Close Menu
GayathirGayathir
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    GayathirGayathir
    • முகப்பு
    • என்னைப் பற்றி
    • சிறுகதைகள்
    • நேர்காணல்கள்
    • கட்டுரைகள்
    • மொழியாக்கங்கள்
    • நாவல்
    GayathirGayathir
    Home»நாவல்»ஹெக்ஸகோன்
    நாவல்

    ஹெக்ஸகோன்

    gayathri RamBy gayathri RamMay 22, 2024Updated:March 29, 202531 Comments7 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     1

     இந்த இடத்தை முன்னரே ஏதோ ஒரு ஜென்மத்தில் பார்த்திருக்கிறேன். குடை போன்று விரிந்திருந்த இந்த மரத்தை,இந்த மின்சாரக் கம்பியை, இந்த வீட்டை… இவையெல்லாவற்றையும் பார்த்த ஞாபகம் தேசலாய் வந்தது. கண்டிப்பாக இது என் வீடாக இருந்திருக்க வேண்டும் போன ஜென்மத்தில்.

    பிரான்ஸின் வெர்சாயிலிருந்து(Versailles) லிமோஜ் (Limoges) போகும் வழியில் இருந்தது அந்தக் கிராமம். ஒராதூர்-ஸ்யூர்-க்ளான் (Oradour-Sur-Glane). காரில் வரும்போதே பாழடைந்த கட்டடங்களுடன் இருந்த அந்தக் கிராமம் புலப்பட்டது.

    ‘இதோ வந்தாச்சு,வந்தாச்சு, கடைசியா இங்க வந்துட்டேன்’ என்று மனதில் சொல்வதாய் நினைத்துக்கொண்டு சத்தமாகப் பேசிவிட்டேன். இப்போதெல்லாம் அடிக்கடி இப்படித்தான் மனதில் நினைப்பதை உரக்கப் பேசிவிடுகிறேன்.

    காரை ஓட்டிக்கொண்டிருந்த நந்தன் சாலையிலிருந்து கண்களை எடுக்காமல் மென்மையாகப் புன்னகைத்தார். அவர் மனைவி அருணா தலையாட்டினார். அவர்களுடைய ஆறு வயது மகள் கயல் என்னை ஆர்வமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்.

     மாரி அலியாதி மூன்று வயது, மோனிக் அர்னோ பத்து வயது, மாரி அவ்ரீல் அறுபத்தாறு வயது, ஜான் பாலோ… என்று பதிவு செய்யப்பட்ட மெல்லிய குரல் ஒன்று இறந்தவர்களின் பெயரைச் சொல்லியபடியே நுழைவாயிலில் வரவேற்றது. இரு பக்கங்களிலும் இறந்தவர்களுடைய படங்கள் வரிசையாக சுவரில் ஆணியடித்து மாட்டப்பட்டிருந்தன.

    ‘ஹே பகவான்! இதில் ஒரு நபர் நானாக இருந்திருப்பேனோ?’ என்று கனத்த மனதுடன் துக்கத்துடன் பார்த்துக்கொண்டே நடந்தேன்.

    1944ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் நாள் மதியம் இரண்டு மணி. காலை நேர வேலைகளும் மதிய உணவும் முடிந்து ஒராதூர் கிராமமே அமைதியாக இருந்தது.சனிக்கிழமையானாலும் அன்று பள்ளிக்கூடம் இருந்தது. வீட்டு வேலைகளை முடித்த பெண்களும் கடைகளை அடைத்து சாப்பாட்டுக்காக வந்த ஆண்களும் சற்று இளைப்பாறிக்கொண்டிருந்தார்கள்.

