எதையுமே பார்க்க முடியாது. பூட்டறதுக்கு முன்னால கூட்டிட்டு போய் எதையாவது காண்பியுங்க. இப்படி ஒவ்வொரு இடத்தையும் வெளியில் இருந்து பார்ப்பதற்காகவா சென்னையிலிருந்து வந்தோம்’ என்று புலம்பினேன்.
‘அப்படியெல்லாம் இல்லீங்க. நாளைக்கு நைன்டீந்த் அரோந்தீஸ்மோல ரொம்பப் பெரிய கான்செர்ட் இருக்கு, டிக்கெட் ஏற்பாடு பண்ணிடலாம். வரீங்களா?’ என்றார் ஸ்டாலின் திடீரென்று.
கண்கள் மலர, ஐயோ Maître Gims, Dadju, Lara Fabian, Stromae இப்படியான பாடகர்களுடைய நிகழ்ச்சியாக இருந்தால் அட்டகாசமாக இருக்கும். சென்னைக்குப் போய் பீற்றிக் கொள்ளலாம். பிரான்ஸிலேயே Maître Gimsகான்செர்ட்டைக் கேட்டது பற்றி சென்னைத் தோழி ஒருவர் ஒரு நாள் முழுக்கப் பேசிக்கொண்டிருந்தார்.
‘அது ஒரு அற்புதங்க. அந்தந்த ஊரில் அந்தந்த பாடகர்களின் நிகழ்ச்சியின் வைப்ரேஷன்ஸே தனி’ என்றார்.
‘அட்டகாசம் ஸ்டாலின். யாரோட கான்செர்ட்’ என்று சந்தோஷமாகக் கேட்டேன்.
என்னை விசித்திரமாகப் பார்த்தவர், ‘இளையராஜாதுங்க, கார்த்திக், ஸ்வேதா மோஹன், மனோ எல்லாரும் வராங்க’ என்றார்.
- இனி அடுத்த புதன்கிழமை
6 Comments
Its very nice to read a travalogue in novel format. I got inspired with Tumbleweed concept. One day I will be a Tumbleweed in Shakespeer and co bookstore.
Sure
Thanks for teach me about Tumbleweed and Sorbonne University.
Wow ! Very nice and glad that I liked your narrative fiction. Recently I visited Paris as solo travel and I loved all the places that you mentioned in the novel.
I have a friend ( Mami) from Chennai and stayed in Canada for one year . Literally she can’t even go to kitchen on those three days in 2023 and her husband is IT professional. But she will be very happy that she can be free on those three days . I still cannot accept that in Canada. I was born in India into this Naidu community and the same happened to me that three days isolation it is so disgusting that these people and culture still exists. I was born with five brothers and no one even had one question about this practice….
When is your novel available to buy?
Just let you know that Sounds like your guru seems to be Charu and it reflects on you novel.
Cheers,
Sheela
Thanks much. Means a lot. Hope to finish the novel by this year end.
Excellent, lot of new info n rare adorable features of that place. I read it in a moment. “Mad max mind” author. Or Mcube author. 🙂