     திடீரென்று பேரிரைச்சல் கேட்டது. SS Waffen ஜெர்மன் படை வண்டிகளில் இரைச்சலுடன் உள்ளே நுழைந்தது. சுமார் 250 சிப்பாய்கள்  வண்டிகளில் இருந்து இறங்கினர். நான்கு நாட்களுக்கு முன்னர்தான் நார்மண்டியைக் கைப்பற்றி இருந்தார்கள். தூங்கி வழிந்து கொண்டிருந்த கிராமம் திடுக்கிட்டு விழித்துக் கொண்டது. மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வந்து பார்க்க ஆரம்பித்தார்கள். கிராமத்தின் அனைத்து மக்களையும் ஊரின் நடுவில் இருந்த வெட்டவெளிக்கு வரச் சொல்லி ஆணையிட்டான் 2nd SS Panzer Division Das Reich படைத்தலைவன் இருபத்தி ஒன்பது வயதான அடால்ப் டைக்மேன். அந்த வயதிற்குரிய இளமையும் பால் வடியும் முகமும், மிடுக்கான தோரணையும்… சத்தியம் செய்தாலும் அவன் மிகக் கொடூரமானவன் என்பதை நல்லுள்ளம் நம்ப மறுக்கும்.

    ‘உங்கள் ஆவணங்களை எடுத்து வாருங்கள், சரி பார்க்க வேண்டும்.’

    கலவரத்துடனேயே அனைவரும் தாங்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆவணங்களை எடுத்துக்கொண்டு வெட்டவெளிக்கு வந்தனர்.

    ‘எதற்காகக் கூப்பிடுகிறார்கள்? ஏதேனும் பிரச்சனையா?’ என்று சற்றுக் கவலையுடன் திரு. பூத்தரோ வினவ, அங்கே வண்டிகளை பழுது பார்க்கும் கடை நடத்திக்கொண்டிருந்த திரு தேசோர்த்தோ ‘Merde! இனி இவர்கள் ராஜ்ஜியம்தான். என்ன செய்யச் சொன்னாலும் மூடிக்கொண்டு செய்யவேண்டியதுதான். வேறு வழியில்லை’ என்று சற்று எரிச்சலுடன் முணுமுணுத்தார்.

    ‘அதுசரி! நாங்கள் இருவரும் இங்கு வியாபாரம் செய்ய வந்தவர்கள். நாங்கள் எங்கே போவோம் ஆவணத்துக்கு?’ என்றார் திரு பியர்.

    ‘நீங்களாவது வியாபாரத்துக்கு வந்தீர்கள். நாங்கள் இந்த வழியாக எங்கள் ஊருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம். எங்களையும் நிறுத்தி விட்டார்கள் படுபாவிகள்.’

    ‘Allez vite! Vite!’ என்று கருப்பு சீருடையில் கையில் ஸ்வஸ்திக் பட்டையை மாட்டிக்கொண்டிருந்த ஜெர்மன் சிப்பாய் அவசரப்படுத்தினான்.

    ‘நான் அடுப்பில் ப்ரெட் வேக வைத்திருக்கிறேன். போய் அணைத்துவிட்டு வரவா?’ என்று பாவமாக சன்னக் குரலில் அனுமதி கேட்டார் திரு. காம்பெய்ன். அந்த ஊரில் பேக்கரி நடத்தி வருபவர்.

    ‘எல்லாம் எங்கள் வீரர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று பதில் வந்தது.

    கிராமம் மொத்தமும் அந்த வெட்டவெளியில் கூடியது. கிட்டத்தட்ட 650 பேர்.

     ‘பதினான்கு வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளும் பெண்களும் இங்கே வாருங்கள்.’

    இதைக் கேட்டதும் ஏதோ சாதாரண சோதனை இல்லையென்று தெரிந்தது. இப்போது அனைவருக்கும் பயம் வந்து விட்டது.

    ‘நம்முடைய பிரெஞ்சு ரெஸிஸ்டன்ஸ் (Resistance) படை ஆங்காங்கே இவர்களுக்குத் தொல்லை கொடுப்பதாகக் கேள்விப்பட்டேன். பழி வாங்க வந்திருக்கிறார்களோ? எனக்கு இது சரியாகப்படவில்லை’ என்று கலவரமானார் லூசியன், முடி திருத்துபவர்.

    ‘பெண்களும் குழந்தைகளும் இவருடன் சென் மார்தன் (Saint Martin) சர்ச்சுக்கு செல்லுங்கள்’ என்ற ஆணை வந்தது.

    பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த தேவாலயம் ஊருக்கு நடுவில் அழகாக வீற்றிருந்தது. பள்ளிக் குழந்தைகள் வரிசையாக ஆசிரியைகளோடு சென்றனர். குழந்தைகளுடன் இருந்த பெண்கள் தங்கள் குழந்தைகளை அணைத்துக் கொண்டு கணவர்களை திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டு கலக்கமாக நடை போட்டனர்.

    ஆண்களை நான்கு குழுவாகப் பிரித்து வெவ்வேறு திறந்தவெளிகளுக்குக் கூட்டிச் சென்றார்கள்.

    ‘நம்மைக் கொல்லப் போகிறார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டேன்’ என்று மற்றவர்களிடம் சொன்னார் ஜெர்மன் மொழி தெரிந்த ஒருவர்.

    அதைக் கேட்ட பூத்தரோ மெல்ல நழுவி வழியில் இருந்த ஒரு மரத்தின் பின் மறைந்துகொண்டார்.

    நான்கு குழுக்களையும் வெவ்வேறு இடங்களில் வரிசையாக நிற்க வைத்தார்கள். டெய்லர் சாந்த்ரோ இருந்த குழுவில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இருந்திருப்பார்கள். சாந்த்ரோ தனக்கு எதிரில் நிற்கும் ஜெர்மானியனைப் பார்க்க விருப்பமில்லாமல் தரையைப் பார்த்துக்கொண்டு நின்றார். அப்படியும் எதிரில் நிற்பவனுடைய பூட்ஸும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த கருப்பு நிறக் கால்சராயும் வசீகரித்தன. கொடூரன்களுக்கு இவ்வளவு நயநாகரிகமான உடைகளைத் தயாரித்த, தனக்கு மிகவும் பிடித்த ஹ்யூகோ பாஸ் நிறுவனத்தின்மேல் கோபம் பெருக்கெடுத்தது. இதிலிருந்து உயிருடன் மீண்டால் இனி ஜென்மத்துக்கும் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் கனவைத் தூக்கி எறிவதாகவும், அதன் பொருட்களையும் உபயோகப்படுத்தவே கூடாது என்றும் தீர்மானித்தார்.

    ‘இந்தக் கறுப்பு உடை அணிந்த நாஜிகள்தான் இருப்பதிலேயே ஆகக் கொடூரமானவர்கள்’ என்று ஜான் அன்றொரு நாள் டிராமில் வந்துகொண்டிருக்கும்போது சொன்னது ஞாபகம் வந்தது.

    ஒரு சிப்பாய் ஜெர்மனில் ஏதோ கத்த, துப்பாக்கிகள் முழங்கின. சாந்த்ரோ சட்டென கீழே விழுந்தார். என்னவாயிற்று என்று சுதாரிக்கும்முன் தன் மேல் சிலர் விழுவதை உணர்ந்தார். முட்டிக்கு கீழ் கால் கடுமையாக எரிந்தது. ‘காலில் சுட்டுவிட்டான் வேசி மகன்’ என்று மேலே விழுந்த ஒருவர் முனகினார். மெல்ல எல்லோரும் விலக முயற்சிக்கும்போது தங்கள் மேல் நெடியான ஒரு திரவம் ஊற்றப்பட்டதை உணர்ந்தனர். தீக்கங்குகள் சட்டென மேலே படர்ந்தன. ஒருவரிடமிருந்தும் சத்தமில்லை. சாந்த்ரோ, நின்றிருந்த சிப்பாயின் கால்சராயின் முடிவில் பிரிந்திருந்த ஒரு நூல் இழையைப் பார்த்துக்கொண்டே செத்துப் போனார்.

    இருநூற்று நாற்பது பெண்களும் இருநூற்று ஐந்து குழந்தைகளும் சென் மார்தன் தேவாலயத்தில்அடைக்கப்பட்டிருந்தனர். குழந்தைகள் வீறென்று அலறிக் கொண்டிருந்தன. அனைவரின் முகத்திலும் பயம் தெளிவாகத் தெரிந்தது. எம்மாவும் ரூஃபான்ஷும் தேவாலயத்தின் ஒரு மூலையில் ஜன்னலுக்குக் கீழே நின்றுகொண்டு செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் கதவைத் திறக்குமாறு கத்திக்கொண்டும், சிலர் சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஏசுவின் முன் மண்டியிட்டும் கண்ணீருடன் ஜெபித்துக் கொண்டும் இருந்தனர்.

    திடீரென ஒரு பெரும் சத்தம் கேட்க அந்த தேவாலயத்தை நெருப்பும் புகையும் சூழ்ந்தது. எம்மாவும், ரூஃபான்ஷும் மற்றும் குழந்தைகளை மார்போடு அணைத்துக் கொண்ட சில பெண்களும் ஜன்னல் வழியாக எகிறிக் குதித்தனர். குதிக்கும் முன்னரே துப்பாக்கி குண்டுகள் அவர்களைக் குறி வைத்து வர ஆரம்பித்தன. எம்மாவின் தலை சிதறி பக்கத்தில் கிடக்க, குழந்தையை மார்பில் அணைத்துக் கொண்டிருந்த தாயும் குழந்தையும் கைக்கெட்டும் தூரத்தில் உயிரற்று அலங்கோலமாகச் சிதறிக் கிடந்தனர். மேலே ரத்தமும் சதைத்துணுக்குகளும் பரவியிருக்க, பயத்தில் உறைந்துபோய் தேவாலயத்தின் வெளியே இருந்த கல் தரையில் அசையாமல் கிடந்தார் ரூஃபான்ஷ்.

    சிப்பாய்கள் ஒவ்வொரு வீடாகப் புகுந்து வீட்டில் ஒளிந்திருந்தவர்களைக் கொன்றதையும், வீடுகளுக்குத் தீ வைத்ததையும் அவரால் கேட்க முடிந்தது. வெற்றிக் களிப்போடு சிப்பாய்கள் ஒவ்வொருவராக வண்டியில் கிளம்பிச் சென்ற பிறகு, ஊர் நிசப்தமானதும் மெல்ல எழுந்து சுற்றிலும் பார்த்தார் ரூஃபான்ஷ்.

    அடிவயிற்றிலிருந்து துக்கமும் ஆங்காரமும் பீறிட்டு வந்தாலும் மூச்சு விடக்கூட பயமாக இருந்தது அவருக்கு.

     

    மொத்தம் 643 பேரைக் கொன்றிருந்தார்கள் நாஜிப் படையினர்.

    ‘என்ன அந்த நாளுக்கே போயிட்டீங்களா?’ என்று சன்னமாகக் கேட்டார் நந்தன்.

    தேவாலயத்தின் வாசலில் படர்ந்திருந்த பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்துகொண்டு ‘எனக்கு இன்னும் இந்த மயான அமைதியில் கூக்குரல்கள் கேட்கின்றன நந்தன்’ என்றேன்.

    அப்போதைய அதிபரான சார்ல் த கால்  ஒராதூரை திரும்பக் கட்ட வேண்டாம் என்று சொல்லி விட்டார். இது ஒரு நினைவுச் சின்னமாக அப்படியே இருக்கட்டும் என்றதனால் அந்தக் கிராமம் 1944 ஜூன் 10ஆம் நாளிலேயே உறைந்து போயிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், தையல் மெஷின்கள், பாழடைந்த கிணறு, எரிந்து போனவர்களின் சில எலும்புகள் என எல்லாமே அப்படியே இருந்தன.

    Ici fut retrouve le corps de M Poutaraud (பூத்தரோவின் உடல் இங்கேதான் கிடைத்தது) என்ற அறிவிப்புடன் ஒரு மரத்தின் கீழ் இருந்த பலகையின் அருகில் சற்று உட்கார்ந்தேன். பக்கத்தில் அருணாவும் வந்து உட்கார்ந்தார். அவர் முகம் சலனமற்று இருந்தது.

    ‘எதற்காக இவர் மட்டும் தனியாக இங்கே கிடந்திருக்கிறார்? ஒளிந்துகொள்ள வந்திருப்பாரோ? எப்படி இவரைக் கண்டுபிடித்தார்கள்? எப்படிக் கொன்றார்கள்? தனியாக வந்ததற்கு என்னென்ன கொடுமையெல்லாம்  செய்திருப்பார்களோ?’ என்று அரற்றினேன்.

    ‘அதைவிடக் கொடுமை ஒன்று இங்கே நடந்திருக்கிறது. நீங்கள் அரற்றுவதைப் பார்த்தால் சொல்லலாமா வேண்டாமா என்று தெரியவில்லை’ என்று நந்தன் தயங்கினார். என் முகத்தைப் பார்த்தவுடன் விஷயத்தைச் சொல்லாமல்  நான் விடமாட்டேன் என்று தோன்றியிருக்கக் கூடும். அதனால் தொடர்ந்தார்,

    ‘அதாவது பிரெஞ்சு ரெஸிஸ்டன்ஸ் குழு காப்பாற்றிய பிரிட்டிஷ் விமானி ஒருவர் இந்த சம்பவம் நடந்து ஜெர்மன் படைகள் கிளம்பிப் போன சில மணி நேரத்தில் சைக்கிளில் இந்த வழியாக வந்திருக்கிறார். அப்போது ஒரு கிராமமே தீக்கிரையாகியிருப்பதைப் பார்த்துக் கலங்கியிருக்கிறார். மட்டுமல்லாமல் ஒரு சின்னக் குழந்தையை சிலுவையில் அறைந்திருப்பதையும் கண்டு நடுநடுங்கியிருக்கிறார். அவர் கொடுத்த வாக்குமூலத்தை மக்களின் நலன் கருதி ரகசியமாக வைத்திருந்த ஆங்கில அரசாங்கம் 2011ல் அவர் பேரன் கேட்டுக் கொண்டதனால் பொதுவெளியில் வெளியிட்டது’ என்று  தலைகுனிந்தபடி, என் பேயறைந்த முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் சொன்னார் நந்தன். பக்கத்திலிருந்த அருணா எதுவுமே சம்பந்தமில்லாததுபோல் அமர்ந்திருந்தார். எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாத அவரின் நிலையைக் கண்டு வியந்தேன்.

    மெதுவாக எழுந்து நடந்தேன். மறுபடி தேவாலயத்தின் அருகில் சென்றேன்.

    ‘நந்தன், நான் இந்த வீட்டில் வாழ்ந்திருக்கிறேன். இந்த மரத்தினடியில் உட்கார்ந்திருக்கிறேன். இதோ இந்த பெஞ்சில் உட்கார்ந்து தேவாலயத்தினுள் போகும் வரும் மனிதர்களை வைன் அருந்திக்கொண்டே பார்த்திருக்கிறேன். இது என் ஊர். இந்த வீட்டின் ஒரு கல் எனக்கு வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே கருகிப் போயிருந்த ஒரு கல்லைப் பெயர்த்து என் முதுகுப் பையினுள் பத்திரப்படுத்திக் கொண்டேன். நந்தனோ அருணாவோ என்னை பைத்தியமென்று எண்ணாமலிருந்ததே ஆறுதலாக இருந்தது. நந்தன் ஒரு படி மேலே போய்,

    ‘இந்தாருங்கள், உங்கள் ஊரின் மின்சாரக் கம்பி. கொஞ்சம் கம்பியை உங்களுக்காக உடைத்தேன்’ என்று கொடுத்தார்.

    அருணாவைப் பார்த்தேன். அவர் மெல்ல புன்னகைத்தார். ‘நேரமாகிவிட்டது. வீட்டுக்குப் போக மூன்று மணி நேரமாகும். கிளம்பலாமா?’ என்றார்.

    எப்படி அருணாவால் ஒரு முற்றும் துறந்த ஞானியின் மனநிலையில் இருக்க முடிகிறது என்று நாற்பதாவது முறையாக வியந்தேன்.

    ஒராதூருக்கு பிரியாவிடை கொடுத்து காரில் ஏறினேன்.

    காரின் முன் சீட்டில் உட்கார்ந்துகொண்டே ‘இன்னொரு விடயம் தெரியுமா உங்களுக்கு?’ என்றார் இதுவரை எதுவும் பேசாத அருணா.

    ‘ஒராதூர் ஸ்யூர் வாய்ர் (Oradour-Sur-Vayres) என்ற ஒரு கிராமம் இங்கிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. 1944ஆம் ஆண்டு அங்கே ஒரு நாஜியை பிரெஞ்சு ரெஸிஸ்டென்ஸ் குழு பிடித்து விட்டது. அந்த மக்களுக்குப் பாடம் புகட்டவேண்டும் என்று நினைத்த அடால்ப் டைக்மேன், பெயர் குழப்பத்தினால் ஒன்றும் அறியாத ஒராதூர் ஸ்யூர் க்ளானுக்கு (Oradour-Sur-Glane) வந்துவிட்டான். இவர்கள் செய்த பஞ்சமா பாதகம். அவர்கள் செய்த நல்லூழ்’ என்றார் மிகச் சாதாரணமாக.

    ‘எப்படி ஒரு உணர்ச்சியுமில்லாமல் உங்களால் இப்படி குண்டுக்கல்லைப்போல் இருக்க முடிகிறது? இந்தக் கொடுமைகள் என் உணர்ச்சிப் பிரவாகத்தை தீவிரப்படுத்துகிறதே? நந்தனின் கண்கள்கூட சில சமயம் பனித்ததுபோல் இருந்தது’ என்று கடைசியாக வாய்விட்டு கேட்டே விட்டேன்.

     என்னை ஒரு விரக்தியான புன்னகையுடன் பார்த்த அருணா ‘இங்கேயாவது இந்த அராஜகத்துக்கான நினைவுச் சின்னம் இருக்கிறது. ஈழத்தில் ஐம்பதாயிரத்தும் மேல் பாவப்பட்ட மக்களைக் கொன்று குவித்தார்களே, உறவினர், நண்பர்கள் பலரை இழந்து ஊர் பெயர் தெரியாத நாட்டில் அடைக்கலம் அடைந்திருக்கிறோமே, எங்களுக்கு என்ன நினைவுச் சின்னம் இருக்கிறது? முள்ளிவாய்க்கால் ஞாபகம் இருக்கிறதா? நாங்கள் வந்த சுவடும் மறைந்த சுவடும் ஒருவருக்கும் தெரியப்போவதில்லை’ என்றார் அப்போதும் சலனமில்லாமல் என் கண்களை உற்று நோக்கியபடி…

    -தொடரும்

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    gayathri Ram

    Related Posts

    ஹெக்ஸகோன் – 11

    October 2, 2024

    ஹெக்ஸகோன் – 10

    October 2, 2024

    ஹெக்ஸகோன் – 9

    September 18, 2024

    ஹெக்ஸகோன் – 8

    July 18, 2024
    View 31 Comments

    31 Comments

    1. Muthuselvan on May 22, 2024 2:24 pm

      முதல் அத்தியாயம் சிறப்பாக வந்துள்ளது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நிலவரத்தை பிரான்ஸ் பின்னணியில் விரியும் புனைவாக பரிணமிக்கும் பாங்கு வாசிப்புக்கு நெருக்கத்தை உண்டு பண்ணுகிறது.

      Reply
      • Gayathri on May 23, 2024 3:53 pm

        நன்றி

        Reply
    2. Kesananthan Thangarajah on May 22, 2024 2:37 pm

      அருமை, அவசரமாக கடக்காமல் அந்த கிராமத்தை எழுத்தில் இன்னும் கீறுங்கள். அழகான நடை தொடருங்கள்.

      Reply
      • Gayathri on May 23, 2024 3:53 pm

        நன்றி

        Reply
    3. நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு on May 22, 2024 2:57 pm

      நாஜி படைகளின் கொடூரச்செயலை கண்முன்னே கொண்டுவந்துவிட்டது உங்கள் எழுத்து. சுவாரஸ்யமான நடை. அருமையாக இருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலையை இறுதியில் நினைவுபடுத்தி கண்கலங்க வைத்துவிட்டீர்கள். நல்லதொரு நாவலாக உருவாக வாழ்த்துகள்

      Reply
      • Gayathri on May 23, 2024 3:52 pm

        நன்றி

        Reply
    4. Muthukamatchi Ramasubrsmanian on May 22, 2024 3:26 pm

      தொடர் தொடர நல் வாழ்த்துகள்.

      Reply
      • Gayathri on May 23, 2024 3:52 pm

        thanks

        Reply
    5. Rishi on May 22, 2024 6:31 pm

      Gayathri, terrific! keep writing!

      Reply
      • Gayathri on May 23, 2024 3:52 pm

        thanks

        Reply
    6. ஆர்.பாலஜோதி on May 22, 2024 7:09 pm

      திறக்கப்படாத வரலாற்றின் பக்கங்கள் திறக்கப்பட்டிருக்கிறது.
      பெருவலியான அனுபவத்துக்கு இந்நாவல் இழுத்துச்செல்ல இருப்பதை உணர்கிறேன்.

      பூ தொடுப்பதைப் போலவும் மொழிபெயர்ப்பு சாயல் கொண்டதாகவும் இருக்கிறது மொழிநடை.

      Reply
      • Gayathri on May 23, 2024 3:52 pm

        thanks

        Reply
    7. பாலஜோதி.ஆர் on May 22, 2024 7:11 pm

      திறக்கப்படாத வரலாற்றின் பக்கங்கள் திறக்கப்பட்டிருக்கிறது.
      பெருவலியான அனுபவத்துக்கு இந்நாவல் இழுத்துச்செல்ல இருப்பதை உணர்கிறேன்.

      பூ தொடுப்பதைப் போலவும் மொழிபெயர்ப்பு சாயல் கொண்டதாகவும் இருக்கிறது மொழிநடை.

      Reply
      • Gayathri on May 23, 2024 3:11 pm

        Thanks

        Reply
    8. Peraveen on May 23, 2024 2:23 pm

      Good…

      Reply
    9. கு. பத்மநாபன் on May 23, 2024 7:10 pm

      வாழ்த்துக்கள். அடுத்த அத்தியாயத்துக்காக க்காத்திருக்கிறேன்.

      Reply
      • Gayathri on May 28, 2024 11:37 am

        Thanks

        Reply
    10. Saravanan Sivanraja on May 23, 2024 9:42 pm

      ஒரு பயண நூல் நாவலாக மாறும்போது எத்தனால் அற்புத அனுபவங்களை பெறமுடிகிறது. எத்தனை வலிகள் , எத்தனை நினைவுகள். அன்புள்ள சகோதரி காயத்ரி அவர்களே நான் உங்களின் புதிய வாசகன். மேலும் வரும் தொடர்களுக்கு ஆவலோடு உள்ளேன்.

      Reply
      • Gayathri on May 28, 2024 11:37 am

        Thanks

        Reply
    11. Srikrishnan on May 23, 2024 10:07 pm

      காயத்ரி,
      அருமையான களம், சரளமான நடை, அடுத்தது என்ன என்று ஆர்வத்தைத் தூண்டும் கதை , சிறிது சரித்திரம் , சற்றே மர்மம் ,… நல்ல ஆரம்பம் ।

      தமிழ் வாயில் நுழையாத பெயர்கள் கூட தடையாக இல்லை !
      வாழ்த்துகள் !!

      Reply
      • Gayathri on May 28, 2024 11:37 am

        Thanks

        Reply
    12. ja. Deepa on May 24, 2024 5:59 pm

      அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு காத்திருக்கிறேன்

      Reply
    13. Uma on May 25, 2024 3:48 pm

      தற்போதைய ஈழ சூழல் நினைவுகளை கூட ஞாபக படுத்த முடியாதபடி தமிழ்மக்களை வஞ்சிக்கும் நிலையை செய்திகள் மூலம் அறியமுடியம்.இந்நிலையில் தங்கள் நாவல் மற்றொரு வரலாற்றுப்பதிவு.

      Reply
    14. Vishone Gopala Krishnan on May 28, 2024 11:02 pm

      Lovely write up . Best wishes

      Reply
    15. ராஜாமணிகண்டன் on June 1, 2024 11:42 am

      வார்த்தைகளாக வாசிக்கும்போதே மனம் நடுங்குகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்கும் மன உறுதி வாய்க்குமா எனத்தெரியவில்லை.

      Reply
      • Gayathri on June 2, 2024 8:25 am

        Thanks for reading

        Reply
    16. Latha on June 7, 2024 6:50 am

      மொழி பெயர்ப்பு போல் இருக்கு.
      சுவாரஸ்யம்.

      Reply
    17. Yuvarajan on June 7, 2024 6:31 pm

      G eve mam, terrible n tragic, painful. first time readings, France backdrop in a Tamil novel. Madmax style. Huge thumbs for the grt start … thnks n love for my university for the link n his intro in his blog.

      Reply
      • Gayathri on June 9, 2024 6:44 pm

        Thanks

        Reply
    18. பாரதிக்குமார் on June 21, 2024 7:40 am

      துயர வரலாற்றின் ஈரமிக்க பதிவு .. சாந்த்ரோ, நின்றிருந்த சிப்பாயின் கால்சராயின் முடிவில் பிரிந்திருந்த ஒரு நூல் இழையைப் பார்த்துக் கொண்டே செத்துப் போனார் என்கிற வரிகளை வாசிக்கும்போது எதிர்பாராத கொடிய மரணத்தின் கடைசி நொடி எப்படி இலக்கற்றதான தருணத்தை கையளிக்கிறது என்பதை உணர்த்துகிறது . ஒராதூர் மாதிரியான் போர் நடந்த ஊர் அப்படியே விடப்பட வேண்டும் என்கிற நியதி இருந்தால் உலகின் பெரும்பாலான ஊர்கள் இப்படி பாதி மயானமாகத்தான் இருக்கும் என்று நினைக்கும்போது பகீர் என்கிறது. இறுதி வரிகளில் முள்ளிவாய்க்காலை நினைவுப்படுத்தி கலங்கடித்து விட்டீர்கள் .. நாவல் கனக்க வைக்கிறது ..
      பாரதிக்குமார் நெய்வேலி

      Reply
      • Gayathri on June 21, 2024 2:21 pm

        நன்றி

        Reply
    Reply To Muthuselvan Cancel Reply

    Archives
    Facebook X (Twitter) Instagram YouTube
    © 2025 Gayathir. Designed by Technobytee.

    Type above and press Enter to search. Press Esc to cancel.